
வாட்ஸ்ஆப் மூலம் பாஜக மக்கள் மத்தியில் பொய்களை பரப்பி வருவதாகவும், சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தியதற்கான ஆதாரத்தை கேட்பதில் என்ன தவறு உள்ளது என தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பேசியுள்ளார்.
ஐதராபாத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் சந்திரசேகர ராவ் கூறியதாவது-
விவசாயிகள் விரும்பாத வேளாண் புதிய சட்டங்களை எதற்காக பாஜக கொண்டு வந்தது? போராட்டத்தின்போது பலர் உயிரிழந்தனர்.
சட்டங்களை திரும்பப் பெற்ற பின்னர், பாஜக ஏன் விவசாயிகளிடத்தில் மன்னிப்பு கேட்கவில்லை?
வாட்ஸ்ஆப் மூலம் பொய்களை பாஜக பரப்புகிறது. மத சார்ந்த நம்பிக்கைகள் மற்றொரு தரப்பினருக்கு எதிராக நாடு முழுவதும் தூண்டப்படுகிறது.
இவை எல்லாவற்றையும் புறம் தள்ளிவிட்டு, நாம் முன்னோக்கி செல்ல வேண்டும்
சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தியதற்கான ஆதாரங்களை ராகுல் காந்தி கேட்கிறார். அதில் என்ன தவறு இருக்கிறது? நானும் கூட அதைக் கேட்கிறேன். தாக்குதல் நடத்தியதற்கான ஆதாரங்கள் எங்கே?
ராகுல் காந்தியின் தந்தை கொல்லப்பட்டார். பாட்டி கொல்லப்பட்டார். அவருடைய தாத்தா நேரு நாட்டிற்காக சிறை சென்றார். அசாம் பாஜக முதல்வரால் இதுபோன்று சொல்லிக் கொள்வதற்கு ஏதேனும் இருக்கிறதா?
