
உக்ரைனில் சிக்கியிருந்த 240 இந்தியர்களை மீட்டு, 3வது விமானம் இன்று காலை இந்தியா திரும்பியுள்ளது.
ரொமேனியா தலைநகர் புகாரெஸ்டில் இருந்து 250 இந்தியர்களுடன் 2வது விமானம் இந்தியா திரும்பிய அடுத்த சில மணி நேரங்களில் 3வது விமானமும் இந்தியா வந்துள்ளது.
டெல்லி வந்த 3வது மீட்பு விமானத்தை மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜியோதிராதித்ய சிந்தியா வரவேற்றார்.
உக்ரைன் நாட்டை ரஷ்யா தாக்கி வரும் நிலையில் அங்குள்ள வெளிநாட்டவர்களை மீட்கும் பணியில் அந்தந்த நாடுகளின் தூதரகங்கள் ஈடுபட்டுள்ளன.
இந்தியாவை சேர்ந்த சுமார் 25 ஆயிரம்பேர் அங்கு கல்வி மற்றும் பணி நிமித்தம் காரணமாக உக்ரைனில் தங்கியுள்ளனர்.
அங்கு என்ன வேண்டுமானாலும் ஏற்படக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதால், உக்ரைனில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் தங்களது சொந்த நாடுகளுக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர்.

இதற்கிடையே, பாதுகாப்பு காரணமாக உக்ரைனின் வான்வெளி மூடப்பட்டுள்ளது. இதையடுத்து, உக்ரைனின் அண்டை நாட்டில் இருந்து வான்வழியே மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
நேற்றிலிருந்து இந்தியா மீட்பு நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. தற்போது வரை மொத்தம் 3 விமானங்களில் சுமார் 800 இந்தியர்கள் இந்தியா திரும்பியுள்ளனர்.
உக்ரைனில் உள்ள இந்தியர்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் அதன் எல்லைப் பகுதிக்கு செல்லக் கூடாது என்று இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.
உக்ரைன் – ரொமேனியா, உக்ரைன் – ஹங்கேரி எல்லைக்கு வந்த இந்தியர்கள் புக்காரெஸ்ட் மற்றும் புடாபெஸ்ட் நகருக்கு சாலை மார்க்கமாக கொண்டு செல்லப்படுகின்றனர். பின்னர் அங்கிருந்து விமானம் மூலமாக இந்தியா கொண்டு வரப்படுகின்றனர்
