
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள அவரது வாழ்க்கை சுயசரிதையான ‘உங்களில் ஒருவன்’ (முதல் பாகம்) நூல் வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று நடைபெற்றது.
இந்த விழாவில் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார்
கோபாலபுரம் இல்லம் போன்று வடிவமைக்கப்பட்ட வீட்டில் இருந்து புத்தகத்தை எடுத்து ராகுல் காந்தி வெளியிட, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நூலைப் பெற்றுக்கொண்டார்.
இந்த சுயசரிதை நூலில், மு.க.ஸ்டாலின் அவரது பள்ளி- கல்லூரி காலங்கள், இளமை பருவம், ஆரம்ப நிலை அரசியல் பங்களிப்பு, திருமண வாழ்க்கை, மிசா போராட்டம் என 1976ஆம் ஆண்டு வரை உள்ள 23 ஆண்டு கால நினைவுகளை பதிவு செய்துள்ளார்.
பூம்புகார் பதிப்பகம்‘ இந்த நுலை வெளிக்கொண்டுவந்துள்ளது.
இந்த விழாவில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ் ஆகியோருக்கு மேடையில் இடமளிக்கப்பட்டிருந்தது.
இந்தநிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, ‘இந்த புத்தக வெளியீட்டு விழால் பங்கேற்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வது குறித்து எனது அம்மாவிடம் பேசும்போது, அவர் மு.க.ஸ்டாலினுக்கு நாளை பிறந்தநாள் என்று என்னிடம் தெரிவித்தார்.
நான் அவரிடம் எனக்குத் தெரியும் என்று கூறினேன். அதன்பிறகு, அவரிடம் மு.க.ஸ்டாலின் வயது என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டேன்.
அதற்கு அவர் எத்தனை வயது என்று கேட்டார். நான், 69 என்று கூறினேன். அதனை அவர் நம்ப மறுத்தார். ஸ்டாலினுக்கு எத்தனை வயது இருக்கும் என்று நினைக்கிறேன் என்று கேட்டேன்.
அவருக்கு 58 அல்லது 60 என்று கூறினார். உடனே, கூகுள் செய்து ஸ்டாலினின் வயதைக் காட்டினேன். அப்போதுதான் அவர் நம்பினார்.
இந்தப் புத்தகத்தில் ஸ்டாலின் இளமையாக இருப்பது குறித்து எழுதியுள்ளாரா என்று தெரியவில்லை.
ஆனால், தான் இளமையாக இருப்பது குறித்து ஸ்டாலின் ஒரு புத்தகம் எழுத வேண்டும்’ என்று பேசினார்.
அவருடைய பேச்சைக் கேட்டு மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட மேடையில் இருந்தவர்களும், அரங்கில் இருந்தவர்களும் சத்தமாக சிரிக்க அரங்கே சிரிப்பலையில் அதிர்ந்தது

