
முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய உங்களின் ஒருவன் புத்தகத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டார்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, அண்ணன் மு.க ஸ்டாலின் அவர்களை பாராட்ட விரும்புகிறேன்.
இதுபோன்ற அற்புதமான புத்தகத்தை அளித்துள்ளார். அவருடைய வாழ்க்கை மிக நீண்ட போராட்டத்தைக் கொண்டது.
மிக நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இந்த இடத்திற்கு ஸ்டாலின் வந்துள்ளார்.
‘நான் நாடாளுமன்றத்தைவிட்டு வெளியே வரும் போது ஒரு செய்தியாளர் உங்களுடைய பேச்சில் தமிழ்நாடு என்று ஏன் நிறைய முறை குறிப்பிட்டீர்கள்.
அப்போதுதான் நான் உணர்ந்தேன் அடிக்கடி நான் தமிழ்நாடு என்று குறிப்பிட்டுள்ளதை. என்னை அறியாமல் நானும் தமிழன்தான் என்று குறிப்பிட்டேன்.
பிறகு, காரில் இருக்கும்போது யோசித்தேன். ஏன் தமிழன் என்று கூறினேன் என்று யோசித்தேன்.
என்னுடைய வாயிலிருந்து ஏன் அந்த வார்த்தை வந்தது என்று யோசித்தேன். நீ தமிழ்நாட்டில் பிறக்கவில்லை. நீ தமிழ் மொழி பேசவில்லை.
தமிழ் மொழி 3,000 ஆண்டுகள் பழமையான நாகரீகம் கொண்ட மொழி. பின்னர், ஏன் தமிழன் என்று குறிப்பிட்டேன் என்று யோசித்தேன்.
பிறகு யோசித்து பார்த்தேன். நான் தமிழன் என்று கூறமுடியும். ஏனென்றால் என்னுடைய ரத்தம் இந்த மண்ணில் கலந்துள்ளது.
தந்தையை இழப்பது மிகவும் துயரமான நிகழ்வு. நான் இந்த மாநிலத்துக்கு வரும்போது பணிவாக வருகிறேன்.
உங்களுடைய பாரம்பரியம், உங்களுடைய வரலாறு நான் தலை வணங்கிவருகிறேன். உங்களுடைய எல்லா தேவைகளையும் உணர்ந்துகொள்ளவேண்டும் என்ற விருப்பத்துடன் வருகிறேன்.
நான் என்னுடைய நாடாளுமன்ற உரையில் பேசும்போது, இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்று பேசினேன். மாநிலம் என்று குறிப்பிடுகிறோம் என்றால் மாநிலம் என்பது எங்கிருந்து வருகிறது. அது மண்ணிலிருந்து வருகிறது.
மண் மக்களிடமிருந்து வருகிறது. மக்களிடமிருந்து குரல் வருகிறது. அந்தக் குரலிலிருந்து மொழி வருகிறது. மொழியிலிருந்து கலாச்சாரம் வருகிறது. கலாச்சாரத்திலிருந்து வரலாறு வருகிறது. வரலாற்றிலிருந்து மாநிலம் வருகிறது. அதனால், தான் இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம்.
மாநிலங்கள் ஒருங்கிணைந்துதான் இந்தியா என்பது உருவாகிறது. எழுத்துகள் ஒன்றிணைந்து சொல்லாக வருகிறது. வார்த்தைகள் ஒன்றிணைந்து வாக்கியமாகிறது.

வாக்கியங்கள் ஒன்றிணைந்து கவிதையாகிறது. நீ எழுத்தை மதிக்கவில்லையென்றால், வார்த்தையை மதிக்கவில்லையென்றால், வாக்கியங்களை மதிக்கவில்லையென்றால் நீ கவிதையை மதிக்க முடியாது.
பிரதமர் இங்கு வரும்போது தமிழ்நாட்டு மக்களின் மீது ஏதாவதொரு சிந்தனையை திணிக்க முயல்கிறார்.
அவர், தமிழ்நாடு என்பதை புரிந்துகொள்ள மறுக்கிறார். தமிழ்நாடு என்பது வெறும் வார்த்தையல்ல. தமிழ்நாடு என்பது 3,000 வருட பாரம்பரியம் கொண்டது.
தமிழ்நாடு என்பது நிலம், தமிழ்நாடு என்பது மக்கள், தமிழ்நாடு என்பது மொழி. அவர் இந்த மாநிலத்தை அவமதிக்கிறார். அதன்மூலம் இந்த நாட்டை அவமதிக்கிறார்.
தமிழக மக்களின் வார்த்தையை புறம் தள்ளிவிட்டு எந்த அடிப்படையில் உங்களை மதிக்கிறேன் என்று கூறுகிறார்.
தமிழ்நாட்டு மக்கள் தொடர்ச்சியாக நீட் தேர்வு குறித்து பேசிவேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
ஆனால், நீங்கள் மறுக்கிறீர்கள். ஜி.எஸ்.டி என்பது நியாயமற்றது. அது எங்களுக்கு எதிரானது என்று கூறுவதை நீங்கள் கேட்கவில்லை.
நீங்கள் தமிழ்நாட்டின் வரலாற்றைப் புரிந்துகொள்ளாமல் இந்தியாவின் வரலாற்றை புரிந்துகொள்ள முடியாது என்று நாடாளுமன்றத்தில் பேசினேன்.
கடந்த 3,000 ஆண்டுகளாக தமிழ்நாட்டின் மீது யாராலும் எதையும் திணிக்க முடியவில்லை.
இன்றுவரையில் தமிழக மக்கள் மீது யாராலும் எதையும் திணிக்க முடியவில்லை. நீங்கள் அவர்களிடம் அன்புடன் பேசினால் அவர்களிடமிருந்து எதையும் பெறலாம்.
நீங்கள் இங்கு வந்து அவர்களுடைய கலாச்சாரத்தை மதித்து பேசினால் அவர்களிடமிருந்து அன்பைப் பெறுவீர்கள். பிரதமருக்கு சரியான புரிதல் இல்லை.
எல்லா மாநிலங்கள் மீது அவருக்கு புரிந்துகொள்ளாத சூழல் உள்ளது. என்னுடைய நண்பர் ஓமர் அப்துல்லா சிறப்பாக பேசினார்.
மிகச் சிறப்பான விஷயத்தை பேசினார். அவர் பேசியதை திரும்ப பேச விரும்புகிறேன்.
சுதந்திரத்துக்குப் பிறகு முதன்முறையாக மாநிலங்களிடமிருந்து உரிமைகள் பறிக்கப்படுகின்றன என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
