
இருதய மாற்று அறுவை சிகிச்சையில் புரட்சிகரம் என்று வர்ணிக்கப்பட்ட ஒரு ஆபரேஷனில் பன்றியின் இருதயம் பொருத்தப்பட்ட அமெரிக்க நபர் டேவிட் பென்னட் (57) அறுவை சிகிச்சை முடிந்து 2 மாதங்களுக்குப் பிறகு மரணமடைந்தார்.
அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்திய மேரிலேண்ட் மருத்துவமனை மார்ச் 9ம் தேதி இதனை அறிவித்தது.
டேவிட் பென்னட், 57, மார்ச் 8 அன்று மேரிலாந்து பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் இறந்தார்.
மருத்துவர்கள் மரணத்திற்கான சரியான காரணத்தை தெரிவிக்கவில்லை, சில நாட்களுக்கு முன்பே அவரது உடல்நிலை மோசமடையத் தொடங்கியது என்று மருத்துவமனை கூறியது.
பல ஆண்டுகளாக மருத்துவர்கள் உயிரைக் காக்கும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு விலங்குகளின் உறுப்புகளைப் பயன்படுத்த முயன்றனர்.
மேரிலாந்தில் உள்ள ஹேகர்ஸ்டவுனைச் சேர்ந்த ஒரு கைவினைஞரான பென்னட், இந்த புதிய முயற்சிக்கான நபராக இருந்தார், ஏனெனில் அவர் மரணத்தை எதிர்கொண்டிருந்தார்.
மனித இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு தகுதியற்றவர் ஆகி படுத்த படுக்கையாகி உயிர் காப்பு கருவிகளுடன் தான் வாழ்ந்து வந்தார்.
ஜனவரி 7ம் தேதி பென்னட்டுக்கு பன்றியின் இருதயம் பொருத்தப்பட்டது. ஆனால் அப்போதே பென்னட் தன் மகனிடம் இது வேலைக்கு ஆகும் போல் தனக்குத் தெரியவில்லை என்று கூறியிருக்கிறார்.
நோயாளிகளின் உடல் விலங்கு உறுப்பை உடனடியாக நிராகரித்ததால், அத்தகைய மாற்று அறுவை சிகிச்சையின் முந்தைய முயற்சிகள் அல்லது xenotransplantation அறுவை சிகிச்சைகள் பெரும்பாலும் தோல்வியடைந்தன.
இந்த நேரத்தில்தான் மேரிலாண்ட் அறுவை சிகிச்சை நிபுணர்கள் மரபணு திருத்தப்பட்ட பன்றியின் இதயத்தைப் பயன்படுத்தினர்.
மிக வேகமாக நிராகரிப்பைத் தூண்டும் பன்றி மரபணுக்களை அகற்றவும், மனித உடல் உறுப்பு விலங்கின் இதயத்தை ஏற்றுக்கொள்வதற்கும் மனித மரபணுக்களை விலங்கில் சேர்த்தனர்.
இப்படி செய்யப்பட்ட புரட்சிகர இருதய மாற்று அறுவை சிகிச்சை முதலில் கைகொடுப்பது போல் தெரிந்தது.
மேரிலாண்ட் மருத்துவமனை அவ்வப்போது இதன் விளைவுகளை வெளியிட்டு வந்தனர். பென்னட் மெதுவே உடல் நலம் தேறி வருவதாகவும் தெரிவித்தது.
பிப்ரவரி 2022-ல் மருத்துவமனை, உடல் சிகிச்சையாளருடன் பணிபுரியும் போது அவர் மருத்துவமனை படுக்கையில் இருந்தபடியே சூப்பர் பவுலைப் பார்க்கும் வீடியோவை வெளியிட்டது.
மரபணு திருத்தப்பட்ட பன்றியின் இருதயத்துடன் ஒப்பீட்டளவில் பென்னட் கணிசமான காலம் உயிரோடுதான் இருந்தார்.
ஏனெனில் 1984-ல் இறந்து கொண்டிருந்த குழந்தை ஃபே ஒரு பபூனின் இருதயத்துடன் 21 நாட்களே கலிபோர்னியாவில் உயிருடன் இருக்க முடிந்தது, அதை ஒப்பிடும்போது பன்றியின் இருதயத்துடன் பென்னட் கணிசமான காலம் உயிரோடுதான் இருந்தார்.
