
சாலிகிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலரான கண்ணன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.
அந்த புகாரில், ரவுடிகளை ஒடுக்க தமிழக காவல்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ரவுடிகளை ஊக்குவிக்கும் விதமாக நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் துவங்கி இருப்பது பொதுமக்களிடையே ஒரு வித அச்சத்தை ஏற்படுத்துவதாக புகாரில் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடிகர் அஜித்தின் 62ஆவது திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கப்போவதாக அறிவிப்பு வெளிவந்தது.
அப்போது விக்னேஷ் சிவன் மற்றும் அவரது ரவுடி பிக்சர்ஸ் குழு இணைந்து பட்டாசு வெடித்த செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் நபர்களை காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்,
அந்த வகையில் உடனடியாக ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை தடை செய்து, நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து கைது செய்ய வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் புகார் கொடுத்துள்ள சமூக ஆர்வலர் கண்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “திரைப்பட இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகின்றனர்.
ரவுடி பிக்சர்ஸ் பெயர் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. எனக்கும் அவர்களுக்கும் எந்த முன்விரோதம் இல்லை.
ரவுடி என்ற வார்த்தையை பிரபலங்கள் பயன்படுத்துவது தவறான ஒன்று என்கிறார் புகார்தாரர்.
இந்த கம்பெனி பெயரில் விக்னேஷ் சிவன் பல படங்களை எடுத்து ரிலீஸ் செய்த போது எழும்பாத பிரச்சனை இப்போது அஜீத் படத்தை விக்னேஷ்சிவன் இயக்கப்போகிறார் என்றதும் எழும்புவது பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.
