
கடும் எதிர்ப்பால் சமூக வலைதளங்களுக்கு தடை நீக்கம்… தொடரும் முழு ஊரடங்கு… பதட்டத்தில் இலங்கை!
இலங்கையில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டதோடு, சமூகவலைதளங்களுக்கும் தடை விதிக்கப்பட்டதால் அமைச்சர் நமல் ராஜபக்சே உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, சமூகவலைதளங்கள் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வால் தவித்து வரும் பொதுமக்கள், அரசின் அவசர நிலை பிரகடனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து, நாடு முழுவதும் திங்கட்கிழமை காலை வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள், கொழும்பு வீதியில் படுத்து உறங்கி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபோன்ற போராட்டங்கள் நாடு முழுவதும் பரவும் என்ற அச்சமடைந்துள்ள இலங்கை அரசு, போராட்டங்களை ஒடுக்கும் விதமாக ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களை முடக்கியது.
வாட்ஸ் அப் உள்ளிட்டவையும் செயல்படாததால், இலங்கை மக்கள் கடும் அச்சமடைந்துனர்.
அத்துடன், தலைநகர் கொழும்பு வீதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள போலீஸ் மற்றும் ராணுவத்தினர், ஊரடங்கை மீறியதாக 600க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர்.
