
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடைபெறுவதாக இருந்தது.
உக்ரைன் மீது அந்த நாடு போர் தொடுத்ததால் செஸ் ஒலிம்பியாட் போட்டியை வேறு நாட்டுக்கு மாற்ற முடிவு செய்தனர்.
எந்த நாட்டில் நடத்தலாம் என்று ஆய்வுகள் நடந்த போது செஸ் ஆட்டத்தின் தாயகமாக கருதப்படும் தமிழகத்தில் இந்த போட்டியை நடத்தலாம் என்று தீர்மானித்தனர்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் இதுபற்றி தெரிவித்ததும் அவர் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சென்னையை அடுத்து உள்ள மாமல்லபுரத்தில் நடத்தலாம் என்று உறுதி அளித்தார்.
இந்த போட்டிக்காக உடனடியாக அவர் 100 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து உற்சாக மூட்டினார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியை உலகமே வியக்கும் வண்ணம் நடத்த வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 23 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு உருவாக்கப்பட்டது.
தமிழக அரசின் 15 துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து சிறப்பான ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.
செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம், பூந்தேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள போர்பாய்ண்ட்ஸ் ரிசார்ட் என்ற 5 நட்சத்திர தகுதி பெற்ற அரங்கில் நடைபெற உள்ளது.
இதற்காக அங்கு பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பூஞ்சேரி பகுதியே விழாக்கோலம் பூண்டு உள்ளது.
நாளை (28-ந் தேதி) முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெற உள்ளன.
187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள், நடுவர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் இந்த போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் அணிகளை 187 நாடுகளும் அறிவித்து விட்டன.
அவர்கள் கடந்த திங்கட்கிழமை முதல் சென்னைக்கு வர தொடங்கி உள்ளனர். நேற்று மட்டும் 256 வீரர்கள், வீராங்கனைகள் சென்னை வந்தனர்.
இங்கிலாந்து, ஆஸ்திரியா, ரஷியா, பாலஸ்தீனம், அங்கோலா, தான்சானியா, ஜிம்பாப்வே, நைஜிரியா, ஜெர்மனி, ஸ்வீடன், பாகிஸ்தான், அங்கேரி, டென்மார்க், கயானா, கேமன் தீவுகள், மங்கோலியா, பிரான்ஸ்,
இத்தாலி, நியூசிலாந்து, இந்தோனேசியா, மலேசியா, சீன தைபே, பிரேசில், அமெரிக்கா, தென் கொரியா, கொலம்பியா, பொலிவியா, கேமரூன் உள்பட பல்வேறு நாட்டு வீரர்கள் சென்னை வந்தனர்.
அவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் நேற்று இரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணிக்குள் துருக்கி, சவுதி அரேபியா, பாலஸ்தீனம், கிரீஸ், உருகுவே, மாண்டினீக்ரோ, ஜார்ஜியா, அஜர்பைஜான், ஈரான், சூடான், இத்தாலி, இஸ்ரேல்,
எகிப்து, பெல்ஜியம், ஜெர்சி, லாட்வியா, கயானா, ஜமைக்கா, அமெரிக்கா, சைவ்ரஸ், ஆஸ்திரேலியா, அயர்லாந்து, பஹாமாஸ், வியட்நாம், ஜப்பான், ஹாங்காங், குவாம் ஆகிய நாடுகளை சேர்ந்த 321 வெளிநாட்டு வீரர்கள் சென்னை வந்தனர்.
இன்று காலை 6.35 மணி முதல் மதியம் 1 மணிக்குள் பாலஸ்தீனம், போலந்து, ருமேனியா, பிரேசில், இலங்கை, உக்ரைன், சுவிட்சர்லாந்து, சுவீடன், தென் ஆப்பிரிக்கா, கான்மரினோ, ரஷியா,
பராகுவே, பனாமா, நார்வே, நெதர்லாந்து, மொனாக்கோ, சிலி, போட்ஸ்வானா, அர்ஜென்டினா, அல்பேனியா, டோகோ, தான்சானியா, அங்கோலா, சவுதி அரேபியா, ஓமன், குவைத் ஆகிய நாடுகளை சேர்ந்த 255 வீரர்கள் சென்னை வந்தனர்.
இன்று மாலை புருனே, மலேசியா, சிங்கப்பூர், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வேல்ஸ், சீஷெல்ஸ், ஹங்கேரி, பரோயே தீவுகள், புவேர்ட்டோ ரிக்கோ, பஹாமாஸ், பங்களாதேஷ் ஆகிய நாடுகளை சேர்ந்த 169 வீரர்கள் வர உள்ளனர்.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் வெனிசுலா, கியூபா, செயிண்ட் லூசியா, மங்கோலியா, பார்படாஸ், லிதுவேனியா, வடக்கு மாசிடோனியா, மொரீஷியஸ், ஜிம்பாப்வே, ருவாண்டா, செனகல், பார்படாஸ், டொமினிகா, மெக்சிகோ, கரினாம், மலாவி, லிபெரியா ஆகிய நாடுகளை சேர்ந்த 240 வீரர்கள் வந்தனர்.
இன்று இரவு நேபாளம், கானா, மெக்சிகோ, பாகிஸ்தான், டிரினிடாட் டொபாகோ, செயிண்ட் வின்சென்ட், பூட்டான் ஆகிய நாடுகளை சேர்ந்த 60 வீரர்கள் வர உள்ளனர்.
மொத்தத்தில் இன்று மட்டும் 1,045 செஸ் வீரர்கள் சென்னைக்கு வந்த வண்ணம் உள்ளனர். செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க வந்துள்ள அனைத்து வீரர்களும் தங்குவதற்கு நட்சத்திர வசதி கொண்ட இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அவர்கள் பயணத்துக்காக சொகுசு வாகனங்களும் தயார் நிலையில் உள்ளன. மேலும் அவர்களை உபசரிக்கவும் தனிக்குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
அவர்களுக்கு மாநில அமைச்சர்களுக்கு இணையான பாதுகாப்பு வழங்கவும், உணவுகளை பரிசோதித்து விட்டு பரிமாறவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் நாளை மாலை நேரு ஸ்டேடியத்தில் நடக்கும் தொடக்க விழாவுக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட உள்ளனர்.
செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா நாளை மாலை 6 மணிக்கு நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. பிரதமர் மோடி விழாவில் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்க உள்ளார்.
இதற்காக அவர் நாளை பிற்பகல் 2.20 மணிக்கு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து தனி ராணுவ விமானத்தில் சென்னை புறப்பட்டு வருகிறார்.
சென்னை விமான நிலையத்துக்கு 4.40 மணிக்கு அவர் வந்து சேருகிறார். அங்குள்ள ஓய்வு அறையில் சுமார் 50 நிமிடங்கள் முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசுகிறார்.
அதன்பிறகு ஹெலிகாப்டர் மூலம் 5.45 மணிக்கு ஐ.என்.எஸ். அடையாறு வருகிறார்.
அங்கிருந்து தொடக்க விழா நடக்கும் நேரு ஸ்டேடியத்திற்கு காரில் செல்கிறார்.
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவை முன்னிட்டு நேரு ஸ்டேடியத்தில் நாளை பிற்பகல் 3 மணியில் இருந்தே நிகழ்ச்சிகள் தொடங்குகிறது. மதியம் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டதும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
சுமார் 800 கலைஞர்கள் பங்கேற்று இந்திய பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் கலை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர்.
வட மாநிலங்களில் இருந்து பெரும்பாலான கலைஞர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுடன் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கலைஞர்களும் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். 5.45 மணி வரை கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இதன்பிறகு 75 முக்கிய நகரங்களை கடந்து வந்துள்ள ஒலிம்பியாட் ஜோதி எடுத்து வரப்படும்.
இதையடுத்து பிரதமர் மோடி போட்டியை தொடங்கி வைப்பார்.
பிரதமர் மோடியுடன் விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், 187 நாட்டு செஸ் வீரர்கள் பங்கேற்க இருப்பதால் நேரு ஸ்டேடியம் பலத்த பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
அங்கு 5 அடுக்கு பாதுகாப்பு அமைத்துள்ளனர். டிரோன்கள், பலூன்கள் போன்றவை பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை மதியம் முதல் இரவு வரை நேரு ஸ்டேடியம் பகுதியில் போக்குவரத்தும் மாற்றி விடப்பட்டுள்ளது.
நேரு ஸ்டேடியம் தவிர பிரதமர் செல்லும் வழிகள், செஸ் வீரர்கள் தங்கி உள்ள ஓட்டல்கள், விடுதிகள் மற்றும் அவர்கள் செல்ல இருக்கும் கடற்கரை பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
