
காஷ்மீரில் ராணுவ வீரராக இருக்கும் துல்கர் சல்மானுக்கு சீதா மகாலட்சுமி என்ற பெயரில் முகவரி இல்லாமல் தொடர்ந்து காதல் கடிதங்கள் வருகிறது.
கடிதம் எழுதும் பெண்ணை தேடிக் கண்டு பிடித்து, பின்னர் இருவரும் காதலை தொடர்கிறார்கள்.
ஒரு கட்டத்தில் பாகிஸ்தானுக்குள் சென்று பயங்கரவாதியை கொல்லும் பணி துல்கர்சல்மானுக்கு வருகிறது.
இதற்காக எல்லை தாண்டி செல்கிறார். அவர் திரும்பி வந்தாரா? சீதா மகாலட்சுமி யார்? இவர்கள் ஒன்று சேர்ந்தார்களா? என்பது படத்தின் மீதி கதை.
நடிப்பின் மூலம் படத்தை துல்கர் அழகாக நகர்த்துகிறார். காதலி மிருணாள் தாகூரிடம் வெளிப்படுத்தும் காதல், காஷ்மீர் மோதலை தடுக்கும் விவேகம், எல்லை தாண்டி எதிரிகளை வீழ்த்தும் வீரம், சிறை சித்ரவதை என்று கதாபாத்திரத்தில் துல்கர் கன கச்சிதமாக பொருந்தி இருக்கிறார் . அவரது காதலியாக வரும் மிருணாள் தாகூர் அழகு பதுமை.
கொஞ்ச நேரம் வந்தாலும் ராஷ்மிகாவுக்கு அழுத்தமான வேடம்.
ராணுவ உயர் அதிகாரிகளாக வரும் பிரகாஷ்ராஜ், கவுதம் மேனன், சுமந்த், சச்சின் படேகர், மற்றும் தருண் பாஸ்கர் ஆகியோர் நடிப்பு யதார்த்தம்.
மிக நீண்ட நாட்களுக்கு பின் ஒரு அழகான காதல் கதையை கவித்துவமாக செதுக்கி ரசிகர்கள் கவனம் பெறுகிறார் இயக்குனர் ஹனு ராகவபுடி. இது டப்பிங் படம் என்ற உணர்வே வராமல் கார்க்கி வசனங்கள் அத்தனை கன கச்சிதம்.
விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை கதையோடு நம்மை பயணிக்க வைக்கிறது, பி.எஸ்.வினோத், ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் கேமரா ஒவ்வொரு காட்சியையும் குறிப்பாக காஷ்மீர் அழகை அள்ளி தருகிறது.
ஒரே ஒரு குறை படம் மிக நீளம் அதைகொஞ்சம் கத்திரி போட்டு தூக்கியிருந்தால் இன்னும் பேசப்பட்டிருக்கும்.
மொத்தத்தில் சீதா ராமம்… அனைவருக்கும் லாபம்!
கோடங்கி
மதிப்பீடு 3.5/5
