வியாழக்கிழமை, ஏப்ரல் 30
Shadow

அமலாவின் “கணம்” சினிமா என்ன சொல்லுது?! விமர்சனம்

 

கடந்த காலத்தில் அறியாமையால் செய்த தவறுகள், அலட்சியத்தால் தவறவிட்ட சந்தர்ப்பங்கள் அதனால் எதிர்காலத்தில் ஏற்படும் இழப்புகள், இது அனைவருக்குமே நடந்திருக்கும். மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் சரி செய்து விடலாம் என்று அதை நினைத்து வருந்துவோம்.

ஒரு வேளை உண்மையாகவே அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும்? ஆம். இது தான் ஷரவானந்த், சதிஷ் மற்றும் ரமேஷ் திலக் யோசிக்கிறார்கள்.

அவர்கள் மூவரும் குழந்தை பருவத்தில் இருந்து நண்பர்கள். அந்த பருவத்தில் அவர்கள் நழுவவிட்ட வாய்ப்புகளையும், காலத்தை வீணடித்து விட்டு இளம் வயதில் வருந்தி கொண்டிருக்கிறார்கள்.

அவர்களிடம் விஞ்ஞானியான நாசர் டைம் மிஷின் குடுக்கிறார். அதன் துணை கொண்டு கடந்த காலத்திற்கு சென்று எல்லாவற்றையும் சரி செய்து வாருங்கள் என்கிறார்.

அம்மாவிற்காக ஷரவானந்தும், காதலிக்காக சதிஷும், படிப்பிற்காக ரமேஷ் திலக்கும் கடந்த காலத்திற்குள் பயணிக்கிறார்கள்.

ஆனால், வெற்றிகரமாக சரி செய்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் கதை.

ஷரவானந்த் எங்கேயும் எப்போதும் படத்திற்குப் பிறகு கணம் படம் மூலம் மீண்டும் தமிழில் நடித்திருக்கிறார். அம்மாவின் பாசத்திற்காக ஏங்கும் மகனாக நடித்திருக்கிறார்.

அம்மாவை மீண்டும் பார்க்கும் தருணங்களில் நிதானமாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அம்மா தன்னை உணரும் போது யதார்த்த நடிப்பில் உணர்வுகளை அள்ளிச் செல்கிறார்.

சதிஷ் கல்யாணத்திற்கு பெண் கிடைக்காமல் விரக்தி அடையும் போது, நம் வீட்டிலோ அல்லது அக்கம் பக்கத்தினர் வீட்டில் இருக்கும் மனிதர்களை நினைவூட்டுகிறார்.

ரமேஷ் திலக் சிறு வயதில் படிக்காமல் விட்டதால் தான் இன்று வீடு புரோக்கராக இருக்கிறோம் என்று வருந்தி அதை சரி செய்ய அவர் எடுக்கும் முயற்சியில் பொறுப்புடன் நடித்திருக்கிறார்.

30 வருடங்களுக்கு பிறகு அமலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதுவரை துருத்துருவென்று நடித்த அமலாவைத் தான் பார்த்திருப்போம்.

ஆனால், மென்மையான அம்மாவாக ஆழமான பாசத்தை வெளிப்படுத்தி அசர வைக்கிறார். என் மகன் இப்படி தான் என்று அவர் வசனம் பேசும்போது பார்வையாளர்களையும் திரைக்குள் இழுக்கிறது.

ரிது வர்மா தன் பாத்திரத்தை உணர்ந்து மனதில் இடம் பிடிக்கிறார்.

நாசர் வழக்கம் போல் வாகை சூடுகிறார். மூன்று குட்டி பசங்களும் நம்மை பள்ளி பருவத்திற்கு கொண்டு செல்கிறார்கள்.

இயக்குநர் ஸ்ரீ கார்த்தி இப்படத்தை திறமையாக கையாண்டிருக்கிறார். அறிவியல் புனைகதை மற்றும் அம்மாவே சென்டிமென்ட் என இரண்டையும் அழக அழகாக இணைத்திருக்கிறார்.

பொதுவாக அறிவியல் புனைகதைகளில் எளிதாக புரிந்து கொள்ள முடியாது. ஆனால், அறிவியலைப் பற்றி தெரியாதவர்களுக்கு கூட எளிமையாக புரியும் வகையில் திரைக்கதையை தெளிவாக எடுத்துரைக்கிறார்.

திரைக்கதையை எழுதிய விதமும் அதை அழகாக காட்சிப்படுத்திய விதமும் ஸ்ரீ கார்த்திக்கின் அனுபவத்தையும் பக்குவத்தையும் காட்டுகிறது.

இசை மற்றும் பாடல் வரிகள் படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது. 1998 ஆம் ஆண்டில் இருக்கும் சென்னையையும், அந்த காலகட்டத்தில் வெளியான படங்களையும் ஒளிப்பதிவில் மிளிர்கிறது.

தனக்கும் இப்படத்தில் பெரும் பங்கு இருக்கிறது என்று கலை இயக்குநர் உணர்த்தியிருக்கிறார்.

மொத்தத்தில் வாழ்வில் இரண்டாம் வாய்ப்பு வருவது அரிது. ஆகையால், கிடைத்த வாய்ப்பை அந்த கணத்திலேயே பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மனதை கனக்க வைக்கிறது கணம்.

 

– நித்திஷ்

மதிப்பீடு 3.5/5

323 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன