வியாழக்கிழமை, ஏப்ரல் 18
Shadow

குழந்தை திருமணம், பெண் கல்வி, குலதெய்வ சடங்குகளை வெளிச்சம் போடுகிறதா அயலி? – கோடங்கி விமர்சனம்

குழந்தை திருமணம், பெண் கல்வி, குலதெய்வ சடங்குகளை வெளிச்சம் போடுகிறதா அயலி? – கோடங்கி விமர்சனம்

ஜி5 ஓடிடி தளத்தில் கடந்தாண்டு வெளியான விலங்கு வெப் தொடர் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதே வரிசையில், முத்துக்குமார் எழுதி இயக்கியுள்ள அயலி என்ற தொடர் தற்போது ஜீ5 தளத்தில் வெளியாகி உள்ளது.

8 எபிசோடுகளை கொண்ட இந்த தொடர் மொத்தமாக நான்கு மணி நேரங்களாக தயாராகியுள்ளது. இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரங்களாக அபி நட்சத்திரா, அனுமோல், அருவி மதன், லிங்கா மற்றும் சிங்கம்புலி ஆகியோர் நடித்துள்ளனர்.

கதைப்படி, 1990-களில் புதுக்கோட்டை அருகே உள்ள கிராமத்தில் அயலி என்ற பெண் தெய்வத்தை அந்த ஊர் மக்கள் வணங்கி வருகின்றனர். வயதுக்கு வந்த உடனேயே பெண் குழந்தைகளை திருமணம் செய்து வைக்கும் பழக்கம் அந்த ஊரில் காலம் காலமாக இருந்து வருகிறது. இதனால் அந்த ஊரில் எந்த ஒரு பெண்ணும் பத்தாம் வகுப்பு படித்ததே இல்லை என்ற நிலை இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழ்செல்வி என்ற பெண் பத்தாவது படித்து பாஸ் ஆக வேண்டும் என்பதற்காக தான் வயதுக்கு வந்ததை மறைத்து தொடர்ந்து படித்து வருகிறார். பின்பு தமிழ்ச்செல்விக்கு என்ன ஆனது? பத்தாம் வகுப்பு படித்து முடித்தாரா? இதனால் அந்த ஊரில் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய கதைதான் அயலி.

சமூகத்திற்கு தேவையான ஒரு நல்ல கருத்தையும், பலரும் பேச தயங்கும் கதையையும் எடுத்ததற்காக இயக்குனர் முத்துக்குமார் பாராட்டுக்குறியவர்.

 

கதையின் முக்கிய கதாபாத்திரமாக வரும் அபி நட்சத்திரா தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அபியின் அம்மாவாக நடித்திருக்கும் அனுமால் அந்த கிராமத்து பெண்ணாகவே வாழ்ந்துள்ளார்.

ஊர் தலைவராக வரும் சிங்கம் புலி காமெடி பெருசா ஒர்க்கவுட் ஆகவில்லை ஆனால் அவர் மகன் லிங்கா வில்லனாக அசத்தியுள்ளார்.

1990-களில் நடைபெறும் கதை என்றாலும் இன்றைய காலகட்டத்திற்கும் பொருந்தும் விதமாக தான் அயலி உள்ளது.

இந்த உலகம் பெண்களை எப்படி பார்க்கிறது, எப்படி நடத்துகிறது என்பதையும், கல்வி பெண்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதையும் பேசியிருக்கும் அயலி… நல்ல செயலி!

 

 

கோடங்கி விமர்சனம்

178 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன