வியாழக்கிழமை, ஏப்ரல் 18
Shadow

கார்ப்ரேட் அரசியலை அம்பலப்படுத்தும் இராவணகோட்டம் கோடங்கி விமர்சனம் – 3.5/5

 

மறைக்கப்பட்ட அரசியல் அழுத்தங்களை பெரும்பாலும் யாரும் தேடி சொல்வதில்லை… திரைப்படங்களில் பொழுது போக்கு காட்சிகளுக்கு கிடைக்கும் வரவேற்பு உண்மையான மறைக்கப்பட்ட நிஜங்களுக்கு இருப்பதில்லை… ஆனால் 60 ஆண்டுகளுக்கு முன் தமிழ்க்த்தின் வறண்ட் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு அடக்கு முறையின் அத்துமீறலை நினைவுபடுத்தும் விதமாக விக்ரம் சுகுமார் இயக்கத்தில் இராவண கோட்டம் படம் உருவாகி உள்ளது.

துபாயில் தொழில் நிறுவனங்கள் நடித்த வரும் திட்டக்குடி கண்ணன் ரவி படத்தை தயாரித்திருக்கிறார்.

ஆனால் சொல்லத்தயங்கும் ஒரு வரலாற்று சம்ப்வத்தை போல ஒரு காட்சியை வைத்து கற்பனை கதை சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

கதைப்படி வறண்ட மாவட்டமான இராமனாதபுரத்தில் ஏனாதி கிராமத்தில் பிரபுவும் அவர் நண்பர் இளவரசும் வசிக்கிறார்கள். மேலத்தெருவில் பிரபு, கீழத்தெருவில் இளவரசு என வசித்தாலும் அந்த கிராம மக்களிடையே எந்த பாகுபாடும் இல்லாமல் இருப்பதற்கு அந்த ஊரில் எந்த அரசியல் கட்சியும் இல்லாமல் இருப்பது தான் காரணம்.

பிரபு சொல்லுக்கு கட்டுப்படும் அந்த ஊரில் தண்ணீர்பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது.

தண்ணீர் பஞ்சத்திற்கான காரணத்தை தெரிந்து கொண்டு அதை சரி செய்ய முயற்சிக்கும் பிரபுவுக்கும் அதிகார வர்க்கத்துக்கும் முரண் ஏற்படுகிறது.

அதோடு, பிரபுவின் மகன் சாந்தனுவுக்கும், இளவரசுவின் மகனுக்கும் ஹீரோயின் ஆனந்தியால் பகையை உருவாக்குகிறது ஒரு கும்பல்.

ஆனால் ஆனந்தியும் சாந்தனுவும் பல ஆண்டுகளாக காதலிக்கிறார்கள்.

இந்த காதல் கை கூடியதா?

சாதியே ஊரில் புகாமல் மக்களை பாதுகாத்து வந்த பிரபு என்ன ஆனார்?

அரசியல்வாதிகளின் சதி முறியடிக்கப்பட்டதா?

தண்ணீர் பஞ்சத்துக்கு என்ன காரணம்?

கருவேல மரங்களால் என்ன பாதிப்பு ?

போன்ற பல்வேறு கேள்விகளுக்கு பதில் தேடுகிறது இராவணகோட்டம்.

ஊர்த் தலைவராக பிரபு மிடுக்காக வருகிறார். பல இடங்களில் அவர் அப்பா சிவாஜியை கண்முன் நிறுத்துகிறார்.

அவரின் நண்பரான இளவரசு கிடைத்த ரோலை தன் பங்குக்கு அழகாக்குகிறார்.

நல்லா நடிக்கக்கூடிய கயல் ஆனந்திக்கு பெருசா நடிக்கிற வாய்ப்பு இல்லை என்றாலும் ரொமான்ஸ் காட்சிகளிலும், காதல் காட்சிகளிலும் ஸ்கோர் எடுக்கிறார்.

இளவரசுவின் மகனாக வருபவர் மிக யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.


சாந்தனு சினிமா வாழ்க்கையில் இப்படி ஒரு அழுத்தமான கதையில் நடித்ததில்லை. கதைக்கு எப்படி இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டு கனமான ரோலை தாங்கி பிடிக்கிறார். காதல் காட்சிகளை விட ஆக்‌ஷன் காட்சிகளில் ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார்.

கிளைமாக்சில் வலியை ஏற்படுத்தி பரிதாபத்தை அள்ளிக் கொள்கிறார்.

தீபாவின் யதார்த்தமான நடிப்பு கவனம் பெறுகிறது.

இயக்குனர் விக்ரம் சுகுமார் தனது முதல் படத்தில் மிக ஆக்ரோஷமான கதையை அழுத்தமாக கொடுத்திருந்தார். இந்த இரண்டாவது படைப்பில் சாதிகளை தாண்டி அழுத்தமான கார்ப்ரேட் அரசியலை பதிவு செய்திருக்கிறார்.

கருவேல மர அரசியல் எத்தனை கொடூரமானது என்பதை சமரசம் இல்லாமல் சொல்லி இருப்பது பாராட்டுக்குறியது.

ஜஸ்டின் பிரபாகரன் இசையும் பின்னணி இசையும் தேவைக்கு தக்க பயணிக்கிறது. சுகமான பாடலும், வலியான பாடலும் தனித் தனியாக ராஜாங்கம் நடத்துகிறது.

வறண்ட நிலத்தில் தண்ணீரை அழிக்கும் கருவேலக் காடுகளின் செழுமையை காட்டி மிரட்டி இருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

காட்சியின் குறுக்கே ஆங்காங்கே தள்ளு வண்டியில் தண்ணீருக்கு அலையும் மக்களின் காட்சிகள் வறட்சி மக்களை வெளிச்சம் போடும் இயக்குனரின் திறமைக்கு சாட்சி.

மொத்தத்தில் சிந்திக்க வேண்டிய மக்களை உசுப்பேத்தும் சாதியின் சதியில் அமிழாது காக்க ஒரு ஆயுதம் தான் இராவணகோட்டம்!

– கோடங்கி

மதிப்பீடு 3.5/5

712 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன