புதன்கிழமை, செப்டம்பர் 30
Shadow

ரெய்டு – திரைப்பட விமர்சனம்

ரெய்டு – திரைப்பட விமர்சனம்

நேரமையான காவலதிகாரி, அவருடைய செயல்பாடுகளால் பாதிப்புக்குள்ளாகும் நபர்கள், காவலதிகாரியின் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் புகுந்து அதைச் சீர்குலைக்கிறார்கள். அதனால் வெகுண்டெழும் அந்த அதிகாரி என்னவெல்லாம் செய்கிறார்? என்பதுதான் ரெய்டு படம்.

அதிரடிச் சண்டைகள் ஆக்ரோச மோதல்கள் என முழுமையான ஆக்சன் படத்துக்குரிய கதைக்களம் என்பதை உணர்ந்து நடித்திருக்கிறார் நாயகன் விக்ரம்பிரபு. காவலதிகாரிக்குரிய மிடுக்கு அவருக்கு இயல்பாகவே இருக்கிறது.மன உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு ஆவேசத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் ஸ்ரீதிவ்யாவுக்கு அதிக வேலையில்லை என்றாலும், வருகிற காட்சிகளில் நிறைந்து நிற்கிறார். புன்னகையால் கவரும் அவருடைய கதாபாத்திரத்தின் முடிவு கஷ்டம்.

இன்னொரு நாயகியாக நடித்திருக்கும் அனந்திகாவும் கவனிக்க வைத்திருக்கிறார்.

இயக்குநர் வேலுபிரபாகரன், ரிஷிரித்விக், செளந்தரராஜா ஆகியோர் வில்லன்களாக நடித்திருக்கிறார்கள்.

கதிரவனின் ஒளிப்பதிவில் கதையில் இருக்கும் அழுத்தம் காட்சிகளிலும் தெரிகிறது.

சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் கேட்கலாம். நாயகனின் பெருமை பேசும் பாடல் விக்ரம்பிரபுவுக்குப் பொருந்தியிருக்கிறது.

கன்னடத்தில் வெளியான டகரு படத்தின் தமிழாக்கம் என்று தெரியாதபடிக்கு வசனங்கள் எழுதியிருக்கிறார் இயக்குநர் முத்தையா.

கார்த்தி இயக்கியிருக்கிறார்.  பழைய கதை என்பது பெரும் வேகத்தடையாக இருந்தாலும் காட்சிகளை முன்பின்னாக மாற்றிப்போட்டு அதைச் சமன் செய்ய முயல அதுவே சில இடங்களில் பலவீனமாகியிருக்கிறது.

நல்லவர்களின் கண்களில் படும்வரைதான் கெட்டவர்களின் வாழ்வு என்பதை அழுத்திச் சொல்லியிருப்பது வரவேற்புக்குரியது.

மதிப்பீடு – 2.5/5

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன