திங்கட்கிழமை, மே 13
Shadow

பில்கிஸ் பானு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 பேர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டது செல்லாது – உச்ச நீதிமன்றம்

 

பில்கிஸ் பானு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 பேர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டது செல்லாது. இரு வாரங்களில் 11 பேரும் சிறையில் சரண் அடைய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2002 பிப்.27-ம் தேதி குஜராத்தின் கோத்ரா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் 2 பெட்டிகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதில் 59 கரசேவகர்கள் உயிரிழந்தனர். 48 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து குஜராத் முழுவதும் கலவரம் வெடித்தது. கோத்ராவில் இருந்து 50 கி.மீ. தொலைவில் தாகோத் நகர் அருகில் உள்ள ரந்திக்பூர் கிராமத்தில் முஸ்லிம்கள் வசித்த பகுதியில் ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. அப்போது பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அவரது குழந்தை உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 6 பேரை காணவில்லை. அவர்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

 

இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நகரத்னா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கின் தீர்ப்பை இன்று வழங்கியது. தீர்ப்பில், “குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை. இந்த வழக்கு மகாராஷ்டிராவில் நடைபெற்றதால், மராட்டிய அரசு தான் 11 பேரின் விடுதலை குறித்து முடிவெடுக்க முடியும்.

எனவே, குற்றவாளிகளை விடுதலை செய்த உத்தரவை ரத்து செய்கிறோம். பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் என்பது மிகவும் முக்கியம். பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் நீதி கிடைக்க வேண்டும். பெண்களுக்கு உரிய மரியாதை கிடைக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான கொடூரமான குற்றங்களை மன்னிக்க முடியாது. குற்றவாளிகள் அனைவரும் இரண்டு வாரங்களுக்குள் சிறை அதிகாரிகளிடம் ஆஜராக வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

86 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன