வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 28
Shadow

அரசியல் அறிவிப்பால் மீண்டும் பிசியான போயஸ்கார்டன்… அன்று ஜெ., இன்று ரஜினி..!


அரசியல் அறிவிப்பால் மீண்டும் பிசியான போயஸ்கார்டன்… அன்று ஜெ., இன்று ரஜினி

சுமார் கால் நூற்றாண்டுக்கும் அதிகமாக தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் அதிகார மையமாக இருந்து வந்தது போயஸ்கார்டன் பகுதி.

ஜெயலலிதா இருந்த வரையில் பரபரப்பான அரசியல் களமாகவே காணப்பட்டது. தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்ந்த ஜெயலலிதா தனது போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்தே பல சாதனைகளை படைத்தார். கூட்டணி பேச்சுவார்த்தையில் தொடங்கி அ.தி.மு.க.வின் கொள்கை முடிவுகள் அனைத்தையுமே அவர் அங்கு வைத்துதான் முடிவு செய்தார்.


இதனால் அவர் ஆட்சியில் இருந்தபோதும் சரி, இல்லாத நேரத்திலும் சரி போயஸ்கார்டன் பகுதி பரபரப்பு களமாகவே காணப்பட்டது. இசட் பிளஸ் பாதுகாப்பு பிரிவின் கீழ் இருந்த ஜெயலலிதா வீட்டு முன்பு மட்டுமல்லாமல் அந்த பகுதியே எப்போதுமே பாதுகாப்பு பலமாக இருக்கும்.

எத்தனை பாதுகாப்புகள் இருந்தாலும் காலை முதல் இரவுவரை அ.தி.மு.க. தொண்டர்கள் ஜெயலலிதாவை பார்ப்பதற்காக வீட்டு அருகில் காத்து கிடப்பார்கள். வீட்டில் இருந்து வெளியே செல்லும்போதும், வீட்டுக்கு வரும்போதும் ஜெயலலிதாவின் கார் மெதுவாக செல்லும். தொண்டர்களை பார்த்து அவர் கையசைத்து விட்டு செல்வார்.

இப்படி நீண்ட நாட்களாகவே தமிழக அரசியல் களத்தின் தவிர்க்க முடியாத மையமாகவே காட்சி அளித்த போயஸ்கார்டன் பகுதி ஜெயலலிதாவின் மரணத்துக்கு பிறகு ஆள் அரவமற்று களை இழந்து காணப்பட்டது. தொண்டர்கள் கூட்டம் இல்லாமல் போலீஸ் மட்டுமே காவலுக்கு இருந்தார்கள்.

ஜெ.,மரணத்திற்கு முன்புவரை மிக பரபரப்பாக காணப்பட்ட போயஸ்கார்டன் பகுதி மீண்டும் பரபரப்பாக மாறும் சூழலை நடிகர் ரஜினிகாந்த் ஏற்படுத்தி இருக்கிறார்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக இதே வருவார்… அதோ வருவார் என எதிர்பார்க்கப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்போது அரசியல் ஆசையை வெளிப்படுத்தி விட்டார்.

அதிலும் பொதுவாக நடிகர்கள் அரசியலுக்கு வரும் போது தனக்கென கட்சி, கொடி, சின்னம் என இதையெல்லாம் வைத்துக்கு கொண்டு வருவார்கள். ரஜினி இதிலும் வித்தியாசம் தான்… இத்தனை ஆண்டுகள் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என குழம்பி இருந்த தொண்டர்கள் ரஜினியின் அரசியல் அறிவிப்பால் தெளிவடைந்திருக்கிறார்கள்.

ஆனால் அதே நேரம் முழு நேர அரசியல்வாதிகளாக தனது ரசிகர்களை மாற்ற கால அவகாசமும் கொடுத்திருக்கிறார்.

தமிழக அரசியல் களத்தில் மிக தீவிரமாக செயலாற்றி வந்த ஜெயலலிதா இப்போது இல்லை… கலைஞர் கருணாநிதி வயது மூப்பின் காரணமாக தீவிர அரசியலில் இல்லை.

இந்த சூழலில் தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டதோ என்று எண்ணும் அளவுக்கு ஆளாளுக்கு அரசியல் ஆசையை காட்டத்தொடங்கினார்கள்.
உலக நாயகன் கமல்ஹாசன், நடிகர் விஷால் இருவருமே அடுத்தடுத்து அரசியல் களத்திற்கு வரத்தயார் ஆனார்கள்.

கமல் அரசியலுக்கு வந்து விட்டேன் என அறிவித்தாலும் கட்சியின் பெயரையோ சின்னமோ கொடியோ அறிவிக்கவில்லை… விஷால் ஒருபடி மேலே போய் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட மனு செய்து பரபரப்பை அதிகப்படுத்தினார்.

இந்த நிலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டு அருகில் வசித்து வரும் தமிழ் திரைஉலகின் சூப்பர் ஸ்டார் ரஜினி, அரசியலில் குதித்துள்ளார்.

இதனால் போயஸ் கார்டன் பகுதி மீண்டும் பரபரப்பை எட்டியுள்ளது. அரசியல் அறிவிப்புக்கு பின் புத்தாண்டின் முதல் நாளான இன்று காலை வீட்டு முன் திரண்டிருந்த ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார் ரஜினி.

 

566 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன