
ரஜினிகாந்த் கடந்த ஆண்டு கடைசி நாளில் தான் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக அரசியல் களத்தில் பல கருத்துக்கள் பேசப்பட்டு வருகிறது.

அதிலும் தான் ஆன்மீக அரசியலில் ஈடுபடப்போவதாக ரஜினி அறிவித்தது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
ரசிகர்கள் சந்திப்பின் கடைசி நாளில் ரஜினியின் ஆஸ்தான ஆன்மீக குருவான பாபா முத்திரையை ரஜினி காண்பித்தார். அதைத்தொடர்ந்து பாபா முத்திரைதான் ரஜினி கட்சியின் சின்னமாக இருக்கக்கூடும் என பேசப்பட்டது.

ரஜினி ரசிகர்கள் சந்திப்பு நடந்த மேடையில் பாபா முத்திரை வைக்கப்பட்டிருந்தது. வெண்மையான தாமரை முன்பாகவும், அதன் பின்னால் பாபா முத்திரையும் இருந்தது. இந்த முத்திரையை சுற்றி நாகம் இருப்பது போலவும், முத்திரையின் மேலே ஒரு பக்கம் நாகத்தின் தலை படமெடுக்கும் நிலையிலும், இன்னொரு முனை வால் பகுதியாகவும் காணப்பட்டது.

நல்ல வேளை நாகம் எந்த அரசியல் கட்சியின் சின்னமாகவும் இல்லை. அதே நேரம் இந்துக்களின் வணங்கும் கடவுளாக நாகம் பார்க்கப்படுகிறது. தமிழகம் மதசார்பின்மை கொண்ட மா நிலம். இங்கே அரசியல் செய்யும் யாரும் வெளிப்படையாக ஆன்மீகத்தில் ஒரு நிலைப்பாடு எடுத்ததில்லை. ரஜினி ஆரம்பிக்கும் போதே ஆன்மீக அரசியல் என ஒரு பட்டாசை கொளுத்தி மதசார்பின்மை அரசியல் மீது எறிந்திருக்கிறார். அது வெடிக்குமா… நமுத்துப்போகுமா என்பதும் ரஜினியின் தீவிர அரசியல் நடவடிக்கைகளில் தெரிந்து விடும்.

ரஜினி அரசியலுக்கு தனிக்கட்சியாக வருவேன் என அறிவித்திருக்கிறார். அதே நேரம் அவரின் பாபா முத்திரை ஒரு தாமரையின் மீது இருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

மத்தியில் ஆளும் பா.ஜ. அரசின் சின்னமான தாமரையின் மீது ரஜினியின் பாபா முத்திரை இருப்பதால் பாஜவின் துணையோடு ரஜினி அரசியலுக்கு வருகிறாரோ என்ற சந்தேகம் ஏற்பட்டது.
இந்த நிலையில் திடீரென பாபா முத்திரையில் இருந்த தாமரை திடீரென மாயமாகி இருக்கிறது. ரசிகர் மன்றத்தில் ஆள் சேர்க்க ரஜினி காந்த் அனுப்பிய லெட்டர் பேடில் இருக்கும் பாபா முத்திரையில் தாமரை இல்லை.

பாஜகவோடு ரகசிய உடன்பாடு என்ற குற்றச்சாட்டை எழுந்ததுமே ரஜினி நீக்கி இருக்கிறார்.
ஆன்மீக அரசியல் எந்தளவுக்கு போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
