ஞாயிற்றுக்கிழமை, மே 24
Shadow

வேகமெடுக்கும் ரஜினி அரசியல்… தாமதமாகும் கமல் அரசியல்… -கோடங்கி

வேகமெடுக்கும் ரஜினி அரசியல்…
தாமதமாகும் கமல் அரசியல்… -கோடங்கி

நடிகர் கமல்ஹாசன் டுவிட்டர் பக்கம் மூலம் சமூக பிரச்சினைகள் பற்றி கடும் விமர்சனம் செய்து வந்தார். அதைத் தொடர்ந்து தமிழக அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்தார். அரசியல் அறிவிப்புக்கு பிறகு ஒரு காலை நேரத்தில் கொசஸ்தலை ஆற்றில் மாசு ஏற்பட்டுள்ளதைப் பார்த்து அதிரடி ஆய்வு செய்தார். அரசியலுக்கு முன்னோட்டமாக மையம் விசில் என்ற ஆப் ஒன்றை அறிமுகம் செய்தார்.
கமல் அரசியல் அறிவிப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும் பரவலாக காணப்பட்டது. அதன் பிறகு திடீரென கமல் அரசியல் கருத்துக்கள் எதையும் பதிவிடாமல் அமைதியானார். அதற்கு காரணம் விஸ்வரூபம்-2, சபாஷ் நாயுடு படங்களை முடித்துக் கொடுக்க வேண்டிய சூழல்.
இதற்காக கமல்ஹாசன் இப்போது அமெரிக்காவில் இருக்கிறார். இந்த சூழலில் யாரும் எதிர்பாராத வகையில் புதிய புயலாக நடிகர் ரஜினி அரசியல் பிரவேசம் செய்துள்ளார்.


கடந்த மாதம் 26ம் தேதி முதல் 31ம் தேதிவரை ரசிகர்களை சந்தித்த ரஜினி கடைசி நாள் அன்று தான் அரசியல் கட்சி தொடங்கப்போவதாகவும் , தனிக்கட்சியாக அடுத்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் என்றும் அறிவித்தார். நேர்மையான ஆன்மீக அரசியல் நடத்தப்போவதாக அறிவித்தார் ரஜினி.
ரசிகர்கள் உடனடியாக தங்கள் மன்ற உறுப்பினர்களையும், தன்னோடு அரசியல் பயணத்தில் வர விரும்பும் பொதுமக்களையும் உறுப்பினர் ஆக்க ஒரு இணைய தளத்தையும் தொடங்கினார். ரஜினி அறிவித்த சில தினங்களில் 50 லட்சம் பேர் அதில் இணைந்திருக்கிறார்கள்.


அடுத்த கட்டமாக முக்கிய ஊடக , தொலைக்காட்சிகளின் ஆசிரியர்கள், செய்தியாளர்களை தனியாக சந்தித்தார். அரசியல் அறிவிப்பு செய்ததும் தனது பாபா முத்திரையில் இருந்த தாமரை சின்னததை நீக்கினார். தாமரை ஆளும் பாஜக சின்னம் என்பதால் எழுந்த விமர்சனத்துக்கு உடனடியாக தீர்வு கண்டார்.
அரசியலுக்கு வருகிறேன் என ரஜினி அறிவித்தாலும் இன்னமும் கட்சியின் பெயரையோ, சின்னம், கொடி என எதையும் அறிவிக்கவில்லை.
அப்படியிருந்தும் திமுக தலைவர் கருணாந்தியை கோபாலபுரம் சென்று பார்த்து நலம் விசாரித்து திரும்பும் போது “கட்சி தொடங்குவதால் கருணாந்தியிடம் ஆசி பெற்று திரும்பினேன்” என்றார்.

அதன் பிறகு அதிமுகவின் முக முக்கிய தலைவராக இருந்து எம்ஜிஆர் அமைச்சரவையில் முக்கிய பங்கு வகித்து இப்போது தனி கழகம் நடத்தி வரும் ஆர்.எம்.வீரப்பனை அவரது வீட்டிற்கு போய் சந்தித்தார்.
தனது ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்து வரும் அவர் 14-ந்தேதி பொங்கலன்று புதிய கட்சியின் பெயர், கொடி, சின்னம் விவரங்களை அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.
ரஜினி அரசியலில் தீவிரமாக செயல்பட தொடங்கி இருப்பதால், நடிகர் கமல்ஹாசனின் அரசியல் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்று மக்கள் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது. ரஜினியின் அரசியல் பிரவேசத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம் இருக்கும் என்று கூறப்பட்டது.


ஆனால் இப்போது நடிகர் கமல்ஹாசன் கட்சித் தொடங்குவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதற்கு விடை அளிப்பது போல தற்போது கமல்ஹாசன் கருத்துகள் வெளியிட்டுள்ளார். வார இதழ் ஒன்றில் தொடர் எழுதி வரும் கமல் அதில் இது தொடர்பாக கூறி இருப்பதாவது:-
டுவிட்டரில் அடிக்கடி அரசியல் பற்றிக் கோபப்பட்டுக் கீச்சிக் கொண்டிருப்பது மட்டுமே என் வேலையன்று. ஆமாம், அந்தக் கோபத்தை வெறும் கோபமாக மட்டுமே வைத்திருப்பதிலும் அர்த்தமில்லை. அதைக் கட்டுப்படுத்தி, விவேகத்தோடு செயலாக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. அதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கும் போது இனி அதிகம் பேசிப் பயனில்லை.
‘இவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும’ என்பதையே திரும்பத் திரும்ப வெவ்வேறு வார்த்தைகளில் தொடர்ந்து சொல்லிக் கொண்டு மட்டுமே இருப்பதில் அர்த்தம் இல்லை.
‘நாங்கள் எந்தப்பாதையில் நடப்பது என்று தெரியவில்லை’ என்று அவர்கள் சொன்னால் நான் பாதையைக் காட்டலாம். அதே பாதை கொஞ்சம் கரடுமுரடாக இருக்கிறதே என்றால் நான் அவர்களுக்குச் செருப்பாகலாம். இவ்வளவு தான் நான் பண்ண முடியும்.
மீம்ஸ் போட்டு, ட்வீட் போட்டுக் கிண்டலடிக்க வேண்டிய நேரங்கள் முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றன.
ட்வீட் பண்ண என் கைகள் துடிக்கின்றன. கோபத்தில் வந்த வார்த்தைகளுக்கு ஆயிரம் அர்த்தங்கள் சொல்வார்கள் என்பதால் என்னை நானே கட்டுப்படுத்திக் கொள்கிறேன். இப்போது நான் செய்து கொண்டிருப்பது எல்லாம், என் சினிமா வேலைகளை எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிக்க வேண்டும் என்பதுதான்.
‘நான் என் சினிமா வேலைகளை முடித்துக் கொண்டு அரசியலுக்குள் செல்கிறேன்’ என்று சொல்வதை அமெரிக்காவில் மிகப்பெரிய சோகமாகப் பார்க்கிறார்கள். என் முடிவை மாற்றி சினிமாப்பக்கமே என்னை மீண்டும் மடைமாற்ற, எல்லோரும் என்னையும் என் கலையையும் வியந்து வியந்து பேசுகிறார்கள்.
அமெரிக்காவில் உள்ள நல்ல தொழில் வாய்ப்புகளைப் பட்டியலிடுகிறார்கள். ‘இங்கே வந்துவிடுங்கள்’ என்று அழைக்கிறார்கள். ஆனால், எனக்கப்படித் தோன்றவில்லை. பரமக்குடியில் பிறந்த பையன், எப்படி சென்னைக்கு வந்தேனோ அப்படித்தான் இந்த சினிமா டு அரசியல் பயணத்தைப் பார்க்கிறேன். அவ்வளவுதான்.
ஆனால், என்ன மாதிரியான அரசியல், எப்படிப்பட்ட அரசியல் என்பதெல்லாம் முக்கியமே கிடையாது. அரசியலுக்கு வரும் அவலத்துக்கு என்னை மாத்திரமன்று, தமிழக மக்களையும் ஆளாக்கி விட்டார்கள். இப்போது எல்லோரும் வந்துதான் ஆகவேண்டும்.
‘எல்லோரும் அரசியலுக்கு வரும் போது, நானும் வருவேன்’ என்று பழைய பேட்டிகளில் பல முறை சொல்லியிருந்தேன். அதையே தான் மறுபடியும் சொல்கிறேன். எல்லோரும் வரவேண்டிய சமயம் வந்துவிட்டது.
எல்லோரும் அரசியலில் புகுந்து நல்லுணர்வோடு, நேர்மையோடு செயல்படவில்லை என்றால், உங்களுக்கு நிகழப்போகும் விபத்துகள், அபாயங்கள் எல்லாவற்றுக்கும் நீங்கள் தகுதியானவர்கள். ‘நீ என்ன பெரிய ரிஷியா, சாபம் கொடுக்குற’ என்று கேட்கலாம். சாபம் கொடுக்கவில்லை, வரும்முன் சொல்கிறேன்.
இன்று தமிழக மக்கள் தூங்குவது போல் நடிக்கிறார்கள். அவர்களை என்ன பண்ணியாவது துயிலெழுப்பி, ‘நடிக்காதே, வா… இது உன்னுடைய வேலையும்தான்’ என்று கூட்டிக் கொண்டு போக வேண்டிய வேலையில் அவனுக்கு முன்னதாக எழுந்த சக மனிதர்கள், சக தோழர்கள் அனைவருக்கும் பங்குண்டு. இந்த முயற்சியில் தோற்றாலும் வெற்றிதான்.
எல்லா நேரங்களிலும் ரூபாய் வெல்வது என்பது நடக்காது. ரூபாயை மட்டும் வைத்துக் கொண்டு வாழ முடியாது. என்னுடைய ஆதங்கமும், அவமானமும் தாங்கொணாதது. மண்ணில் தலைபுதைக்கும் நேரம் இதுவன்று. எழுந்து தலையைச் சிலுப்பிக் கொண்டு எல்லாத் தமிழ் மக்களும் ஒருவரை ஒருவர் எழுப்பிவிட வேண்டும்.
அவர்களுடைய வறுமை, தவறுகளையெல்லாம் செய்ய வைக்கிறது. அதிலிருந்து அவர்களை மீட்கச் செய்வதற்கு, திருடர்கள் திருடுவதை இல்லாமலேயே போக வைக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால், அவர்கள் அள்ளிக் கொண்டு இருந்ததில் 50 சதவீகிதம் குறைத்துக் கொண்டால் தமிழகம் முன்னேறிவிடும்.
ஓட்டுக்கு லஞ்சமாக மக்களுக்குக் கொடுக்கக் கூடிய பணத்தை மக்களுக்கு அவர்கள் அர்ப்பணித்தாலே போதும், தமிழகத்தின் பாதி சோகங்கள் தீர்ந்துவிடும். இதுதான் நிஜம் என கூறியிருக்கிறார்.
வழக்கம் போல படிக்கிறவர்களை குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிற கமலின் இந்த பதிவால் கமலின் அரசியல் பயணம் உடனடியாக இல்லை என்பது தெளிவாகிறது.


விஸ்வரூபம்-2, சபாஷ் நாயுடு படங்களை முடித்து ரிலீஸ் செய்ய பல மாதங்கள் ஆகும் அதன் பிறகே கமல் அரசியல் சூடு பிடிக்கும் என்பதால் இப்போதைக்கு தாமதமாகிறது கமல் அரசியல். அதே நேரம் வேகமெடுக்கிறது ரஜினி அரசியல்.
தமிழக மக்கள் மொழி, மத பேதமின்றி பல அரசியல் தலைவர்களை உருவாக்கி இருக்கிறார்கள். அதில் காமராஜர், முத்துராமலிங்க தேவர், எம்ஜிஆர் போன்று சிலரை கடவுளாகவும் கொண்டாடுகிறார்கள்.
அப்படி கடவுளாக கொண்டாடப்படும் அரசியல் தலைவர்கள் கூட ஆன்மீக அரசியல் என அறிவித்து நடத்தியதில்லை. மதசார்பு இல்லாத அரசியல்தான் நடத்தியிருக்கிறார்கள். அப்படியிருக்கும் போது பல ஆண்டுகளாக அரசியலுக்கு வரமாட்டாரா என காத்திருந்த நிலையில் ரஜினி அரசியல் அறிவிப்பை வெளியிட்டார். அதோடு இதுவரை எந்த அரசியல் தலைவர்களும் சொல்லாத ஆன்மீக அரசியல் என்ற புது பாணியை அறிவித்திருக்கிறார். அது எப்படியிருக்கும் என்பதே இப்போதைய கேள்வி…
முறைப்படி அரசியல் கட்சியின் பெயர், சின்னம், கொடி பொறுப்புகள் என ஒவ்வொன்றாக வரும் போது அதற்கான விடை கிடைக்கும் என நம்பலாம்… காத்திருப்போம்.

– கோடங்கி

363 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன