செவ்வாய்க்கிழமை, மே 19
Shadow

சினிமா நாடகம் என்றாலே என் அண்ணன் பெல்ட் அல்லது கையில் எது கிடைக்கிறதோ அதை எடுத்துக் கொண்டு என்னை அடிக்கத் துரத்துவார் – “ராபர்” பட இசை வெளியீட்டு விழாவில் பாக்யராஜ்

“ராபர்” படத்தின் இசை வெளியீட்டு விழா!

பெண் பத்திரிகையாளர் கவிதாவின் தயாரிப்பில் , பெண்கள் பிரச்னைகளை மையமாக கொண்டு உருவாகியிருக்கும் படம் ராபர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் (07.03.2025) அன்று நடைபெற்றது

இயக்குனர் பாக்யராஜ் சார் பேசும்போது,

முதலில் சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலனுக்கு தான் நன்றி கூற வேண்டும். ஏனென்றால் ஒரு படத்தை எடுப்பது பெரிதல்ல அதை வெளி கொண்டு வருவதற்கு முதுகெலும்பு போல இருந்து ஆதரவு தர வேண்டும். அந்த வேலையை சக்தி செய்து இருக்கிறார். அதில் முதல் தயாரிப்பாளருக்கு அவர் இந்த ஆதரவு கொடுத்ததில் மகிழ்ச்சி. என்னை விட சாந்தனுவிற்கு தான் மிகவும் பழக்கம். அவர்கள் இருவரும் தான் அடிக்கடி கோயம்புத்தூரில் சந்தித்துக் கொள்வார்கள். நான் எப்போதாவது இதுபோன்ற விழாவில் தான் சந்திப்பேன்.
கவிதா இப்படத்தை தயாரித்திருப்பதை கேட்டதும் ஆச்சரியமாக இருந்தது. அவர் தமிழில் நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதை பற்றி நான் எப்போதும் பேசிக் கொண்டிருப்பேன். நம்மிடம் இல்லாத ஒன்று, அவர் சிறப்பாக தமிழ் பேசுகிறார். அவரின் தமிழ் உச்சரிப்பு இலக்கண சுத்தமாக இருக்கும். கவிதா ஒரு படம் தயாரித்திருக்கிறார் என்று கேட்டதும் எனக்கு ஒன்றும் புரியவில்லை. இங்கு வந்த பிறகு தான் அவர் இதற்கு முன்பே 3 குறும்படம் எடுத்திருக்கிறார் என்று தெரிந்தது. சின்ன மீனை போட்டு பதம் பார்த்து விட்டு தான் வணிக ரீதியாக படமே தயாரிக்கலாம் என்று வந்திருக்கிறார். நாளை தான் மகளிர் தினம். ஆனால், இன்றே சக பத்திரிக்கையாளர்களையும் மேடை ஏற்றி கௌரவித்திருக்கிறார் என்பதில் மகிழ்ச்சி. மூத்த பத்திரிக்கையாளர் அதேசமயம் என்னுடன் பாசமாக பழகும் செல்வம் சாரை நீண்ட வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மக்கள் தொடர்பாளராக இந்தப் படத்திற்காக அழைத்திருக்கிறார் என்பது மனதிற்கு நெகிழ்வாக இருந்தது.

இம்ப்ரெஸ் பிலிம்ஸ் மாதிரி படத்தின் பேரும் இம்ப்ரெஸ்ஸாக தான் இருக்கிறது.

கவிதா என்னைப் பற்றி பேசும்போது, பாக்யராஜ் சார் படம் என்றால் சண்டை காட்சிகளை எதிர்பார்த்து போகக் கூடாது, நடனத்தை எதிர்பார்த்து போகக் கூடாது, நடிப்பை எதிர்பார்த்து போகக் கூடாது, கதையை மட்டும் எதிர்பார்த்து போகலாம் என்று கூறினார். அப்படி என்றால் கதையைத் தவிர மீதி எதுவுமே இல்லை என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறார். (என்னைப் பற்றி இப்படி பிரமாதமாக வாழ்த்தி பேசியதற்கு நன்றி என்று கவிதாவை கலாய்த்தார்)

இந்த நிகழ்ச்சி இவ்வளவு நேரம் நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அடுத்த நிகழ்ச்சிக்கான நேரம் வந்து விடும். அவர்கள் வந்து இடையூறு செய்வார்கள் என்று நினைத்திருந்தேன் ஆனால் இதுவரை அப்படி எதுவும் நடக்காதது மகிழ்ச்சி.

ரீ எண்டரி ரம்பா என்று தாணு சார் சொல்லி விட்டு போனார். நானும் தயாராகத்தான் இருக்கிறேன் வாருங்கள் ரம்பா.

கவிதாவிற்கு இவ்வளவு பேர் வந்து ஆதரவு கொடுப்பதற்கு காரணம் அவருடைய நல்ல குணம்தான். சும்மா எல்லோரும் முன்னுக்கு வந்துவிட முடியாது. ஆணுக்குப் பின் பெண் இருக்கிறாள் என்பது போல, கவிதாவிற்கு பின் பல ஆண்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோருமே நல்ல விதத்தில் ஆதரவு கொடுத்திருக்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சி.

சத்யாவை பார்ப்பதற்கு பொறாமையாக இருக்கிறது. சினிமா நாடகம் என்றாலே என் அண்ணன் பெல்ட் அல்லது கையில் எது கிடைக்கிறதோ அதை எடுத்துக் கொண்டு என்னை அடிக்கத் துரத்துவார்கள். அண்ணன் சினிமாவிற்கு வந்த பிறகுதான் ஏற்றுக் கொண்டார்கள். ஆனால், சத்யாவிற்கு அப்படி அல்லாமல் அண்ணன் உறுதுணையாக இருக்கிறார். கூடவே கவிதாவும் இருக்கிறார். இதுதான் கொடுப்பினை. மெட்ரோ படத்தை பார்த்தேன். அதில் சத்யா வலிமையாக நடித்திருப்பார். ஆனால், நேரில் பார்க்கும்போது சிறிதும் சம்பந்தமில்லாமல் இருக்கிறார். என்னைவிட வெகுளியாக இருக்கிறார். இந்த ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இப்படத்திற்கு இசையமைத்த ஜோகன் முதல் இந்த படத்திற்காக பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்கு பிடித்த திருட்டு காட்சிகள் சில இருக்கிறது. சிவாஜி நடித்த திருடன் படத்தில், ஒருவன் நகை பணத்தோடு வருகிறான். இரவு நேரத்தில் அவனிடமிருந்து அதை திருடலாம் என்று கூறும் போது, இல்லை இல்லை காலை 10:30 மணிக்கு தானே எடுத்து வருகிறார்? சாலையில் வைத்து அப்போதே திருடி விடலாம் என்று சிவாஜி சொல்வார். அது எப்படி முடியும் என்று கேட்டதற்கு, ஒரு கேமரா, 2 ஆட்களை மட்டும் கூட்டி வாருங்கள் என்பார். அதேபோல் அவர் சாலையில் நிற்பார்கள். அதை பார்த்த அங்கிருந்த மக்கள் எதற்காக இப்படி நிற்கிறீர்கள் என்று கேட்பார்கள். நாங்கள் படப்பிடிப்பு நடத்துகிறோம். நீங்களும் நடிக்கலாம் என்பார். இப்போது ஒருவன் நகை பணம் எல்லாம் எடுத்துக் கொண்டு வருவான் அவனை தடுத்து நிறுத்தி அவனிடம் இருக்கும் பணம் நகைகளை எடுத்துக் கொண்டு ஓடுவோம். அப்போது அவன் ஐயோ திருடன் திருடன் என்று கத்தும் போது, நீங்கள் எல்லோரும் ஏன்டா வட்டிக்கு வட்டி விட்டு இவ்வளவு சம்பாதிச்சல்ல! அதுதான் இப்படி அநியாயத்திற்குப் போகிறது என்று சொல்லி அவனைப் பிடித்து
கம்மியாக அடித்து அங்கேயே உட்கார வைத்து விடுங்கள். இவ்வாறு அந்த படத்தில் சிவாஜி சார் திருடி கொண்டு போவார். அந்தக் காட்சி நான் ரொம்ப ரசித்த காட்சி. அந்த இடத்தில் இருக்கும் புத்திசாலித்தனமும் சமயோசித புத்தியும் எனக்கு பிடித்திருந்தது.

இதே போல நிஜ வாழ்க்கையிலும் கூறுவார்கள். பொதுவாக வருமான வரித்துறையினர் வந்தாலே நமக்கு பதட்டமாக இருக்கும். அப்படி ஒரு முறை நடிகர் எம் ஆர் ராதா வீட்டிற்கு சென்று விட்டார்கள். உடனே எம் ஆர் ராதா அவர்கள் சாலையில் வந்து அய்யய்யோ என் வீட்டில் திருடர்கள் புகுந்து விட்டார்கள். கத்தியை காட்டி மிரட்டுகிறார்கள் நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் என்று சத்தமிட்டார். இதைக் கேட்ட மக்கள் நமது எம்ஆர் ராதா வீட்டில் திருடன் புகுந்து விட்டார்கள் என்று வருமானவரித்துறையினரை நன்றாக அடித்துவிட்டார்கள். அவர்கள் அடித்துக் கொண்டிருக்கும் போது, எம் ஆர் ராதா அவர்கள் ஒரு பெட்டியில் நகைகள், பணத்தை காரில் வைத்து பத்திரமாக எடுத்து கொண்டு போய் விட்டார். அன்றிலிருந்து தான் காவல்துறையினர் இல்லாமல் வருமானவரித்துறையினர் செல்லக்கூடாது என்ற வழக்கம் வந்தது.

திருடர்கள் என்று சொன்னால் ஒரு புத்திசாலித்தனம் வேண்டும். முதலில் திருடும் ஒருவன் தெளிவாக திட்டமிட்டு திருடி செல்வான். அதன்பின் காவல் துறை அதிகாரிகள் வந்து, இதை செய்தது யார்? எப்படி வந்திருப்பார்? இதை செய்தது பழைய திருடனா? அல்லது புதிதாக வந்த ஒருவனா? என்று விசாரித்து திருடனை கைது செய்துவிடுவார். அதனால், திருடனை விட போலீஸுக்கு அதிக மூளை வேண்டும். அதன் பின் இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு செல்லும். அங்கு இந்த வழக்கை விசாரிக்கும் வழக்கறிஞருக்கு, திருடன் மற்றும் போலீசை விட அதிக மூளை வேண்டும். சில சமயங்களில் அவர்கள் அந்த வழக்கையே வேறு திசையில் திருப்பிவிட்டுவிடுவர்.

இவர்கள் அனைவரையும் விட மோசமான மூளை யாருக்கு இருக்கும் என்றால் ஒரு எழுத்தாளருக்கு தான் இருக்கும். நம் ஆனந்த கிருஷ்ணன் மற்றும் என்னை போன்றவர்களை குறிப்பிடுகிறேன். ஏனென்றால், இது அனைத்தையும் உருவாக்குவது யார் என்றால் அந்த எழுத்தாளர் தான். திருடன் எப்படி திருடினான், அவனை போலீஸ் எப்படி பிடித்தது, அந்த வழக்கை எப்படி வாதாடினார்கள் என அனைத்தையும் எழுதினால் தான் ஒரு எழுத்தாளருக்கான அங்கீகாரம் கிடைக்கும்.

நான் ஆனந்த கிருஷ்ணன் எழுதிய “மெட்ரோ” படம் பார்த்தேன். நான் எடுக்கும் கதை வேறு, நான் பார்க்கும் கதை வேறு. என்னுடைய லைப்ரரியன் கூட பூர்ணிமாவிடம் “மேடம் அவர் கத்தி, சண்டை, அருவா இருக்கும் படங்களாக எடுத்து செல்கிறார். ஆனால், அவர் எடுக்கும் படங்கள் வேறு மாதிரி உள்ளதே” என்பார். நான் பார்க்கும் சினிமாவில் சண்டைக் காட்சிகள் இருந்தால் தான் எனக்கு பிடிக்கும். அப்படி இருக்க, ஆனந்த கிருஷ்ணனின் முதல் படமான மெட்ரோ பார்க்கும் போது, அதில் திட்டமிடல், கண்டுபிடிக்கும் விதம் என அனைத்தையும் கட்சிதமாக செய்திருந்தார். சினிமாவில் ஒரே ஒரு விஷயம் தான். ஒன்று புதிதாக ஒரு விஷயம் சொல்ல வேண்டும். இல்லை என்றால் ஒரு விஷயத்தை புதிதாக செய்ய வேண்டும். அப்படி தான் அவரின் மெட்ரோ படத்தின் திரைக்கதை இருந்தது. அந்த படத்தில் அம்மா, அண்ணன் தம்பி சென்டிமென்ட் என அனைத்தையும் வைத்து ஆனந்த கிருஷ்ணன் சிறப்பாக செய்திருந்தார். அப்போது நான் அவரை தொடர்பு கொண்டு வாழ்த்து சொன்னேன், இப்போது தான் அவரை முதல் முதலாக நேரில் சந்திக்கிறேன்.

இந்த படத்திற்கு அவர் “ராபர்” என பெயர் வைத்திருக்கிறார். அது இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஏனென்றால், ஒரு திருடன் எப்படி திருடுகிறான், அதை போலீஸ் எப்படி கண்டுபிடிக்கிறது என்பதை விரிவாக சொல்லியிருப்பார். அதே போல் ஆனந்த கிருஷ்ணனுக்கு வாழ்த்து சொல்ல வேண்டும், ஏனென்றால், அவர் தனது உதவியாளருக்கு தன் கதையை கொடுத்து படத்தை இயக்க சொல்லியுள்ளார். பெரும்பாலும் இப்படி ஒரு செயலை செய்வது கொஞ்சம் கடினமாக தான் இருக்கும். அதை கவிதாவும் ஏற்றுகொண்டு படத்தை தயாரித்தது என்பது சரியான புரிதல் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். இது சினிமாவில் மிக ஆரோக்கியமான விஷயம், நானே கூட பார்த்திபனின் முதல் படத்திற்கு தயாரித்து பூஜை கூட செய்தேன், வேறு சில காரணங்களால் படத்தை எடுக்க முடியாமல் போனது. பிறகு நானே தான் பாண்டியராஜனுக்கு என்னுடைய பேனரில் கதை எழுதிக் கொடுத்து இயக்கம் செய்ய வைத்தேன். இது போன்ற புரிதல் இயக்குனருக்கும், உதவி இயக்குனருக்கும் இருக்க வேண்டும்.

எந்த அளவிற்கு தனது உதவியாளர் மீது நம்பிக்கை வைத்திருந்தால் ஆனந்த கிருஷ்ணன் கதையையும் கொடுத்து, படத்தை தயாரிக்கவும் செய்திருப்பார் என்பதை நினைத்தால் மிக சந்தோஷமாக உள்ளது. இப்படத்தை தயாரித்த கவிதாவிற்கும் பெரிய வெற்றி கிடைக்க வேண்டும். மீண்டும் இப்படத்தின் வெற்றி விழாவில் சந்திப்போம், நன்றி என்றார்.

199 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன