
தயாரிப்பாளர் தாணு, நடிகர்கள் தியாகராஜன்,பாக்யராஜ், அம்பிகா,ரம்பா கலந்து கொண்ட “ராபர்” படத்தின் இசை வெளியீட்டு விழா!
நடிகை ரம்பா பேசும்போது,
நான் ரகசியமாக வைத்திருந்ததை தாணு சார் எல்லோர் முன்னாடியும் போட்டு உடைத்து விட்டார். நீண்ட நாட்களுக்கு பிறகு எனக்கு தெரிந்தவர்கள் அனைவரையும் ஒன்றாக இங்கு பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
தயாரிப்பாளர், இயக்குனர் என்று யாராக இருந்தாலும் எங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது பத்திரிகையாளர் தான். அவர்கள் பின்னாடி இருந்து கொண்டு எங்களை முன்னாடி கொண்டு வந்து ஆதரவு தருவார்கள்.
அப்படி பெண் பத்திரிகையாளராக இருந்து, ஒவ்வொரு படியாக சொந்த உழைப்பில் ஒரு படத்தை தயாரித்திருப்பது பெருமையாக இருக்கிறது. கவிதா எப்போது அழைத்தாலும் நான் வருவேன்.
இந்த படம் சிறிய படம், பெரிய படம் என்று இல்லை, எனக்கு நல்ல படமாகத் தான் தோன்றுகிறது. டிரைலர் பார்க்கும் போதே கதை, திரைக்கதை அனைத்தும் நன்றாக இருக்கிறது.
எல்லா படத்திற்கும் ஆதரவு தருவது போல் இந்த நல்ல படத்திற்கும் ஆதரவு கொடுத்து மக்களிடம் சேர்த்து வெற்றி படமாக கொண்டு வருவீர்கள் என்று நம்பிக்கை இருக்கிறது. படகுழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார்.
தயாரிப்பாளர் எஸ். தாணு பேசும்போது,
கவிதா என் மகள் மாதிரி. அவருடைய தமிழ் ஆர்வம் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. அவர் நேரில் பேசினால், சொல் புதிதாக இருக்கும். சொல்லின் பொருள் புதிதாக இருக்கும். சொல்லின் சுவை பெரிதாக இருக்கும். அப்படிப்பட்டவர் ஒரு படத்தை தயாரித்திருக்கிறேன் என்று நேற்று முன்தினம் தான் கூறினார்.
முன்பே கூறியிருந்தால் பொருளாதாரத்தில் நிறைய மிச்சம் பண்ணி கொடுத்திருப்பேன் என்றேன். என் சகோதரன் தான் இந்த படத்தில் நாயகனாக நடிக்கிறார். ஆகையால், அவரை வந்து நீங்கள் வாழ்த்த வேண்டும் என்றார். நீ எங்க சொன்னாலும் நான் வருவேன் என்றேன்.

ஒரு பெண்ணாக, பத்திரிக்கையாளராக இருந்து கொண்டு, பத்திரிக்கை உரிமையாளர்களுக்கு மிகவும் பாத்திரமான பெண்மணியாக தான் இந்த பெண்ணை நான் பார்க்கிறேன். தினமலர் ரமேஷ் சாரும், ஆதிமூலம் சாரும் இந்த பெண்மணி மூலமாகத்தான் அவர்களின் எண்ணங்களையும், எழுத்துக்களையும் கூறுவார்கள். அவர்களுடைய கோவில் திருப்பணிக்கு உற்றத் துணையாக இந்த பெண்மணி வாய்த்திருக்கிறார்.
அப்படிப்பட்டவர் இப்படத்தை தயாரித்திருப்பது சிறப்பான ஒன்று. பாக்யராஜ் சாரை நான் என்றென்றும் போற்றி புகழக்கூடியவன். அவர் பக்கத்தில் அமர்ந்திருக்கும் ரம்பாவின் கணவர் 2000 கோடிக்கு சொந்தக்காரர். அவர் இந்த மேடையில் அமர்ந்திருக்கும் போது என் கண்கள் பனிக்கிறது.
ரம்பாவின் கணவர் இந்திரன் கடந்த வாரம் எனக்கு போன் செய்து, அப்பா உங்கள் ஆசீர்வாதத்தில் என் மனைவியுடன் நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். என் மனைவிக்கு வீட்டிலேயே இருப்பது உறுத்தலாக இருக்கிறது என்று நினைக்கிறேன். ஆனால், அவர் என்னிடம் எதுவும் சொல்லவில்லை என்றார். நல்ல கம்பெனிகளை நான் சொல்கிறேன். அதற்குள் நீ அவசரப்பட்டு படம் எடுத்து விடாதே என்று கூறினேன்.
ரம்பா, சினிமாவில் உன் வரவு நல்வரவாக இருக்கும் என்று அப்பாவாக வாழ்த்துகிறேன். அம்பிகா மேடமை என் படங்களில் நடிக்க வைக்க பலமுறை முயன்று நடக்காமல் போய்விட்டது. ஏதாவது காரணத்தினால் ஒரு படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு.
தியாகராஜன் சார் தானாக முன் வந்து அவர் மகனை வண்ண வண்ண பூக்கள் படத்திற்காக கொடுத்தார். அந்த படம் தேசிய விருது வென்றது. பிரஷாந்த் என் குடும்பத்தில் ஒருவர். சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேல் இவ்வளவு அருமையாக பேசுவார் என்று நினைக்கவில்லை.
படத்தின் ஒவ்வொரு ஃபிரேமாக எடுத்து பேசும் அளவிற்கு ஒன்றிவிட்டார். அவர் இந்த படத்தை விநியோகிப்பது சால சிறந்தது. படத்தின் நாயகன் வருங்காலத்தில் உயர் சிற்பியாக வருவார் என்று வாழ்த்தி, வாய்ப்புக்கு நன்றி தெரிவித்து விடைபெறுகிறேன் என்றார்.
