வெள்ளிக்கிழமை, ஜூலை 3
Shadow

ப்ரீடம் பட விமர்சனம் 3/5

 

ப்ரீடம் பட விமர்சனம் 3/5

 

உலக அரங்கையே உலுக்கிய ஒரு சம்பவம் 1991ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டால் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டதுதான்.  இந்த சம்பவத்திற்கு பின்னும் முன்னும் இலங்கையில் இருந்து சிங்கள அரச பயங்கரவாத்த்தால் பாதிக்கப்பட்டு அகதிகளாக வந்தவர்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் தங்கவைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களில் 43 பேர் வேலூர் கோட்டையில் விசாரணை கைதிகளாக வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் போலீஸ் கொடுமைகளில் இருந்து விடுதலையாக சுரங்கம் தோண்டி தப்பித்தனர் இவர்களில் 21 பேர் ஒரு சில வாரங்களில் மீண்டும் போலீசிடம் சிக்கினார்கள்.

இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து வலியும் வேதனையும் சோகத்தையும் உள்ளடக்கி உருவாகி இருக்கும் படம் தான் ச்சிக்குமாரின் ப்ரீடம்.

 

கதைப்படி இலங்கையில் இருந்து பலரும் அகதிகளாக இந்தியா வருகிறார்கள். அவர்களில் ஒருவர் கர்ப்பிணியான லிஜிமோல். ராமேஸ்வரத்தில் உள்ள அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவரது கணவரான சசிக்குமாரும் அகதியாக வருகிறார்.

அவர் வந்த சில நாட்களில் ராஜீவ்காந்தி மனித வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்படுகிறார். இந்த படுகொலையை செய்தது ஈழப்போராளிகள் என சந்தேகப்படும் இந்திய அரசு இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருக்கும் பலரை விசாரணைக்கு அழைத்து செல்கிறது. அப்படி ராமேஸ்வரத்தில் இருந்து வேலூர் கோட்டையில் விசாரனைக்கைதியாக சசிக்குமாரும் பலரும் அடைக்கப்படுகிறார்கள்.

 

2 நாளில் விசாரித்து அனுப்பி விடுகிறோம் என சொல்லி முகாமில் இருந்து அழைத்து செல்லப்பட்டவர்களை 2 ஆண்டுகள் ஆன பின்னும் வெளியே விடாமல் அடித்து சித்ரவதை செய்கிறது போலீஸ்.

இந்த கொடுமைகளை தாங்க முடியாமல் ஒரு அகதி தற்கொலை செய்து கொள்கிறார். அதை மறைத்து அந்த அகதியை கூட இருதவர்களே கொலை செய்து விட்டார்கள் என போலீஸ் அதிகாரி பொய்யாக சொல்வதை கேட்டு கொதித்து எழும் சசிக்குமார் அந்த போலீஸ் அதிகாரியை தாக்குகிறார். இதனால் அங்கே கலவரம் ஏற்படுகிறது.

 

இதன் பிறகு போலீஸ் கொடுமையில் இருந்து தப்பிக்க அகதிகள் திட்டமிடுகிறார்கள். அதற்காக ஒரு சுரங்கம் தோண்டி அனைவரும் தப்பிக்கிறார்கள். தப்பித்தவர்கள் சிக்கினார்களா? சசிக்குமார் தன் மனைவி குழந்தையை சந்தித்தாரா? என்பதுதான் கிளைமாக்ஸ்.

மாறன் கதாப்பாத்திரத்தில் சசிக்குமார் மனச்சில் நிற்கிறார். ஈழத்தில் தன் இன பெண்ணுக்கு போலீசாரால் அநீதி நடக்கும் போது கொதித்து எழுந்து அந்த போலீசை வெட்டி சாய்க்கும் ஆவேசத்திலும், அகதியாக சிறைபட்டு அடிபட்டு மிதிபட்டு கொடுமைகளை அனுபவிக்கும் போது “நாங்க என்னய்யா தப்பு செஞ்சோம்”னு ஆதங்கத்தோடு சொல்லும் போதும் சசிக்குமார் கண் முன்னால் தெரியாமல் ஒரு அகதியின் உண்மை வலியை பார்வையாளருக்கு கடத்தி அழ வைக்கிறார் சசி.

அயோத்தி, நந்தன், டூரிஸ்ட் பேமிலி, ப்ரீடம் என படத்துக்கு படம் சசி நடிக்காமல் வாழ்கிறார். சபாஷ் சசி.

 

”ராவணன் மட்டும் சீதைய கடத்தாம இருந்திருந்தா நமக்கு இந்த சாபமே வந்திருக்காது இல்ல’ன்னு கேட்கும் சசி மனைவி லிஜோமோல் கணவர் பிரிந்த சோகத்தை முகத்தில் வைத்து மன வலியை பார்க்கிற நமக்கு கடத்துகிறார். ஒரு அற்புதமான நடிகை என்பதை மீண்டும் நிரூபிக்கிறார் லிஜோமோல்.

 

கொடூர போலீஸ் அதிகாரியாக வரும் சுதேவ் நாயர் மிரட்டல் உருட்டல் ரகம். நல்ல தேர்வு.

 

”தற்கொலைப்படை புலிகள் இயக்கத்துல இருப்பதாலதான அவர்களை சந்தேகப்படுறோம்னு சொல்லும் சிபிஐ அதிகாரிக்கு ”ஜப்பான்ல 1947ல தற்கொலைப்படை தாக்குதல் நடந்துச்சே அத விசாரிக்கணும், இங்க வீரமங்கை வேலு நாச்சியார் படையில இருந்த குயிலி நடத்துன தற்கொலைப்படை தாக்குதலை விசாரிக்கணும்னு”  இன்னொரு சிபிஐ அதிகாரியான ரமேஷ் கண்ணா பேசும் வசனங்களும்,

 

“இன்னும் நரகத்துக்கு எங்க சார் அழைச்சிகிட்டு போயிருவீங்க… இந்த அகதி முகாம் என்ன எங்களுக்கு சொர்க்கமா”ன்னு லிஜோமோல் பேசும் வசனங்களும் என ஏராளமான நிஜத்தை வலியை வேதனையை உண்மையை இயக்குனர் சத்யச்சிவா உரக்க சொல்வதை மறுக்க முடியாது.

 

அகதி முகாம் அதிகாரியாக வரும் போஸ்வெங்கட் ஆகட்டும், விசாரணை அதிகாரிக்கு துணையான போலீஸ் அதிகாரியான சத்யாவாகட்டும் அவரவர் கதாபாத்திரங்களில் சிறப்பாக இருக்கிறார்கள்.

 

இனப்படுகொலையில் தப்பித்து அகதியாக வந்து போலீஸ் சந்தேகபார்வையில் சிக்கி வாழ்க்கையை தொலைத்தவர்களின் உண்மை வலியை சொல்லும் படம் என்பதால் சின்னச் சின்ன குறைகள் இருந்தாலும் அதை மறந்து பார்க்கலாம்.

ஜிப்ரானின் இசையும் திரைக்கதையின் வலியை மிக அழுத்தமாக பதிவு செய்கிறது.

இதுபோன்ற வரலாற்று சம்பவ படங்களுக்கு தமிழில் பெயர்  வைக்காமல் போனதுதான் பெருங்குறை.

 

கோடங்கி 3/5

 

 

 

 

 

 

111 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன