
அடுத்தடுத்து சர்ச்சைக்குள் சிக்கும் ரஜினி அரசியல்
முதலில் தாமரை… இப்போது பாபா முத்திரை..!
உரிமை கொண்டாடும் மும்பை நிறுவனம்
அரசியல் அறிவிப்பை தொடர்ந்து ரஜினிகாந்த்துக்கு பல இடங்களில் இருந்து ஆதரவும், சில இடங்களில் இருந்து எதிர்ப்பும் அரசியல் தலைவர்களிடத்தில் இருந்து எழுந்துள்ளது.
ரசிகர்கள் மட்டத்திலும் ஒரு மித்த கருத்து எதுவும் இன்னமும் உருவாகவில்லை. அதிலும், அரசியல் அறிவிப்பு செய்த நாளில் இருந்தே ரஜினிகாந்த் பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

ரசிகர்கள் சந்திப்பின்போது எப்போதுமே ரஜினியின் மேடை அலங்காரத்தில் பாபா முத்திரை வெண் தாமரையின் பின் அலங்கரிக்கப்பட்டிருக்கும் வகையில் இருக்கும்.
ரஜினிகாந்த் அரசியல் அறிவிப்பு செய்வதற்கு முன்பு ரசிகர்களை சந்திக்கும்போதெல்லாம் என்ன பேசினாலும் அது சர்ச்சையை ஏற்படுத்தவில்லை. அவர் காட்டுகிற அல்லது பேசுகிற விஷயங்களும் பெரும்பாலும் அரசியல்வாதிகளால் கவனிக்கப்படாமல் இருந்தது.
ஆனால், இந்தமுறை ரஜினியின் ஒவ்வொரு அசைவும் அனைத்து அரசியல்கட்சிகளையும் கவனிக்க வைத்தது. அதோடு, மட்டுமல்லாமல் சாமானிய மக்களும் ரஜினியின் அரசியல் அறிவிப்பை உற்று கவனித்தார்கள்.
பல ஆண்டுகளாக வருவார் வருவார் என்று எதிர்பார்த்த அறிவிப்பை கடந்த ஆண்டு கடைசி நாளில் ரஜினிகாந்த் அறிவித்தார். அறிவித்து அந்த மேடையில் வழக்கம்போல தனது கையை தூக்கி பாபா முத்திரை காட்டி பேசினார்.
மேடையின் பின்புறமும் வெண்தாமரையின் பின்னால் பாபா முத்திரையும் அதை சுற்றி நாகப்பாம்பும் இருக்கும் சின்னம் மிக பிரமாண்டமாக எல்லாராலும் கவனிக்கப்பட்டது.

அரசியல் அறவிப்பை செய்த ரஜினி கூடவே தனது அரசியல் தனிக்கட்சியாக இருந்தாலும் அதிலும் ஆன்மீக அரசியல் ஆக இருக்கும். அதில் நேர்மை, நீதி, நியாயம் எல்லாம் இருக்கும் அதுதான் எனது ஆன்மீக அரசியல் என்று ஒரு விளக்கம் கொடுத்தார்.

வழக்கமாக தமிழகம் ஒரு மதசார்பின்மையை கடைபிடிக்கிற மாநிலம். அப்படியிருக்கும்போது ரஜினியின் ஆன்மீக அரசியல் ஏதோ ஒரு குறிப்பிட்ட மதத்தை பின்பற்றி இருக்கும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்தது. அது மட்டுமல்லாமல் ரஜினியின் பாபா முத்திரையின் முன்பு இருந்த தாமரை சின்னம் மத்தியில் ஆளும் பாஜ அரசின் சின்னம் என்பதால் ரஜினிகாந்த் பாஜகவின் தூண்டுதலில் தமிழகத்தில் அரசியல் செய்ய திட்டமிடுவதாக சர்ச்சை எழுந்தது.
ரஜினியை முன்னிறுத்தி பாஜக தமிழகத்தில் கால்பதிக்க திட்டமிடுவதாக குற்றச்சாட்டும் எழுந்தது.

அரசியல் அறிவிப்பை செய்த சில மணிநேரங்களில் சமூக வலைதளங்கள் முழுவதையும் ரஜினியின் ஆன்மீக அரசியலும், தாமரை சின்னத்தோடு கூடிய ரஜினியின் அரசியல் அறிவிப்பும்தான் டிரண்டிங் ஆக பல சர்ச்சை கருத்துக்களை கொட்டியது.
இந்த நிலையில் திடீரென ரஜினியின் மன்றம் சார்பில் ஒரு அறிவிப்பு வெளியானது. அனைத்து தரப்பு மக்களும் ரஜினி மன்றத்தில் உறுப்பினர் ஆகலாம் அதற்காக ஒரு இணையதளம் தொடங்கியிருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

அந்த அறிக்கை அனுப்பப்பட்ட லெட்டர்பேடில் ஏதோ ஒரு மாற்றம் தெரிய… சற்றே கவனித்த சிலருக்கு மட்டும் ரஜினியின் பாபா முத்திரையின் முன்பு முட்டிக்கொண்டு நின்ற தாமரை சின்னம் அந்த அறிக்கையில் இருந்த பாபா முத்திரையில் இல்லாமல் இருந்தது.
பாஜவோடு ரஜினி கைகோர்த்து அரசியலுக்கு வந்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்த சில மணிநேரங்களிலேயே தாமரை சின்னத்தை தூக்கி எறிந்தார் ரஜினிகாந்த்.

அரசியல் ஆசையை அறிவித்த சில மணிநேரங்களிலேயே தனக்கு இஷ்டமான முத்திரையில் இருந்து தாமரையை நீக்கி முதல் சறுக்கலை சந்தித்தார் ரஜினிகாந்த்.
அடுத்த சில தினங்களில் ரஜினி அறிவித்த ரசிகர் மன்ற இணையதளத்தில் ரசிகர்கள் இணைவது ஏனோ ரொம்ப வீக் ஆக தொடங்கியது.
இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்பட்டது ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிப்பதாக சொல்லிவிட்டு ரசிகர் மன்றத்துக்கு இணையதளம் தொடங்கி மக்களை அதில் இணைய சொன்னால் இணைவதற்கு மக்கள் ரசிகர்கள் இல்லையே என்ற புது சர்ச்சை எழுந்தது.
இந்த விவரமும் ரஜினியின் காதுகளுக்கு சென்றதால் ஏற்கனவே அறிவித்த ரசிகர் மன்ற இணையதளம் மக்கள் மன்ற இணையதளமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
அதுவரை மிக மெதுவாக பதிவை தொடங்கியிருந்த அந்த இணையதளம் மக்கள் மன்றமாக மாறியதும் ஜெட் வேகத்தில் சேர்க்கை எகிறி லட்சக்கணக்கில் ரசிகர்கள் போட்டி போட்டு இணைந்தனர். ஒரு சில நாளில் அரை கோடி ரசிகர்கள் இணைந்ததாக தகவல் வெளியானது.
அதேநேரம், ரஜினியின் பாபா முத்திரையை சுற்றி உண்மை, உழைப்பு, உயர்வு என்ற வாசகங்கள் இடம்பிடித்திருந்தன. இதற்கும் பெரும் சர்ச்சை எழுந்தது, தமிழகத்தில் மிக பிரபலமாக இருக்கிற ஒரு வீட்டு உபயோக பொருட்கள், துணிகள் விற்கும் கடையின் விளம்பர வாசகமும் இதே என்பதால் சமூக வலைதளங்களில் பலத்த விவாதமாக மாறியது.
இந்த நிலையில், ரஜினியின் பாபா முத்திரைக்கும் இப்போது சிக்கல் எழுந்துள்ளது.

ரஜினிகாந்தின் பாபா முத்திரை தங்களுக்குச் சொந்தமானது என்று மும்பை ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒன்று உரிமை கோரியுள்ளது.
யோகாவின் ‘ஆபன முத்திரை’ ரஜினி நடித்த ‘பாபா’ படத்தின் மூலம் மக்களிடையே பிரபலமானது. சமீபத்திய ரசிகர்கள் சந்திப்பின்போது அந்த முத்திரையை முதன்மைப்படுத்தினார் ரஜினி.
அரசியல் களத்தில் பயணிக்கத் தொடங்கியுள்ள ரஜினி, தனது கட்சியின் பெயர், கொள்கை, சின்னம் ஆகியவை குறித்து எதுவும் அறிவிக்கவில்லை. இதனையடுத்து ‘பாபா’ முத்திரையே அவர் கட்சியின் சின்னமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் ஒன்றரை வருடத்துக்கு முன்பு தொடங்கப்பட்ட மும்பை சமூக ஊடக செயலி நிறுவனமான ‘வோக்ஸ்வெப்’, ரஜினியின் முத்திரை தங்களுடைய சின்னம் என்று உரிமை கோரியுள்ளது.
இதுகுறித்துப் பேசிய அந்நிறுவனத்தின் நிறுவனர் யாஷ் மிஸ்ரா, ”ஒரே சின்னத்தை வேறு நிறுவனமோ அல்லது பிராண்டோ வைத்திருந்தால் அது பெரிய பிரச்சினையல்ல.
ஆனால் சமூக ஊடங்களும் அரசியல் கட்சிகளும் பிரத்யேகமான அம்சங்களைக் கொண்டுள்ளன. அவற்றுக்கு பெரிய மக்கள் கூட்டம் உண்டு. அவை ஒரே மாதிரியான சின்னங்களைப் பயன்படுத்துவது குழப்பத்தை உருவாக்கும்.
அவரின் முத்திரையும் எங்கள் சின்னமும் கட்டை விரலில் மட்டுமே சிறிய மாற்றத்தைக் கொண்டுள்ளது. இதனால் எங்களின் வாடிக்கையாளர்களும், பொதுமக்களும் நாங்கள் ரஜினிகாந்தை ஆதரிக்கிறோமா என்று தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ரஜினிக்குக் கடிதம் எழுதி உள்ளதாகவும், அதற்கு பதில் எதுவும் வரவில்லை என்றும் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
அதேநேரம், ரஜினியிடம் இருந்து பதில் எதுவும் வராமல் போனால் அந்த நிறுவனம் முறைப்படி நீதிமன்றத்தை அணுகவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அப்படி நீதிமன்றம் சென்றால் ரஜினி அரசியல் அறிவிப்பு செய்து கட்சி பெயர், கொடி, சின்னம் என எதையும் அறிவிக்காமலேயே அரசியல் அறிவிப்பால் சந்திக்கும் முதல் வழக்காக பாபா முத்திரை வழக்கு அமையும் என்று தெரிகிறது.
