
ராகு கேது விமர்சனம்
தமிழில் பல ஆண்டுகளுக்கு பின் ரிலீஸ் ஆகியுள்ள புராண பக்தி படம் ராகு கேது.
தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் நடந்த மோதலில் அசுரர்கள் இந்திரன் உள்ளிட்ட அனைத்து தேவர்களையும் துன்புறுத்தினார்கள். தேவர்கள் தங்களை அசுரர்களிடமிருந்து காப்பாற்றி அழியாத தன்மையைப் பெறுவதற்காக நாரதரின் யோசனைப்படி மகாவிஷ்ணுவை சந்தித்து தங்களை அசுரர்களிடமிருந்து காத்து அருளுமாறு வேண்டிக் கொண்டார்கள். அப்போது அவர், திருப்பாற்கடலில் மலையை மத்தாகவும், பாம்பைக் கயிறாகவும் வைத்து கடைந்தால் அதிலிருந்து அமுதம் உண்டாகும் என்றும், அதை அருந்துபவர்களுக்கு மரணம் கிடையாது என்று அசுரர்களிடம் தெரிவியுங்கள். இதைக் கேட்கும் அவர்கள் உடனே இதற்குச் சம்மதிப்பார்கள். அசுரர்களின் உதவியோடு பாற்கடலைக் கடையும் பணியைத் துவக்குங்கள் என்றார் மகாவிஷ்ணு. இந்திரன் அசுரர்களை அழைத்து பாற்கடலைக் கடையும் விஷயத்தைத் தெரிவித்தான்.
பாற்கடலை கடைந்த போது, அமிர்தம் வெளிவந்தது. அதை தேவர்களுக்கு மட்டுமே கொடுக்கும் பொருட்டு, திருமால் மோகினி அவதாரம் எடுத்தார். அப்போது அசுரர்களில் ஒருவனான ஸ்வர்பானு, தேவர்களின் வரிசையில் சூரிய சந்திரபகவான்களுக்கு இடையே தேவர் உருவம் எடுத்து அமர்ந்து அமிர்தத்தை பருகினான். சூரியனும், சந்திரனும் இதை கவனித்து, திருமாலிடம் கூறினர். மோகினி வடிவத்தில் இருந்த விஷ்ணு, ஸ்வர்பானுவை அமிர்தம் பறிமாறிய அகப்பையால் தாக்க அசுரன் ஸ்வர்பானு உடல் தலை வேறு, உடல் வேறானது. உடல் வேறு, தலை வேறாகப் பிரிந்தாலும் அமிர்தத்தை உண்ட காரணத்தினால் உயிர் பிரியாமல் இருந்தது. அமிர்தத்தை உண்டதால் தலையும் அழியவில்லை. உடலும் அழியவில்லை.
துர்காதேவியின் தீவிர பக்தனாக சுவர்பானு அன்னையிடம் முறையிட்டான். சுவர்பானு மீது அன்னை துர்காதேவி கருணை காட்டி தன் தோளில் இருக்கும் பாம்பின் தலையை சுவர்பானுவின் உடலுக்கும், பாம்பின் தலையை அவனது உடம்புக்கு பொருத்துகிறார். பாம்பின் உடலும், மனிதனின் தலையும் கொண்டது ராகுவானது. பாம்பின் தலையும் மனித உடலும் கேதுவானது. சிவபெருமான் அருளாசியுடன் ராகு கேது இருவரும் ஏழு கிரகங்களுடன் இணைந்தார்கள். ஆனால், ‘சாயா கிரகங்கள்’ என்றும், ‘நிழல் கிரகங்கள்’ என்றும் வர்ணிக்கப்படும் ராகுவும் கேதுவும் அவர்களுக்கு எதிர் திசையில் சுற்றி வருகிறார்கள். எதிர்பாராத அதிர்ஷ்டத்தைத் தருபவர் ராகு. அதற்கு நேர்மாறாக குணத்தைத் உடையவர் கேது என்பதை விளக்குவது இந்த ராகு கேது படத்தின் மொத்த கதை.
இதில் சமுத்திரக்கனி, கஸ்தூரி, விக்னேஷ் உட்பட பலர் நடித்துள்ளனர். பாலசுந்தரம் இயக்கத்தில் முழுக்க முழுக்க புராண கதையாக பல ஆண்டுகளுக்கு பின் தமிழில் வெளி வந்துள்ள சாமி படம் தான் ராகு கேது.
