
‘நறுவீ’ கோடங்கி விமர்சனம் 3/5
நீலகிரி மாவட்டத்தில் உள்ள மலை கிராமத்தை ஒட்டியுள்ள அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் ஆண்கள் நுழைந்தால் உயிருடன் திரும்பி வர மாட்டார்கள் என்று சொல்கிறார்கள். அதே நேரம் அங்கிருக்கும் நிலத்தில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக, காதல் ஜோடியான விஜே பப்பு – பாடினி குமார் உள்ளிட்ட இரண்டு ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் என ஐந்து பேர் காட்டுக்குள் செல்கிறார்கள். அவர்கள் தங்கள் பணியை தொடங்கும் போது, அவர்களைச் சுற்றி பல வினோதமான சம்பவங்கள் நடக்கிறது. ஆபத்தான பகுதிக்குள் நுழைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பதை பல மர்ம முடிச்சுகளோடு மிக சுவாரஸ்யமாக சொல்வது தான் ‘நறுவீ’.

நாயகனாக நடித்திருக்கும் ஹரிஷ் அலக், புதுமுகம் என்றாலும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, அளவாக நடித்து கவனம் ஈர்க்கிறார்.
விஜே பாபு மற்றும் அவரது காதலியான பாடினி குமார் இருவரும், இயல்பாக நடித்திருப்பதோடு, பல இடங்களில் பார்வையாளர்களை சிரிக்க வைக்கவும் முயற்சித்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் அஸ்வத் இசையில் பாடல்கள் அனைத்தும் ஓகே ரகம்தான். பின்னணி இசையிலும் பெரிதாக குறையில்லை.
அடர்ந்த வனப்பகுதியில் இருக்கும் ஆபத்தையும், அதன் அழகையும் ஒருசேர படமாக்கி ஒளிப்பதிவாளர் ஆனந்த் ராஜேந்திரன் ரசிக்க வைத்திருக்கிறார்.
இரண்டு வெவ்வேறு கதைகளை நான் லீனியர் முறையில் சொல்லி படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறார் படத்தொகுப்பாளர் சுபராக்.

ஆண்களுக்கு ஆபத்தான வனப்பகுதி, ஆராய்ச்சி செய்ய வரும் குழுவின் உள்ள பெண்களை சுற்றி நடக்கும் வினோத சம்பவங்கள், அதை தொடர்ந்து தொலைந்த ஒருவரை தேடிய பயணம், என்று படம் முழுவதும் பல சுவாரஸ்யமான பால விஷயங்களை அலசுகிறார் இயக்குனர்.
முதல் பாதிக் கதையை மட்டும் பார்த்துவிட்டு எந்த முடிவுக்கு வர முடியாது. இரண்டாம் பாதிக் கதையையும் பார்த்தால்தான் இந்தப் படத்தின் நோக்கம் என்ன என்பதும் அதில் இருக்கும் ரகசியமும் புரியும் என்ற பாணியில் மிக வித்தியாசமாக திரைக்கதை அமைத்து படம் பார்க்கிற ரசிகனை ஆச்சர்யத்தி ஆழ்த்துகிறார் இயக்குனர் சுபரக் முபாரக்.

இருப்பினும், தான் சொல்ல வந்த கதையில் மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு கல்வி எவ்வளவு முக்கியம் என்பதையும், ஒரு மனிதருக்கு கிடைக்ககூடிய சராசரி வாழ்க்கை கூட அவர்களுக்கு கிடைப்பதில்லை என்பதையும் குறிப்பாக அங்கிருக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை சும்மா மேம்போக்காக சொல்லாமல் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானருடன் சேர்த்து கண்ணீர் வர வைத்து சுவாரஸ்யமாக சொல்லியிருப்பது கவனம் ஈர்ப்பதால் இயக்குனருக்கு ஒரு சபாஷ் போடலாம்.
எல்லாம் சரியாக இருந்தும் புதுமுகங்கள் என்பதால் படம் ரசிகர்கள் கவனம் பெறாமலேயே போகும் அபாயமும் இருக்கிறது. கொஞ்சம் தெரிந்த முகங்களோடு படத்தை கொடுத்திருந்தால் படம் ஹிட் அடித்திருக்கும்.
மொத்தத்தில் நறுவீ அருமை.
கோடங்கி 3/5

