வெள்ளிக்கிழமை, அக்டோபர் 31
Shadow

மதராஸி கோடங்கி விமர்சனம் 3/5

 

 

மதராஸி கோடங்கி விமர்சனம் 3/5

 

வழக்கமான சிவகார்த்திகேயன் படமாகவும் இல்லாமல் இயக்குனர் முருகதாஸ் படமாகவும் இல்லாமல் இரண்டுக்கும் நடுவில் ஒரு ஜானரை பிடித்து கதை சொல்லி இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது மதராஸி.

கதைப்படி….

தமிழ்நாட்டுக்குள் துப்பாக்கி கலாச்சாரத்தை உருவாக்க நினைக்கும் பயங்கரவாத கும்பல் ஒன்று, மிகப்பெரிய அளவில் துப்பாக்கிகளை விநியோகிக்கும் திட்டத்தை செயல்படுத்த முயற்சிக்கிறது. இதை  தடுக்கும் முயற்சியில் பிஜுமேனன் தலைமையிலான தேசிய புலனாய்வு அமைப்பு ஈடுபடுகிறது. இதற்கிடையே, தான் நேசித்த காதலி தன்னை விட்டு பிரிந்து சென்ற சோகத்தில் தற்கொலை செய்து கொள்ள போவதாக சுற்றிக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனை சந்திக்கும் பிஜுமேனன்  அந்த பயங்கரவாத கும்பலின் திட்டத்தை முறியடிக்க சிவகார்த்திகேயனை பயன்படுத்த முடிவு செய்கிறார்.

இந்த நிலையில், சிவகார்த்திகேயன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், அதற்காக சுமார் 15 ஆண்டுகள் சிகிச்சை பெற்று வந்தவர் என்றும் பிஜு மேனனுக்கு தெரிய வருகிறது. அவர் நினைத்தது போல் சிவகார்த்திகேயன் மூலம் பயங்கரவாத கும்பலின் திட்டம் முறியடிக்கப்பட்டதா ? , அவர் மனநிலை பாதிக்கப்பட்டது ஏன் ? அவரது காதலி அவரை பிரிந்து சென்றது ஏன் ? காதலியுடன் சிவகாத்திகேயன் சேர்ந்தாரா? துப்பாக்கி கலாச்சாரத்தை சிவா தடுத்தாரா? இதற்கெல்லாம் விடை சொல்வதுதான் மதராஸி.

வழக்கமாக மிக அழுத்தமான ரோல் அல்லது காமெடியான ஹீரோவாக பார்த்து பழகிய சிவா முடிந்த மட்டும் தனது அடையாளத்தை பதிக்க பார்க்கிறார். சிவகார்த்திகேயனுக்கு நீண்ட காலமாக கைகொடுக்காமல் இருந்த மாஸ் ஆக்‌ஷன் அவதாரம் இந்த படத்தில் கைகொடுத்திருக்கிறது. அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார். குறிப்பாக கேஸ் தொழிற்சாலையில் நடைபெறும் சண்டைக்காட்சியும், கிளைமாக்ஸில் வில்லன் உடனான ஆக்‌ஷன் காட்சியும் மிரட்டல் ரகம். ஆனால் பெரும் குறை கதையும் திரைக்கதையும் அவருக்கு சரியாக ஒத்துழைப்பு தராததால்  நம்மாலும் முழுமையாக ரசிக்க முடியாமல் போகிறது.

ஹீரோயினுக்கு பெரிதாக வேலை இல்லை. இருந்தாலும் வருகிற காட்சிகளில் ரசிக்க வைக்கிறார்.

துப்பாக்கி படத்திற்குப் பிறகு மீண்டும் சூப்பர் வில்லனாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறார் வித்யூத் ஜமால், “யார் கிட்ட வேண்டுமானாலும் துப்பாக்கி இருக்கலாம், ஆனால் நான் தான் வில்லன்” என்று பஞ்ச் வசனம் பேசிக்கொண்டு ஹாலிவுட் நடிகரைப் போல் ஆக்‌ஷனில் அமர்க்களப்படுத்தியிருக்கிறார்.

மற்றொரு வில்லனாக நடித்திருக்கும் சபீர், தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரியாக நடித்திருக்கும் பிஜு மேனன், விக்ராந்த், ரிஷி ஆகியோர் பார்வையாளர்கள் மனதில் பதிந்துவிடும் வகையில் பயணித்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் அனிருத் ஆக்‌ஷன் படத்திற்கும், மாஸ் ஹீரோவுக்குமான பின்னணி இசையை கொடுத்தாலும் ஒரே மாதிரி இரைச்சலாக காதை பதம் பார்க்கிறது. பாடல்களிலும் ஏதோ ஒன்று மிஸ் ஆகியிருக்கிறது. சிவகார்த்திகேயன் படங்களில் பாடல்கள் எப்போதும் ஹிட் ஆகும் ஏனோ இதில் முழு திருப்தி இல்லை.

படம் முழுவதையும் ஹாலிவுட் தரத்தில் பிரமாண்டமாக படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுதீப் இளமோன்.

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் துப்பாக்கியை வைத்து மிகப்பெரிய சமூக பிரச்சனையை எச்சரித்து இருக்கிறார். வரும் நாட்களில் எல்லார் கைகளிலும் துப்பாக்கி சர்வசாதாரணமாக கிடைத்தால் என்ன ஆகும் என்பதை அதிரசி ஆக்‌ஷனில் அதிர்ச்சியாக சொல்லி உஷார் படுத்த முயற்சித்து இருக்கிறார். எதிர்காலத்தில் இத்தகைய பாதிப்பு தமிழகத்தில் வரக்கூடாது, என்ற அவரது எச்சரிக்கையும், அதனை மையப்படுத்திய திரைக்கதையும் படம் முழுவதையும் ஆக்ரமித்தாலும் ஏதோ ஒன்று மிஸ் ஆவதால் முழுமாக ரசிக்கமுடியவில்லை.

ஆக்‌ஷன் அதிரடிகளில் அதிக கவனம் செலுத்தி இருக்கும் இயக்குனர் இன்னும் கூட திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் துப்பாக்கியை மிஞ்சிய படமாக மதராஸி மாறியிருக்கும்.

மொத்தத்தில் துப்பாக்கி கலாச்சாரத்தை மதராஸி எச்சரிப்பதால் லாஜிக் மீறல்களை தவிர்த்து ரசிக்கலாம்.

 

கோடங்கி 3/5

 

 

37 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன