
பேட் கேர்ள் கோடங்கி விமர்சனம் 4/5
ஒரு பெண் சமூகத்தில் எப்படி வாழ வேண்டும்? எப்படி வாழ்கிறார்கள்? பெண்களின் உணர்வுகளுக்கு இந்த சமூகம் சரியாக மதிப்பளிக்கிறதா? என்பதை மிக அழுத்தமாக பதிவு செய்கிற படம் தான் பேட் கேர்ள்.
பெண்களை போக பொருளாக பார்க்கிறவர்களுக்கு ”பேட்” ஆகவும், பெண்களை ஆக்க சக்தியாக பார்க்கிறவர்களுக்கு “குட்” ஆகவும் தோன்றுவதுதான் பேட் கேர்ள் படம்.
கதைப்படி….
ஹீரோயின் அஞ்சலி பள்ளியில் படிக்கும் போது சக மாணவனை காதலிக்கிறார். இந்த விசயம் அவரது பெற்றோருக்கு தெரிந்து கண்டிப்பதுடன், வேறு பள்ளிக்கு அவரை மாற்றுகிறார்கள். பெற்றோர் மீது கோபமடையும் அஞ்சலி, ”நீங்கள் சொல்வதை எல்லாம் இந்த பள்ளி வரை தான் கேட்பேன், அதன் பிறகு நான் நினைத்தபடி தான் வாழ்வேன்”, என்கிறார். அவர் சொன்னது போலவே கல்லூரி காலத்தில் வீட்டை விட்டு வெளியேறி மாணவிகள் விடுதியில் தங்கி படிக்கிறார். அங்கே சீனியர் மாணவருடன் காதல், கட்டில் உறவு என்று பயணிப்பவர், அந்த காதல் பொய் என்பதை உணர்ந்து வருந்துகிறார், கோபம் கொள்கிறார். பிறகு வேலைக்கு செல்லும் காலத்தில் லிவிங் டூ கெதர் வாழ்க்கை, அதிலும் சண்டை பிரிவு என்று பயணிப்பவர், இறுதியில் தனக்கான காதல் எது என்பதை கண்டுபிடித்தாரா இல்லையா ? காதல் காமத்தை தாண்டி வாழ்வதற்கான வழி எது என்பதை சொல்வது தான் மீதிக்கதை.
இத செய்யாதே அது தப்பு, இந்த வயதில் இது தேவையா?, என்று சொல்லி கட்டுப்படுத்த நினைப்பதை விட, பெண்களை சுதந்திரமாக விட்டாலே, அவர்களே அவர்களது வாழ்க்கையில் எது தவறு, எது சரி என்பதை உணர்ந்துக் கொள்வார்கள், என்ற கருத்தை பேசும் படம் தான் பேட்கேர்ள்
ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பெண்கள், ஒவ்வொரு ரீதியாக அடிமைப்பட்டு கிடப்பதும், அதில் இருந்து மீண்டு வருவதை மிக எதார்த்தமாக இயக்குநர் வர்ஷா பரத் சொல்லியிருக்கிறார்.
படத்தின் நாயகியாக நடித்திருக்கும் அஞ்சலி சிவராமன், முழு படத்தையும் தன் நடிப்பால் மிக சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறார். திரைக்கதை மற்றும் காட்சியமைப்புகள் மெதுவாக நகர்ந்தாலும், அஞ்சலி சிவராமனின் நடிப்பு அதனை மறக்கடித்து படத்தை ரசிக்க வைக்கிறது. காதலனை நினைத்து உருகுவது, தான் ஏமாற்றப்பட்டிருப்பது தெரிந்தும், காதலன் நினைவாக இருப்பது, மருத்துவரிடம் தனது நிலை குறித்து விவரிப்பது, பூனையை கொஞ்சுவது, பாட்டியின் இறப்பில் அழுவது என படம் முழுவதையும் தன் தோளில் சுமந்திருக்கிறார்.
நடிப்பைப் பொறுத்தவரை, நாயகி அஞ்சலி சிவராமனின் பங்களிப்பு அபாரம். மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் நிகழ்கிற காட்சிகளில் அவர் வெறுமனே ஒரு பாத்திரமாக மட்டுமே நம் முன்னே தோன்றாமல் அவரது ஒப்பனை, உடல்வாகு, உடல்மொழி, பாவனைகள் என அனைத்திலும் அசத்துகிறார்.
அவருக்கு இணையாக இப்படத்தில் நமக்குத் தெரிவது, அவரது தாயாக நடித்துள்ள சாந்திப்ரியா. ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’னில் வந்த நாயகியா இவர் என்று ஆச்சர்யப்படுத்துகிறார்.
சரண்யா ரவிச்சந்திரன், ஹிர்து ஹரூன், டீஜே, சுஷாங் பொம்மரெட்டிபல்லி என மற்ற வேடங்களில் நடித்தவர்களும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர்கள் ப்ரீதா ஜெயராமன், ஜெகதீஷ் ரவி, பிரின்ஸ் ஆண்டர்சன் ஆகியோரது ஒளிப்பதிவில் காட்சிகள் இயல்பாக பயணிக்கிறது. அமித் திரிவேதியின் இசையிலும் குறையில்லை. ராதா ஸ்ரீதரின் படத்தொகுப்பு படத்தை மெதுவாக நகர்த்தினாலும், நாயகியின் உணர்வுகளை பார்வையாளர்களிடம் நேர்த்தியாக கடத்தியிருக்கிறது.
ஆதாம் – ஏவாள் கதையில் வருவது போல ‘தடை செய்யப்பட்டது’ என்று சொல்லப்படுபவற்றின் மீது ஈர்ப்பு கொள்கிற ஒரு பெண்ணின் ‘விடலைத்தனத்தை’ப் பேசுகிறது ‘பேட் கேர்ள்’. தனது அனுபவங்கள் வழியாக அப்பெண் பெற்ற ‘கற்றலையும்’ மிக அழகாக பேசுகிறது.
மிக முக்கியமாக, இதுவரை தனக்கு முன்னிருந்த தலைமுறைப் பெண்கள் அனுபவித்த கொடும் அடக்குமுறைகளே வழிவழியாக தன் மீதும் திணிக்கப்பட்டதை சொல்வதோடு அவற்றில் இருந்து வெளியேறுவதற்கான வழிகளையும் அவர்களே உருவாக்கி வெளியே தள்ளியதையும் அப்பெண் உணர்வதாகவும் காட்டி சபாஷ் வாங்குகிறார் இயக்குனர்.
அதற்கு உதாரணமாக பள்ளியில் இருந்து நாயகியை வெளியேற்றியதும், வீட்டில் சண்டை நடக்கிற காட்சியும், அப்போது, ‘இவ ஒழுங்கா இருந்தா இப்படி நடந்திருக்குமா’ என்று நாயகியின் தாயைக் குறை கூறும் பாட்டி பாத்திரம். ஒரு தலைமுறைப் பெண்கள் எடுத்து வைத்துள்ள அடுத்த அடி அந்தக் காட்சியில் உணர்த்தப்படும்.
கிளைமேக்ஸ் காட்சியில் ‘காமம் சார்ந்த பாலியல் உறவு’ தாண்டித் தனது பொருளாதார சுதந்திரத்தைத் தேடி நாயகி செல்வதாகக் காட்டியிருப்பது இப்படத்தின் இன்னொரு கூடுதல் சிறப்பு.
கதை எழுதி இயக்கியிருக்கும் வர்ஷா பரத், பெண்களுக்கு பூட்டப்படும் அடிமைச் சங்கிலி அடுத்த தலைமுறையினருக்கு எப்படி கடத்தப்படுகிறது என்பதையும், அதில் இருந்து விடுபட முயற்சிப்பவர்களின் போராட்டம் மற்றும் தங்களை தாங்களே சமாதானப்படுத்திக் கொண்டு பயணிக்கும் பெண்கள் மனது எப்படி இருக்கும் என்பதையும் மிக தெளிவாக காட்சிப்படுத்தி கைத்தட்டல் வாங்குகிறார்.
குறிப்பிட்ட சமூகம் மற்றும் மேல்தட்டு மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் வர்ஷா பரத், எந்த சமூகமாக இருந்தாலும், எப்படிப்பட்ட வாழ்க்கைத்தரத்தில் இருந்தாலும், பெண்கள் என்றாலே இரண்டாம் இடத்தில் வைத்து பார்க்கும் பொதுவான சமூகத்தைப் பற்றி பேசாமல் விட்டதும், பெண்களை போகப்பொருளாக பார்க்கும் ஒரு குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே புரியும்படி காட்சிகளில் படத்தை இயக்கியிருப்பது படத்திற்கு ஒரு குறை. ஆனாலும், அந்த குறையும் படத்திற்கு பலமே.
இதுநாள் வரை திரையில் ‘ஆண்” ஆதிக்க கதை சொல்லல் மட்டுமே பார்த்து பழகிய சினிமா ரசிகர்களுக்கு பெண் ஆதிக்க ‘பழி வாங்கலாகவும்’ இந்த கதையை எடுத்துக்கொள்ளலாம். இதற்காக இயக்குனர் வர்ஷா பரத்துக்கு சபாஷ் போடலாம்.
’இது கமர்ஷியல் படமா?, காமம் கன்றாவி சொல்லும் அடல்ஸ் ஒன் படமா?, ‘ஃபீல்குட் படமா’, மெசேஜ் சொல்ற படமா? பெண்களுக்கான படமா? கலாச்சாரத்தை கெடுக்கும் படமா? என்பது போன்ற ஏராளமான கேள்விகள் எழுந்தாலும், ’பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்’ என்று வட்டத்திற்குள் வாழும் போலி கலாச்சார காவலர்களுக்கு இந்த படம் ஆகவே ஆகாது.
மொத்தத்தில் பெண்களை போக பொருளாக பார்க்கிறவர்களுக்கு ”பேட்” ஆகவும், பெண்களை ஆக்க சக்தியாக ஆணுக்கு சமமாக பார்க்கிறவர்களுக்கு “குட்” ஆகவும் தோன்றுவதுதான் பேட் கேர்ள் படம்.
கோடங்கி 4/5

 
                            
