வெள்ளிக்கிழமை, டிசம்பர் 12
Shadow

‘பிபி180’ (BP180) திரைப்பட விமர்சனம் 3/5

‘பிபி180’ (BP180) திரைப்பட விமர்சனம்

 

சென்னை, காசிமேடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவர் தன்யா ரவிச்சந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர், முன்னாள் எம்.எல்.ஏ, மருத்துவ செயலாளர் என்று யாருடைய மிரட்டலுக்கும், உத்தரவுக்கும் அடிபணியாமல் நேர்மையாக ஒரு விசயத்தை செய்கிறார். இதனால், அப்பகுதியில் உள்ள பயங்கரமான ரவுடி டேனியல் பாலாஜி அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்.

இந்த விவகாரத்தில் தலையிடும் சென்னை காவல்துறை ஆணையர், டேனியல் பாலாஜியை அழைத்து மிரட்டி அசிங்கப்படுத்தி விடுகிறார். இதனால் கடும் கோபம் அடையும் டேனியல் பாலாஜி, காவல்துறையின் எச்சரிக்கையையும் மீறி தன்யா ரவிச்சந்திரனை பழிவாங்க துடிக்கிறார். அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை விறுவிறுப்பாகவும், கொஞ்சம் லாஜிக் மீறலோடும் சொல்வது தான் ‘பிபி 180’.

யின் நாயகியாக மருத்துவர் தங்கம் என்ற கதாபாத்திரத்தில், தைரியமான பெண்ணாக நடித்திருக்கும் தன்யா ரவிச்சந்திரன், அளவான நடிப்பு மூலம் அசத்துகிறார். என்ன தான் மிரட்டல்கள் வந்தாலும், தனது மருத்துவ பணியை நேர்மையாக செய்து முடிப்பதில் முனைப்பு காட்டுவதும், எதிரிகளின் மிரட்டல்களை அலட்சியமாக கடந்து போகும் காட்சிகளில் அசால்டாக நடித்து அசத்தியிருக்கிறார். டேனியல் பாலாஜியின் மிரட்டல்களுக்கு நடுவே தன் பணியில் கவனம் செலுத்துபவர், இறுதியாக அவருக்கு விடும் சவால், திரையரங்கையே அதிர வைக்கிறது.

காசிமேடு ரவுடி அர்னால்டு கதாபாத்திரத்தில் டேனியல் பாலாஜி, செய்யும் அலப்பறைகள் கொஞ்சம் ஓவராக இருப்பது போல் தோன்றினாலும், படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறு தன்னிலை மறந்து செயல்படும் விதத்தை தனது நடிப்பில் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார். யாராலும் வீழ்த்த முடியாத வீரன், பிறர் மனைவி விரும்பும் ஆண்,  என்ற மமதையில் சுற்றித்திரியும் அவரின் எண்ணத்தை ஒரு பெண் அடித்து நொறுக்கும் போது, தன் கண்களின் மூலமாக கோபத்தை வெளிப்படுத்தி கதாபாத்திரமாக மட்டும் அல்ல, நடிப்பிலும் அரக்கனாக தன்னை நிலைநிறுத்தியுள்ளார்.

இயக்குநர் கே.பாக்யராஜ் அழுத்தமான கதாபாத்திரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும், இரண்டாம் பாதிக்கு மேல் அவரது கதாபாத்திரம் பலம் இழந்து விடுகிறது.

முன்னாள் எம்.எல்.ஏ-வாக நடித்திருக்கும் அருள்தாஸ், காவல்துறை ஆணையராக நடித்திருக்கும் தமிழ், சமூக ஆர்வலராக நடித்திருக்கும் ஜாக் அருணாச்சலம், நாயகியின் தங்கையாக நடித்திருக்கும் ஸ்வேதா டோரத்தி, சகோதரராக நடித்திருக்கும் ரங்கா, தோழியாக நடித்திருக்கும் நயனா ஆகியோர் கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார்கள்.

பாடல்கள் இல்லை என்றாலும் தனது பின்னணி இசை மூலம் காட்சிகளில் இருக்கும் பதற்றத்தை பார்வையாளர்களிடம் கடத்தியிருக்கும் இசையமைப்பாளர் ஜிப்ரான்,

படம் தொடங்கியது முதல் இடைவேளை வரை பெரும் எதிர்பார்ப்புடன் படம் நகர்கிறது.

எழுதி இயக்கியிருக்கும் ஜெ.பி, அரசு மருத்துவமனை பெண் மருத்துவர் மற்றும் ரவுடி இடையிலான மோதல், அதனால் ஏற்படும் விளைவுகளை வைத்துக் கொண்டு மேக்கிங் மூலம் பார்வையாளர்களை முதல் பாதி முழுவதும் மிரள வைத்து விடுகிறார். அதே சமயம், சில காட்சிகள் மூலம் லாஜிக் மீறல்களில் திரைக்கதையை சிக்க வைத்து, வழக்கமான கமர்ஷியல் படமாக முடித்திருக்கிறார்.

முதல் காட்சியில் ரவுடியை ஆபீசுக்குள் அழைத்து ஒழுங்கா இரு இல்லனா நெத்தியில பொட்டு வைத்து விடுவேன் என மிரட்டும் கமிஷனரை அடுத்த சில காட்சிகளில் கடற்கரையில் கயிறு கட்டி கடலில் கொல்வது போன்ற காட்சியால் இதெல்லாம் எப்படி சாத்தியம் கற்பனைக்கும் ஒரு அளவு வேண்டாமா?

ஒரு ரவுடி, என்னதான் திட்டம் போட்டாலும், ஒரு காவல்துறை ஆணையரை இப்படி செய்ய முடியுமா ? என்ற கேள்வி, இப்படம் ரியாலிட்டியில் இருந்து விலயிருப்பதை உணர்த்துகிறது. மற்றபடி மேக்கிங், கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்திய விதம் ஆகியவை படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.

கிளைமாக்ஸ் காட்சியில் டேனியல் பாலாஜிக்கு கிடைக்கும் தண்டனை ஷாக் ரகம்.

மொத்தத்தில், ‘பிபி 180’ பிரஷர் எகிறும் அளவுக்கு பாதிப்பு பெருசா இல்லை. 3/5

41 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன