வெள்ளிக்கிழமை, டிசம்பர் 12
Shadow

’அங்கம்மாள்’ திரைப்பட விமர்சனம் 3/5

 

’அங்கம்மாள்’ திரைப்பட விமர்சனம்

 

எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய கோடித் துணி என்கிற சிறுகதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் அங்கம்மாள்.

இளம் வயதில் கணவரை இழந்த கீதா கைலாசம், தனது இரண்டு மகன்களை வளர்ப்பதற்காகக் கடுமையாக உழைக்கிறார். பால் வியாபாரம், விவசாயம் என்று கடுமையான உழைப்பாளியாக மட்டும் இன்றி, தைரியமான பெண்ணாக இருக்கிறார். அந்தக் காலப் பெண்கள் போல ஜாக்கெட் அணியாத பெண்மணியாக இருப்பதுதான் இந்தக்கதை படமாகக் காரணம்.

மூத்த மகனான விவாசாயி பரணி திருமணமாகி அம்மாவுடன் இருக்க, இளைய மகன் சரண் நன்றாக படித்து மருத்துவராகிறார். அவர் பணக்கார வீட்டு பெண்ணை காதலிக்க, அவரது காதலுக்கு பெண் வீட்டார் சம்மதம் தெரிவிக்கிறார்கள். பெண் வீட்டார் ஜாக்கெட் அணியாமல் இருக்கும் தனது அம்மாவை பார்த்து தவறாக நினைப்பார்கள் என்பதாலும், காலத்துக்கு ஏற்ப தனது அம்மாவும் மாற வேண்டும் என்பதாலும், அம்மா ஜாக்கெட் அணிய வேண்டும் என்று விரும்புகிறார். இதனால், தனது அண்ணியின் உதவியோடு தனது அம்மாவை ஜாக்கெட் அணிய வைக்கிறார்.

ஆனால், தன் மீது உள்ள அக்கறையை விட, மற்றவர்களுக்காகவே தன்னை மாற்ற முயற்சிக்கிறார்கள், என்பதை அறிந்து கொள்ளும் கீதா கைலாசம், எப்போதும் போல் சுதந்திரமாகவும், தனக்கு பிடித்தது போலவும் வாழ முடிவு செய்கிறார். ஆனால், அவரை எப்படியாவது மாற்ற வேண்டும் என்று குடும்பத்தார் முயற்சிக்க, அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் மீதிக்கதை.

அங்கம்மாளாக நடித்திருக்கும் கீதா கைலாசம், கிராமத்து இரும்புப் பெண்மணிகளைப் போல் அச்சுஅசலாக மாற வேண்டும் என்று உழைத்திருக்கிறார்.அவர்களுடைய உடல்மொழி,சுருட்டு பிடிக்கும் பாங்கு,வசன உச்சரிப்புகள் ஆகிய அனைத்தும் உண்மைக்கு மிக நெருக்கமாக இருக்கிறது.

அங்கம்மாளின் மூத்த மகனாக பரணி,பரணியின் மனைவியாக தென்றல், இளைய மகனாக சரண்,சரணின் காதலியாக முல்லையரசி, சரணின் நண்பராக சுதாகர் மற்றும் சிறுமி யாஷ்மின் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

கிராமத்து மனிதர்களாகவே அனைவரும் மாறியிருக்கிறார்கள்.அந்த மக்களின் மாசுமருவில்லாத உணர்வுகளையும் அப்படியே கடத்த முயன்றிருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் அன்ஜாய் சாமுவேல், படத்தில் இடம்பெறும் லொக்கேஷன்களையும் ஒரு கதாபாத்திரமாக ரசிக்க வைத்திருக்கிறார். படத்தின் ஆரம்பத்திலேயே பரந்த நிலப்பரப்பு ஒன்றை காட்டி பார்வையாளர்களின் கவனத்தை தன் கேமரா பக்கம் ஈர்ப்பவர், அங்கம்மாளின் வீடு, மலை, தென்னை மரங்கள் சூழ்ந்த வயல் வெளி என அனைத்து பகுதிகளையும் ஓவியங்களை பார்ப்பது போல் காட்சிப்படுத்தி கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறார்.

இசையமைப்பாளர் முகமது மக்பூல் மன்சூரின் பின்னணி இசை, காற்றும் பேசும் என்பதை நிரூபித்திருக்கிறது. பின்னணி இசை ஒலிப்பதே தெரியாதவாறு கதாபாத்திரங்களுடன் கதாபாத்திரமாக கலந்து பயணித்திருக்கும் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.

துணிச்சல்காரப் பெண்மணிகளுக்கு எடுத்துக்காட்டாய் அங்கம்மாள் வாழ்க்கையைப் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் விபின் ராதாகிருஷ்ணன்.மகன்கள் மற்றும் சமுதாயம் தன் மீது அக்கறை காட்டுவதைக் காட்டிலும் ஆதிக்கம் செலுத்த முயல்கின்றனர் என்பதை ஏற்கமுடியாமல் போராடும் அங்கம்மாள் என்கிற கதாபாத்திரத்தின் மூலம் தமிழ்நாட்டு கிராம வாழ்வை அப்படியே காட்சிப்படுத்தியிருக்கிறார்.

பெண்கள் என்னதான் தைரியமாகவும், சுதந்திரமாகவும் வாழ்ந்தாலும், சில சூழ்நிலைகளால் அவர்களால் இறுதி வரை தங்களது விருப்பம் போல் வாழ முடிவதில்லை என்பதை இயக்குநர் விபின் ராதாகிருஷ்ணன் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

மொத்தத்தில், ‘அங்கம்மாள்’ துணிச்சல்காரப் பெண்.

23 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன