
சிறை விமர்சனம் 3.5/5
கொலைக்குற்றத்துக்காக சிறையில் இருக்கிறார் அப்துல்ரவூப்..அவரை விசாரணைக்காக வேலூரிலிருந்து சிவகங்கை அழைத்துச் செல்கிறது கதிரவன் தலைமையிலான குழு. இடையில் அந்தக் கைதி தப்புகிறார்.அவரைக் கண்டுபிடித்தார்களா? இல்லையா? அந்தக் கைதியின் பின்னணி என்ன? எதற்காகக் கொலை செய்தார்? என்கிற கேள்விக்களுக்கான விடைகளை விறுவிறுப்பாகச் சொல்லியிருக்கும் படம் சிறை.
காவலர் கதிரவன் வேடத்தில் நடித்திருக்கும் விக்ரம்பிரபு, காவலர் வேலைக்குச் சென்றால் காவலர் தேர்வு, நேர்முகத்தேர்வு என எதுவும் இல்லாமல் உடனடியாக வேலைக்கு எடுத்துக்கொள்வார்கள். அந்த அளவுக்குக் காவலராகவே மாறியிருக்கிறார்.தோற்றம் மட்டுமின்றி உடல்மொழி,வசன உச்சரிப்பு ஆகிய எல்லாவற்றிலும் நேர்த்தியாக இருக்கிறார்.நடிப்பிலும் வரவேற்புப் பெறுகிறார்.இறுதியில் மற்ற காவலர்களிடம் அவர் பேசும் வசனம் படத்துக்கும் அவருக்கும் பெரும் பலம்.
கைதி அப்துல்ரவூப்பாக நடித்திருக்கும் அக்சய்குமார் மிகப் பொருத்தமாக நடித்திருக்கிறார்.பல தோற்றங்கள் அதற்கேற்ற நடிப்பு என முதல்படத்திலேயே நற்பெயர் பெறுகிறார்.
அக்சய்குமாரின் காதலியாக நடித்திருக்கும் அனிஷ்மா அசத்தியிருக்கிறார்.அவருடைய அழகு, அழுகை ஆகியன அனைவரையும் கவரக்கூடியதாக அமைந்திருக்கிறது.
விக்ரம்பிரபுவின் மனைவியாக நடித்திருக்கும் அனந்தாவும் கதாபாத்திரக்கேற்ற நடிப்பை வெளிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார்.
காவலராக நடித்திருக்கும் மூணார் ரமேஷ், பேசும் வசனத்தினால் எல்லோர் மனதிலும் நிறைந்துவிடுகிறார்.
ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம் மகிழும் வகையிலான கதைக்களம்.உற்சாகமாக உழைத்து காட்சிகளை நேர்த்தியாக்கி நல் அனுபவம் கொடுத்திருக்கிறார்.
ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைக்கதையின் அங்கமாகவே மாறியிருக்கின்றன.
பிலோமின்ராஜின் படத்தொகுப்பு படத்தை வேகமாக்கியிருக்கிறது.
டாணாக்காரன் பட இயக்குநர் தமிழ் இந்தப் படத்தின் கதையை எழுதியிருக்கிறார்.அவர் நிஜத்தில் காவலராக இருந்தவர் என்பதால் அவர் அறிந்த உண்மை நிகழ்வைக் கதையாக்கியிருக்கிறார்.
அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி, கதையின் கருவை பொறுப்பாகச் சுமந்து அழகிய குழந்தையை ஈன்றெடுத்திருக்கிறார்.
பேருந்து நிறுத்தங்களில், சிறைக் கைதிகள்,அவர்களை விசாரணைக்காக அழைத்துச் செல்லும் காவலர்கள் ஆகியோரை அடிக்கடி பார்க்கலாம்.இதுவரை மிக எளிதாக அவர்களைக் கடந்து சென்றுவிடுவோம்.இனி நின்று பார்த்துச் செல்வோம்.
காவலர்கள் மற்றும் சிறைக் கைதிகள் ஆகியோரின் மன உணர்வுகள்,செயல்பாடுகள் ஆகிய நுட்பமான நிகழ்வுகளைப் பதிவு செய்து,ஒரு கைதி இஸ்லாமியர் என்றால் அவரை சமுதாயம் எப்படிப் பார்க்கிறது? என்பதையும் நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் சொல்லி கவனம் ஈர்க்கிறது சிறை.
மொத்தத்தில் சிறை ரசிகர்களை சிறை பிடிக்கும்..!
கோடங்கி 3.5/5

