
’மார்க்’ திரைப்பட விமர்சனம்
போரடிக்காத ஒரு முழுமையான மாஸ் ஆக்ஷன் கமர்ஷியல் படத்திற்கான அத்தனை அம்சங்களும் நிறைந்த ’மார்க்’
ஒரே நாளில் 16 சிறுவர்கள் கடத்தப்படுகிறார்கள். அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபடும் இடைநீக்கம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி சுதீப்புக்கு, முதல்வர் கொலை செய்யப்பட்ட வீடியோ ஆதரத்தை கைப்பற்றும் பொறுப்பும் வழங்கப்படுகிறது. ஒரு பக்கம் கடத்தப்பட்ட சிறுவர்களை தேடும் சுதீப், மறுபக்கம் வீடியோ ஆதாரத்தையும் தேடுவதோடு, இரண்டு சம்பவங்களுக்கும் தொடர்பு இருப்பதையும் கண்டுபிடிக்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது என்பதை விறுவிறுப்பாகவும், மாஸாகவும் சொல்வதே ‘மார்க்’.
இடைநீக்கம் செய்யப்பட்டாலும், காக்கி சட்டை போடாமலேயே போலீஸ் கடமையை செய்யும் சுதீப், தனது அதிரடியான நடிப்பு மூலம் படம் முழுவதும் மாஸாக வலம் வருகிறார். சில நிமிடங்களில் சுமார் 50 பேர்களை அடித்து துவைக்கும் காட்சிகளை நம்பும்படி செய்திருக்கிறார். போதையில் காவல் நிலையத்தில் அறிமுகமாகும் காட்சி முதல், ”சிகரெட் பிடிப்பதை குறைக்க வேண்டும்”, என்று இறுதியில் வசனம் பேசும் காட்சி வரை, தனி ஒருவராக முழு படத்தையும் தன் தோளில் சுமந்து பார்வையாளர்களின் கவனம் முழுவதையும் தன் பக்கம் ஈர்த்து விடுகிறார்.
வில்லனாக நடித்திருக்கும் நவீன் சந்திரா, தன் பார்வையிலேயே கொடூரத்தை வெளிப்படுத்தி பார்வையாளர்களை நடுங்க வைத்து விடுகிறார். கடும் கோபத்துடன் படம் முழுவதும் வலம் வரும் நவீன் சந்திராவின் வில்லத்தனம் மிரட்டல்.
மற்றொரு வில்லனாக நடித்திருக்கும் குரு சோமசுந்தரத்திற்கு பெரிய அளவிலான கதாபாத்திரம் இல்லை என்றாலும் கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார்.
சிறிய கதாபாத்திரம் என்றாலும் விக்ராந்த், கதையின் மையப்புள்ளியாக பயணித்து திரைக்கதையின் பரபரப்புக்கு உதவியிருக்கிறார்.
யோகி பாபு வரும் இடங்களில் காமெடி பெரிதாக எடுபடவில்லை என்றாலும் படத்திற்கு அடையாளமாக பயணித்திருக்கிறார்.
ரோஷ்னி பிரகாஷ், தீபிக்ஷா, ட்ராகன் மஞ்சு, கோபால்கிருஷ்ணன் தேஷ்பாண்டே, அபிஷேக் ஜோசப் ஜார்ஜ், அர்ச்சனா கோட்டி உள்ளிட்ட மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடித்திருக்கிறார்கள்.
போரடிக்காத ஒரு முழுமையான மாஸ் ஆக்ஷன் கமர்ஷியல் படத்திற்கான அத்தனை அம்சங்களும் நிறைந்திருந்தாலும், இரண்டாம் பாதி சற்று சோர்வடைய செய்கிறது. இருந்தாலும், குழந்தைகளை உயிருடன் மீட்பதற்கான நேரம் குறைந்துக் கொண்டிருக்கும் காட்சிகள், அந்த சோர்வை மறக்கடித்து படத்துடன் பார்வையாளர்களை பயணிக்க வைத்து விடுகிறது.
மொத்தத்தில், ‘மார்க்’ பாஸ் மார்க் 3.5/5
