வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 6
Shadow

ஜாக்கி விமர்சனம் 3.5/5

 

ஜாக்கி விமர்சனம் 3.5/5

மதுரை பகுதிகளில் நடக்கும் கிடா சண்டைகள்,அவற்றில் கிடைக்கும் வெற்றி தோல்விகள், அதன் பின்விளைவுகள் ஆகியனவற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் படம் ஜாக்கி.

ஆட்டோ ஓட்டுநரான நாயகன் யுவன் கிருஷ்ணா, கிடா சண்டை மீது அதிக ஈடுபாடு உள்ளவர். பணக்காரரான வில்லன் ரிதன் கிருஷ்ணா கிடா சண்டையைக் கவுரவமாக நினைப்பவர். யுவன் கிருஷ்ணாவின் கிடா, ரிதன் கிருஷ்ணாவின் கிடாயை வீழ்த்துகிறது.அதனால் நாயகன் மீது பகை பாராட்டுகிறார் வில்லன். இதனால், இருதரப்புக்கும் இடையே அடிக்கடி அடிதடி நடக்கிறது. கிடா சண்டையால் ஏற்பட்ட பகைக்கு, அதே கிடா சண்டை போட்டி மூலம் முற்றுப்புள்ளி வைக்க ஊர்ப்பெரியவர்கள் முடிவு செய்கிறார்கள்.அப்போட்டி நடந்ததா? அதன் முடிவு என்ன? ஆகிய கேள்விகளுக்கான விடைதான் படம்.

மதுரை மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் நடக்கும் கிடா சண்டை போட்டியை மையப்படுத்திய கதையை மிக யதார்த்தமாக சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநர் டாக்டர்.பிரகாபல, கிடா சண்டை போட்டிகளை உண்மைக்கு நெருக்கமாக காட்சிப்படுத்தியிருப்பது படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.

நாயகனாக நடித்திருக்கும் யுவன் கிருஷ்ணா, மதுரை இளைஞராக நடிப்பில் மிரட்டியிருப்பதோடு, தான் வளர்க்கும் கிடா போல் சண்டைக் காட்சிகளில் அமர்க்களப்படுத்தியிருக்கிறார். ஒரு பக்கம் அடிதடி என்று பயணிப்பவர் மறுபக்கம் அம்மு அபிராமி உடனான காதல் காட்சிகள் மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகளில் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி நடிகராக தேர்ச்சி பெற்று விடுகிறார்.

ஹீரோவுக்கான அத்தனை அம்சங்கள் இருந்தாலும், வில்லனாக மிரட்டியிருக்கும் ரிதன் கிருஷ்ணா, ”கிடா சண்டை மட்டும் அல்ல, ரவுடிசமும் பண்ண தெரியும்” என்று அதிரடி வசனங்கள் பேசி, தன் பங்கிற்கு திரையில் பெரும் அனலை கக்கியிருக்கிறார்.

கதை நாயகியாக நடித்திருக்கும் அம்மு அபிராமியின் அழகும் இளமையும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக, கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார்.

மதுசூதன் ராவ், சித்தன் மோகன், சரண்யா ரவி, பத்மன், யோகி, சாய் தினேஷ், சிதம்பரம், பிரவீன், ஆதவ், ஈஷா ஆகியோரும் மதுரைக்காரர்களை நினைவு படுத்தும் வண்ணம் நடித்திருப்பது வியப்பு.

ஒளிப்பதிவாளர் என்.எஸ்.உதயகுமார் உழைப்பு கிடா சண்டைகளை காட்சிபடுத்தி இருக்கும் அழகு நாமே அந்த கிடா சண்டைகளை பக்கத்தில் இருந்து பார்க்கும் உணர்வை ஏற்படுத்துகிறது.

சக்தி பாலாஜியின் இசையில் பாடல்கள் கேட்கலாம் ரகம். பின்னணி இசையால் கிடா சண்டைப் போட்டிகள் பரபரப்பை அதிகரித்துள்ளது. படத் தொகுப்பாளர் என்.பி.ஸ்ரீகாந்த்,படத்தைத் விறுவிறுப்பாக தொகுத்துக் கொடுத்திருக்கிறார்.

மலையாளத்தை தாய்மொழியாக கொண்டாலும் மதுரை மண்ணின் வாசத்தையும் , வீரத்தையும் மிக அழகாக உள்வாங்கி கதை திரைக்கதை அமைத்து சபாஷ் வாங்குகிறார் இயக்குனர் டாக்டர் பிரகாபல்.

மொத்தத்தில் ஜாக்கி பெயருக்கேற்றார்போல அதில் பயணப்பட்ட அனைவரின் உயர்வுக்கும் வழி வகுக்கும்.

 

கோடங்கி 3.5/5

 

48 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன