
வித் லவ் விமர்சனம் 4/5
முதல் காதல் பலருக்கு தோல்வியில் முடிந்தாலும், அதன் நினைவுகள் மட்டும் ஏதாவது ஒரு தருணத்தில், நம் இதயத்தை தொட்டுக்கொண்டே இருக்கும். அப்படி ஒரு தருணமாக நம் முதல் காதலை நினைவுப்படுத்துவது மட்டும் இன்றி, அந்த காதலை மீண்டும் தேடிச் செல்லும் ஒரு இனிமையான பயணத்தை மேற்கொள்ள தூண்டுவது தான் இப்படத்தின் கதைக்கரு.
நேற்று என்பது இன்று கடந்த காலம் .இன்று என்பது நாளை கடந்த காலமாகிவிடும். இப்படிக் கடந்த கால நினைவேக்கத்தில் கதாபாத்திர உணர்வுகளைச் சொல்லும் படைப்புகளுக்குத் தனி மதிப்பு உண்டு. ஒவ்வொரு மனிதனும் அந்த உணர்வைக் கடக்காமல் வந்திருக்க முடியாது.நமது அடிமன ஆழத்தில் உறைந்து கிடக்கும் அந்த உணர்வுகளை மீட்டிப் பார்ப்பது என்றுமே சிலிர்ப்பூட்டும் சுகமான அனுபவமாக இருக்கும்.காயத்தின் வடுவாக இருந்தாலும் கூட பிற்காலத்தில் அதைத் தடவி பார்க்கும்போது தோன்றும் மன எழுச்சி அலாதியானது .இப்படி ஒரு நாஸ்டால்ஜியா உணர்வை எடுத்துக்கொண்டு காதல் கதையாக உருவாகி இருக்கும் படம் தான் ‘வித் லவ்’.
திருமணத்திற்காக குடும்பத்தார் பார்த்த அனஸ்வரா ராஜனை சந்திக்கிறார் அபிஷன் ஜீவிந்த். இருவரும் தங்களைப் பற்றிய விபரங்களை பரிமாறிக்கொள்ளும் போது, தங்களது முதல் காதல் மற்றும் அதன் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்கிறார்கள். அப்போது அனஸ்வரா ராஜானுக்கு தோன்றும் ஒரு யோசனை மூலம், இருவரும் இணைந்து தங்களது முதல் காதலை தேடிச் செல்கிறார்கள். அந்த தேடுதல் பயணம் இவர்களிடத்தில் காதலை உண்டாக்கியதா ? இல்லையா ? என்பதை, மனதின் ஆழத்தில் புதைந்திருக்கும் மகிழ்ச்சியான அல்லது வலிமிகுந்த முதல் காதல் தருணங்களை மீண்டும் உயிர்ப்பிக்கும் வகையில் சொல்வதே ‘வித் லவ்’.
பள்ளிப் பருவக் காதல் என்பது எதிர்பார்ப்புகள் இல்லாத, தூய்மையான மற்றும் முதல் வலி நிறைந்த நினைவாகும். இந்த பருவம் காதல், நட்பு மற்றும் சிறு சிறு உணர்ச்சிப் போராட்டங்களை உள்ளடக்கிய மறக்க முடியாத ஒரு காலகட்டம் என்பதை இயக்குநர் மதன் அழகியலோடு சொல்லி அசத்தியிருக்கிறார்.
பார்த்த உடனே பிடிக்கவில்லை என்றாலும், பார்க்க பார்க்க பிடித்துப் போவதோடு, பார்வையாளர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துவிடும் அம்சங்கள் நிறைந்த நாயகனாக வலம் வரும் அபிஷன் ஜீவிந்த், பள்ளிப் பருவம் மற்றும் இளமை பருவம் என இரண்டு தோற்றங்களுக்கும் கச்சிதமாக பொறுந்துவதோடு, நடிப்பின் மூலமாகவும் தன்னை ரசிக்க வைத்திருக்கிறார். டூரிஸ்ட் பேமிலி ’என்கிற தன் முதல் படத்தின் மூலம் ஒரு வெற்றிகரமான இயக்குநராக விளங்கிக் கவனம் பெற்ற அபிஷன் ஜீவிந்த் இதில் சத்தியசீலன் என்கிற சத்யாவாக நடித்துள்ளார்.ஒரு திரைக்கதாநாயகனுக்குள்ள தோற்றம் இல்லாவிட்டாலும் கதையின் நாயகனாகிப் போகப் போக மனதில் பதிகிறார். பள்ளிக்காலத் தோற்றம், வாலிபனாக மாற்றம் என்று இரு வேறு தோற்றங்களில் அபிஷன் மிகச் சரியாகப் பொருந்துகிறார். இயல்பான முகம், மிகை தோன்றா நடிப்பு என்று அவர் ஸ்கோர் செய்துள்ளார். அந்தப் பாத்திரத்திற்கான காதல், ஆசை, ஏக்கம், வருத்தம்,புறக்கணிப்பு, வலி, அவமானம் ,தாழ்வுணர்ச்சி, கோபம்,பொறாமை என வெளிப்பட வாய்ப்புள்ள சகல விதமான நடிப்புத் தருணங்களையும் பயன்படுத்தி ஸ்கோர் செய்திருக்கிறார்.
அதேபோல் மோனிஷாவாக வரும் அனஸ்வரா ராஜன், எளிமையான அழகோடு, அசத்தலான நடிப்போடும் கவனம் ஈர்க்கிறார். சொல்லாமல் போன காதலை மீண்டும் சொல்ல வேண்டும், என்ற அவரது முயற்சியும், அதற்கான பயணத்தில் ஏற்படும் தன் மன மாற்றங்களையும் அழகியலோடு வெளிப்படுத்தியிருக்கும் அனஸ்வரா ராஜன் அழகு. ஆனால், அவர் டப்பிங் பேசியதற்குப் பதில் வேறு ஒருவரை பேச வைத்திருந்தால், அவரது உடல் மொழி அசைவுகளுக்கு கூடுதல் அழகுக்கு அழகு சேர்த்திருக்கும்.
அனிஷா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காவ்யா அனில், சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், பார்வையாளர்களின் முதல் காதல் நினைவுகளை கீறி விடும் மாயாஜாலத்தை தன் நடிப்பின் மூலம் நிகழ்த்தியிருக்கிறார்.
நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் தேனி முருகன், பள்ளி ஆசிரியராக நடித்திருக்கும் சரவணன், நாயகனின் நண்பர்களாக நடித்திருக்கும் ஹரிஷ் குமார், சச்சின் நாச்சியப்பன், சித்தார்த், நாயகியின் பள்ளி தோழிகளாக நடித்திருக்கும் டிம்பிள் கண்ணா, சாச்சனா, அக்காவாக நடித்திருக்கும் ஆர்.ஜே.ஆனந்தி ஆகியோரது கதாபாத்திரங்களின் பயணம் சிறியதாக இருந்தாலும், திரைக்கதையில் ஏற்படும் பாதிப்பு மிகப்பெரியது.
ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா, தனது பணி தனித்துவமாக இருக்க வேண்டும் என்பதை தவிர்த்துவிட்டு, படம் பார்ப்பவர்களும் தங்களது பள்ளி வாழ்க்கையின் நினைவுகளோடு பயணிக்க வேண்டும், என்பதில் அதிகம் கவனம் செலுத்தியிருப்பது திரையில் தெரிகிறது.
ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகங்களாக இருந்தாலும், அன்புடன் என்ற வார்த்தைக்கு அதிகப்படியான பலம் சேர்க்கும் பாடல்களாக இல்லை என்பதையும் மறுக்க முடியாது. பின்னணி இசை காதல் போல் இனிமை.
எழுதி இயக்கியிருக்கும் மதன், முதல் காதல் அனுபவங்களை அசைபோடும் நினைவுகளை மையக்கருவாக எடுத்துக்கொண்டு, தமிழ் சினிமாவில் ஏற்கனவே வெளியான படங்களின் பாதிப்பாக கையாண்டிருந்தாலும், தற்போதைய காலக்கட்ட இளைஞர்களுக்கு ஏற்றபடியான காட்சிகளை வடிவமைத்து பார்வையாளர்களை மகிழ்விப்பதில் வெற்றி கண்டிருக்கிறார்.
மொத்தத்தில் காதலர்கள் தோற்றாலும், காதல் உணர்வு தோற்பதில்லை, என்பதை கவிதையாக சொல்லியிருக்கிறது “வித் லவ்”
கோடங்கி 4/5
