செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 28
Shadow

நான் இயக்குநராக இந்த மேடையில் நிற்பதற்கு தனுஷ் சார் ஒரு முக்கிய காரணம் – கென் கருணாஸ்

நான் இயக்குநராக இந்த மேடையில் நிற்பதற்கு தனுஷ் சார் ஒரு முக்கிய காரணம் – கென் கருணாஸ்

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’. பள்ளி பருவ வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை பார்வதா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் கருப்பையா சி.ராம் தயாரித்திருக்கிறார்.

கென் கருணாஸ் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில், ‘சிறை’ புகழ் அனிஷ்மா, மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ் ஆகியோர் நாயகிகளாக நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் தேவதர்ஷினி, சுராஜ் வெஞ்சாரமூடு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. படம் வரும் மார்ச் 19 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்ச்சி இன்று சென்னை, சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில், நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.

நடிகை மீனாட்சி தினேஷ் பேசுகையில், “யூத் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மிகவும் சந்தோஷமாக உள்ளது. என் வாழ்க்கையில் லக் ஒன்றே இல்லை என்று நினைத்தேன். ஆனால் கென்னை சந்தித்த பிறகு தான் எனக்கு லக் வந்தது போல உணர்கிறேன். இந்த படத்தில் என்னை தேர்வு செய்ததற்கு அவருக்கு நன்றி. தனுஷ் மற்றும் வெற்றிமாறன் போன்ற பெரிய கலைஞர்கள் முன்னிலையில் இந்த மேடையில் நிற்பது கனவு நனவானது போல இருக்கிறது. தயாரிப்பாளர் கருப்பையாவுக்கும், ஒளிப்பதிவாளர் விக்கி சாருக்கும் பெரிய  நன்றி. இந்த படக்குழு ஒரு குடும்பம் போல இருந்தது என்றும் அனைவரும் மிகவும் அன்பாக நடந்து கொண்டார்கள்,  சுராஜ் சார், நளினி மேடம் மற்றும் மற்ற நடிகர்களுடன் பணியாற்றியது மிகுந்த மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி.” என்றார்.

நடிகை பிரியன்ஷி யாதவ் பேசுகையில், “இந்த படம் எங்களுக்கு  ஒரு கனவு திட்டம். இந்த படம் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. படப்பிடிப்பு நேரத்திலேயே இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று பேசிக்கொண்டே இருப்போம். இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த கென்னுக்கு மிகவும் நன்றி.  தமிழ் மொழி தெரியாதிருந்தாலும், படக்குழுவில் இருந்த டீம், முழு யூனிட்டும் மிகவும் அன்பாக நடந்துகொண்டார்கள்.  நாங்கள் அனைவரும் மிகவும் நேர்மையாக உழைத்திருக்கிறோம். இந்த படத்தை நீங்கள் அனைவரும் ஆதரிக்க வேண்டும், நன்றி.” என்றார்.

நடிகை அனிஷ்மா பேசுகையில், “எனக்கு இந்த மேடையில் நிற்பதே மிகவும் பதட்டமாக இருக்கிறது. இத்தனை பெரிய ரசிகர்கள் முன்னால் பேசுவது ஒரு பெரிய அனுபவம். இந்த படத்தில் என்னை நடிக்க வைத்த கென்னுக்கு மிகவும் நன்றி. இது என்னுடைய கனவு திரைப்படம் போல தான். கென் இந்த வயதிலேயே மிகவும் கடினமாக உழைத்து இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார். அவரைப் பார்த்து எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. இந்த படம் அவருடைய வாழ்க்கையை இன்னும் பெரிய அளவில் மாற்றும் என்று நம்புகிறேன். தயாரிப்பாளர் கருப்பையா, மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் ஆகியோருக்கும் நன்றி. ஜி.வி. பிரகாஷ் சார் இசைக்கு நான் பெரிய ரசிகை. அவருடைய பாடல்களுக்கு வீட்டிலேயே டான்ஸ் ஆடியிருக்கிறேன். இன்று அவருடைய இசையில் நான் நடித்திருப்பது எனக்கு மிகவும் சந்தோஷம். மேலும், சுராஜ் சார், தேவதர்ஷிணி மேடம் மற்றும் முழு படக்குழுவுக்கும் நன்றி, இந்த படம் அனைவருக்காகவும் வெற்றி பெற வேண்டும்.” என்றார்.

நடிகர் சுராஜ் பேசுகையில், “எல்லா தமிழ் மக்களுக்கும் வணக்கம். இது என்னுடைய இரண்டாவது தமிழ் திரைப்படம். இந்த படத்தில் இப்படியான ஒரு கேரக்டரை கொடுத்த இயக்குநர் கென்னுக்கும், தயாரிப்பாளர் கருப்பையாவுக்கும் என் நன்றிகள். இந்த படத்தில் நடித்த அனைவரும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். தேவதர்ஷினி மேம், நளினி மேம் போன்ற அனுபவமுள்ள நடிகைகளுடன் வேலை செய்தது மகிழ்ச்சி. அதேபோல் அனிஷ்மா, மீனாட்சி, பிரியாஞ்சி ஆகிய ஹீரோயின்களும் மிக அழகாக நடித்திருக்கிறார்கள். சின்னாவின் மிமிக்ரி திறமை எனக்கு மிகவும் பிடிக்கும்.

கென் கேரளா வந்து கதையை சொன்ன போது ஒவ்வொரு கேரக்டரின் உணர்ச்சிகளையும் நடித்துக் காட்டி கதையை விவரித்தார். கூடவே மொபைலில் படம் முழுவதையும் முன்கூட்டியே எடுத்துக் காட்டினார். அப்போதே படம் பார்த்த மாதிரி உணர்வு வந்தது. கென் ஸ்கிரீன் பிரெஸன்ஸும், சிரிப்பும் எனக்கு மிகவும் பிடிக்கும். எதிர்காலத்தில் அவர் ஒரு பெரிய நட்சத்திரமாக மாறுவார் என்பது உறுதி. இந்த படத்திற்கு தயாரிப்பாளர் மிகப் பெரிய ஆதரவு கொடுத்துள்ளார். அவரும் தமிழில் பெரிய தயாரிப்பாளராக வளர வேண்டும் என்று வாழ்த்துகிறேன். மேலும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் சார் இசை மிகவும் அருமையாக உள்ளது. அவருடைய இசைக்கு நான் பெரிய ரசிகன்

நடிகர் கருணாஸ் பேசுகையில், “இந்த நிகழ்வில் நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் இருவரும் ஒன்றாக இருப்பது மிகவும் பெருமையான தருணம்.  “கென்னை ஒரு நடிகராக அடையாளப்படுத்தியது வெற்றிமாறன். அதே நேரத்தில் அவரிடம் இருந்து இயக்கம் கற்றுக்கொள்ள வாய்ப்பு கொடுத்தது தனுஷ். இந்த இருவரும் இங்கே வந்து அவனுக்காக நிற்பது எங்களுக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி. தனுஷை நான் முதன் முதலாக சந்தித்த போது அவர் மிகவும் இளம் வயதில் இருந்தார். ‘காதல் கொண்டேன்’ படத்தை பார்த்த பிறகு, தமிழ் சினிமாவுக்கு ஒரு பெரிய நடிகர் கிடைத்திருக்கிறார் என்று நான் சொன்னேன். இன்று இந்திய சினிமாவில் இரண்டு தேசிய விருதுகளை பெற்ற நடிகர் என்ற பெருமையை தனுஷ் பெற்றுள்ளார்.

நான் சிறு வயதிலிருந்தே மேடைகளில் இருந்து மக்களை சந்தித்து வருகிறேன். சினிமாவை நாம் உண்மையாக நேசித்தால், சினிமா ஒருபோதும் நம்மை கைவிடாது என்று நான் நம்புகிறேன்” கென் இந்த படத்தை உருவாக்க மிகவும் கடினமாக உழைத்துள்ளார், தயாரிப்பாளர் கருப்பையா மற்றும் அவரது குழுவினர் இந்த படத்தை மிகுந்த அர்ப்பணிப்புடன் உருவாக்கியுள்ளனர். இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் சம்பளம் கேட்காமல் இந்த படத்திற்கு இசை அமைத்ததற்கு நன்றி. இறுதியாக, “இந்த படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவருக்கும் என் குடும்பத்தின் சார்பாக நன்றி. ‘யூத்’ படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.” என்றார்.

தயாரிப்பாளர் கருப்பையா பேசுகையில், “கென்னை எனக்கு நல்ல பழக்கம் அவர் கதை வைத்து சுற்றிக்கொண்டிருந்த போது நானும் படம் செய்ய சுற்றிக் கொண்டிருந்தேன். ஒரு தயாரிப்பில் என்னை செய்ய சொன்னபோது நான் கென் கதையை முதலில் செய்யலாம் என முடிவு செய்து கதை கேட்டேன் கதை எனக்கு மிகவும் பிடித்தது. பின் அந்த தயாரிப்பு நிறுவனம் வாங்கியது. ஆனால் இந்தப்படத்தை விட மனமில்லை என்ன ஆனாலும் ஓகே என நானே இப்படத்தை ஆரம்பித்தேன். கென் அற்புதமாக இப்படத்தை உருவாக்கி தந்தார். படம் விற்பனையும் ஆகிவிட்டது. படம் மிக நன்றாக வந்துள்ளது. இந்த பயணத்தில் துணை நின்ற அனைவருக்கும் நன்றி. என் குடும்பத்தாருக்கு நன்றி. இப்படத்தில் பணியாற்றிய சுராஜ் சார், நாயகிகள் உட்பட நடிகர்கள் மற்றும் கலைஞர்களுக்கு நன்றி. நான் தனுஷ் சாரின் தீவிர ரசிகன் அவர் வந்து வாழ்த்தியது பெருமை. வெற்றிமாறன் சாருக்கு மிகப்பெரிய நன்றி அனைவருக்கும் நன்றி.” என்றார்.

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் பேசுகையில், “தனுஷ் மற்றும் வெற்றிமாறன் போன்ற மிகவும் ஸ்ட்ரிக்ட் டைரக்டர்களிடம் கற்றுக்கொண்ட ஒரு பையன் தான் கென். ஆனால் அவர் ஒரு பேக் பெஞ்சர் மாதிரி ஜாலியாக ஒரு யூத் படத்தை எடுத்திருக்கிறார். பள்ளி பின்னணியில் பசங்களின் வாழ்க்கையை வைத்து ஒரு கலகலப்பான படம் பண்ணியிருக்கிறார் கருணாஸ் மூலம் தான் இந்த படத்தில் இசையமைக்க வாய்ப்பு கிடைத்தது, நான் முதல் படத்தில் நடிக்கும் போது அவரிடம் இருந்து தன்னுக்கு நிறைய நம்பிக்கை கிடைத்தது, அதற்காகவே அவர் மகன் படத்தில் வேலை செய்ய நினைத்தேன்.

இந்த படத்தில் நடித்த தேவதர்ஷினி, நளினி, சுராஜ் மற்றும் மூன்று ஹீரோயின்களான பிரியாஞ்சி, மீனாட்சி, அனிஷ்மா எல்லோரும் மிகச்சிறப்பாக நடித்துள்ளனர். ‘யூத்’ படம் கண்டிப்பாக ஒரு நல்ல யூத் என்டர்டெயினராக இருக்கும். இந்த படக்குழுவுக்கு என் வாழ்த்துகள். படம் பெரிய வெற்றி பெற வேண்டும்.” என்றார்.

இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில், “இவ்வளவு பாசிட்டிவாக ஒரு முழு யூனிட்டாக வேலை செய்வது எல்லா படங்களிலும் நடக்காது. சில படங்களுக்கே அது அமையும். ஒரு டீம் இப்படியாக ஒன்றுபடுவதற்கு முக்கிய காரணம் அந்த படத்தை வழிநடத்தும் இயக்குநரின் நம்பிக்கையும் மனநிலையும் தான்” கென்னுக்கு என் வாழ்த்துக்கள்.  கென்  கதை சொல்லிய விதம் மிகவும் சிறப்பாக இருந்தது, ஒவ்வொரு காட்சிக்கும் இசை மற்றும் உணர்வுகளை இணைத்து மிகவும் மெட்டிக்குலஸாக கதையை விளக்கினார்.

கென் ஒரு நடிகராகவும், இயக்குநராகவும் தானாக உருவான ஒருவராக இருக்கிறார். அவருக்கு தனுஷ் அளித்த நம்பிக்கையும் ஆதரவும் அவருக்கு பெரிய தைரியம் கொடுத்துள்ளது”. என்னைவிட தனுஷ் அவரை அதிகம் நம்பினார் செதுக்கியிருக்கிறார்.“கருணாஸ் மற்றும் கிரேஸ் அவர்களுக்கு இது மிகவும் பெருமையான தருணம். இந்த ‘யூத்’ படம் கண்டிப்பாக நல்ல வெற்றி பெறும் என்று நம்புகிறேன், வாழ்த்துகள்.” என்றார்.

இயக்குநர் நடிகர் கென் கருணாஸ் பேசுகையில், “இந்த படத்தில் என்னை நம்பி நடித்த அனைத்து கலைஞர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நான் மிகவும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். நீங்கள் இல்லாமல் இந்த படம் உருவாகியிருக்காது. என்னை முதலில் நடிகராக அறிமுகப்படுத்திய மறைந்த இயக்குநர் தாமிரா அவர்களை நினைவுகூறுகிறேன் அவர் ஆசிர்வாதம் இருக்குமென நம்புகிறேன்.  அதேபோல் இயக்குநர் வெற்றிமாறன் எனது திறமையை கண்டுபிடித்து ஊக்கமளித்தவர் அவருக்கு  நன்றி. தனுஷ் சார் தெரிந்தோ தெரியாமலோ அவர் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்திருக்கிறார். இன்று நான் இயக்குநராக இந்த மேடையில் நிற்பதற்கு அவர் ஒரு முக்கிய காரணம், அவருக்கு என் நன்றி.  அவர் முன்னால் நான் இயக்குநராக மேடையில் நிற்பது பெருமை. இந்த படத்தை தயாரித்த கருப்பையா மற்றும் அவரது குழுவினருக்கும், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் அளித்த ஆதரவுக்கும் நன்றி. இந்த ‘யூத்’ படம் மார்ச் 19 அன்று வெளியாகிறது. அனைவரும் திரையரங்குகளில் வந்து இந்த படத்தை பார்த்து ஆதரிக்க வேண்டும் நன்றி.” என்றார்.

 

39 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன