
டபுள் ஆக்குபன்சி விமர்சனம் 3/5
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதை வித்தியாசமான கதை என்று சொல்வார்கள்.
ஆனால் உண்மையிலேயே அப்படி ஒரு வித்தியாசமான கதையோடு வந்திருக்கும் படம் டபுள் ஆக்குபன்சி.
ஒரே உடல்,ஒரே உயிர்.ஆண்,பெண் என இருவேறு உருவங்கள் அதற்கேற்ற குணங்கள் என்பதுதான் கதை. ஓருடல் காலை ஆறுமணி முதல் மாலை ஆறுமணிவரை பெண்ணாகவும் மாலை ஆறுமணி முதல் காலை ஆறுமணி வரை ஆணாகவும் இயங்குகிறது.
இருவரும் தனித்தனி வேலை செய்கிறார்கள்.தனித்தனி காதல் செய்கிறார்கள் என்றால் எப்படி இருக்கும்?
கதைப்படி… திருமணமாகி பல வருடங்களுக்குப் பிறகு, போஸ் வெங்கட் – வினோதினி தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது.
ஆனால், அந்த குழந்தை பேச்சு மூச்சில்லாமல் இருப்பதால், உயிர் பிழைக்க கடவுளிடம் வேண்டுகிறார், போஸ் வெங்கெட். அதன் பலனாக போன குழந்தை உயிர் திரும்ப வருகிறது. இரட்டிப்பாக. அதாவது 12 மணி நேரம் ஆணாகவும், அடுத்த 12 மணி நேரம் பெண்ணாகவும் உடலமைப்பு மாறி விடுகிறது. இதனால், முதலில் அதிர்ச்சி அடையும் பெற்றோர்கள் குழந்தையின் சிறுவயதிலிருந்தே அதை ஏற்றுக் கொள்வதற்கும், அதன்படி நடந்து கொள்ளவும் பழக்கப்படுத்தி விடுகிறார்கள்.
ஒரு உயிரில் பிறந்த இரண்டு உடல்களாக சந்தோஷ், ரேஷ்மா வெங்கடேஷ். இந்த இருவரும் தான் ஆண், பெண்ணாகவும்… பெண், ஆணாகவும்… மாறிக் கொள்கிறார்கள். வாலிபவ பருவத்தை அடைந்த இருவருக்கும் காதல் உருவாகிறது. சந்தோஷ், சம்யுக்தா விஸ்வநாதன் காதலர்களாகி விட, வினோத் கிஷன், ரேஷ்மா வெங்கடேஷூம் காதலர்களாகி விடுகின்றனர்.
ஒரு உயிரில் இரண்டு உடல்கள் உருமாறுவதை கவனிக்கும் டாக்டர் பக்ஸ் பகவதி பெருமாள், அவர்களை தனது ஆராய்ச்சிக்கு பயன்படுத்தி அதன் மூலம் பெரு பணம் ஈட்ட முயற்சிக்கிறார். காதல் என்ன ஆனது? டாக்டரின் முயற்சி என்ன ஆனது? என்பது தான், ‘டபுள் ஆக்குபன்சி’ படத்தின் இன்ட்ரஸ்ட்டிங்கான கதை.
ரசனையான கதையை தேர்ந்தெடுத்த அறிமுக இயக்குநர் அஸ்வின் கந்தசாமி திரைக்கதையில் அந்த ரசனையை கொடுக்க தவறியிருக்கிறார்.
இது ஒரு பக்கா, அடல்ட் காமெடி படம். அறிவியலுக்கு சவால் விடுகிற சப்ஜெக்ட்டை கையில் எடுத்து அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளமல், சயின்ஸ் ஃபிக்ஷனாக சொல்வதா, சூப்பர் நேச்சுரல் பாணியில் சொல்வதா என பெருங்குழப்பத்தில் திரைக்கதை செல்வதுதான் படத்தின் மைனஸ்.
வெடித்து சிரிக்க வேண்டிய தருணங்கள் கதையம்சத்தில் இருந்தாலும் அதை தவறவிட்ட இயக்குநர் விடிவி கணேஷை வைத்துக்கொண்டு கொஞ்சம் சிரிக்க வைத்திருக்கிறார்.
படத்தின் முதல் பாதி ஓகே ரகம்… இரண்டாம் பாதி குழப்பம், பலம் இல்லாத க்ளைமாக்ஸ். கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கும் சந்தோஷுக்கு அறிமுக படமே வித்தியாசமான முயற்சி என்பதாலும், ஹீரோவுக்கான அனைத்து தகுதிகளும் இருப்பதால் வாய்ப்புகள் வரும்.
சந்தோஷின் காதலியாக நடித்திருக்கும் சக்யுக்தா விஸ்வநாதன் ஓகே ரகம். கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். வினோத் கிஷனை காதலிக்கும் ரேஷ்மா வெங்கடேஷுக்கு சற்று அழுத்தமான கதாபாத்திரம். அலட்டிக்கொள்ளாமல் நடித்து, தனி கவனம் பெறுகிறார்.
வில்லனாக பார்த்த வினோத் கிஷன், இந்தப்படத்தில் தனக்கென தனியிடத்தை பெறுகிறார். அனைவரையும் எளிதில் ஈர்க்கும் வண்ணம் நடித்திருக்கிறார்.
விடிவி கணேஷ், சில காட்சிகளில் சிரிக்க வைக்கிறார். போஸ் வெங்கட், வினோதினி, பகவதி பெருமாள், விச்சு விஸ்வநாத் ஆகியோரும் கவனம் பெறுகிறார்கள். சாந்தகுமார் சக்கரவர்த்தியின் ஒளிப்பதிவும், சாம்.சி.எஸ் இசையும் படத்திற்கு பலம் சேர்க்கிறது.
திரைக்கதையில் மட்டும் இயக்குனர் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் டபுள் ஆக்குபன்ஸி வசூல் ஆக்குபன்சியாக மாறியிருந்திருக்கும்.
மொத்தத்தில், ‘டபுள் ஆக்குபன்சி’ வித்தியாசமான முயற்சி!
கோடங்கி 3/5
