
விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் கதையின் நாயகனாக நடிக்கும் படம் ‘மதுரவீரன்’. பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்து இயக்கி வரும் இந்த படத்தில் ‘என்ன நடக்குது நாட்டுல’ என்று துவங்கும் ஒரு பாடல் இடம்பெறுகிறது.
சமீபத்தில் வெளியான இந்த பாடலுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சமகாலத்தில் நம் சமூகத்தில் நடக்கும் அவலங்களை தோலுரித்து காட்டும் விதமாக அமைந்துள்ள இப்பாடல் குறித்து இயக்குனர் பி.ஜி.முத்தையா கூறும்போது,
‘‘எனக்கு படத்தில் பட்டுக்கோட்டையார் பாடலை போல ஒரு பொதுவுடமை பாடல் தேவைப்பட்டது. இதை நான் கவிஞர் யுகபாரதியிடம் கூறியதும் அவர், ‘‘என்ன நடக்குது நாட்டுல’ என்று தொடங்கும் பாடல் வரிகளை எழுதி கொடுத்தார். நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக இப்போது அந்த பாடல் மக்களிடம் சென்றடைந்துள்ளது.
அரசியல் கட்சி பொதுகூட்டங்களிலும் இப்பாடல் தற்போது முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பாடலின் இசை எளிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக இசை அமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி டோலக் மற்றும் ஹார்மோனியம் என்ற இரண்டே கருவிகளை கொண்டு இசை அமைத்துள்ளார். பாடல் வரிகளுக்கு அதிக முக்கியத்தும் கொடுத்து உருவாக்கப்பட்ட இப்பாடல் தற்போது மேடையில் இசை அமைத்து பாடுபவர்களுக்கு எளிமையாக உள்ளது.
நிறைய நண்பர்கள் என்க்கு ஃபோன் செய்து, ‘என்ன நடக்குது நாட்டுல’ பாடல் பட்டுக்கோட்டையார் எழுதிய பாடல் போல சிறப்பாக உள்ளது’’ என்று கூறியது மிகுந்த மகிழ்ச்சையை அளித்துள்ளது’’ என்றார். கவிஞ்ர யுகபாரதி எழுதிய இப்பாடலுக்கு சந்தோஷ் தயாநிதி இசை அமைக்க சமுத்திரகனி தோன்றி நடித்துள்ளார்
