
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, மூன்று ஆண்டுகளுக்கு பிறகு பேரல் 70 டாலர்களை தொட்டதால் பெட்ரோல், டீசல் விலையும் உயர்வு கண்டுள்ளன.
உலக அளவில் கச்சா எண்ணெய் அதிக அளவு உற்பத்தி செய்யும் ரஷ்யாவும், கச்சா எண்ணெய்யை அதிகம் விநியோகிக்கும் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பும் கடந்த சில தினங்களாக கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்து வருகின்றன.
இதுபோலவே, டாலரின் மதிப்பு சரிந்து வருவதாலும் அதன் தாக்கம் கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது.
இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. கச்சா எண்ணெய் விலை பேரல் 70 டாலர்களுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

இதற்கு முன்னதாக, 2014 டிசம்பரில் இதே விலையில் கச்சா எண்ணெய் விற்பனையானது. மூன்றாண்டுகளுக்கு பிறகு கச்சா எண்ணெய் விலை பேரல் 70 டாலர்கள் என்ற அளவில் விற்பனையாவதால், அதன் எதிரொலியாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் உயர்ந்துள்ளது.
பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து 09 காசுகள் அதிகரித்து இன்று லிட்டருக்கு 73.89 ரூபாயாக விற்பனையாகிறது. டீசல் நேற்றைய விலையில் இருந்து15 காசுகள் உயர்ந்து 65.23 ரூபாயாக உள்ளது.
கச்சா எண்ணெய்யை பொருத்தவரையில், 2014ம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஒரு பேரல் 109.05 டாலராக இருந்தது. அதன்பின் சரிந்து அந்த ஆண்டு டிசம்பரில் 70 டாலர்கள் என்ற அளவில் விற்பனையானது.

கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைவாக இருந்தநிலையிலும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படவில்லை. மத்திய, மாநில அரசுகள் வரியை உயர்த்தியதால், அதன் பயன் நுகர்வோருக்கு கிடைக்கவில்லை.
