செவ்வாய்க்கிழமை, மே 19
Shadow

ஒரிஜினலில் நிமிர்ந்து ரீமேக்கில் நிமிர மறுக்கும் நிமிர் – விமர்சனம்

ஒரிஜினலில் நிமிர்ந்து ரீமேக்கில் நிமிர மறுக்கும் நிமிர் – விமர்சனம்

மலையாளத்தில் திலீஷ் போத்தன் இயக்கத்தில் ஃபகத் ஃபாசில் நடித்து வெளிவந்த ‘மகேஷிண்ட பிரதிகாரம்’ படத்தின் ரீ – மேக் தான் நிமிர்.

உதயநிதி, பார்வதி நாயர், நமீதா பிரமோத் ஆகியோர் நடிப்பில்,
பிரியதர்ஷன் இயக்கத்தில், ரோனி ஆர் ரபீல், தர்புகா சிவா, அஜானீஷ் லோக்நாத் ஆகியோர் இசையமைப்பில் சமுத்திரக்கனி, மகேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன், சண்முகராஜா, துளசி, கஞ்சா கருப்பு ஆகிய நட்சத்திர பட்டாளத்தோடு வெளியாகியிருக்கும் படம் நிமிர்.
தென்காசியில் ஒரு சிறிய ஃபோட்டோ ஸ்டுடியோ வைத்து நடத்திக்கொண்டிருக்கும் நேஷனல் செல்வத்தை (உதயநிதி) ஒரு சிறிய சண்டையில், பலர் முன்பு அடித்துத் துவைத்துவிடுகிறான் வெள்ளையப்பன் (சமுத்திரக்கனி). அவனைத் திரும்பவும் அடித்து வீழ்த்தும்வரை தான் செருப்பு அணியப்போவதில்லை என சபதமேற்கிறான் செல்வம்.
இந்த சூழலில் போட்டோ எடுக்க வரும்  மலர்விழியைக் (நமீதா) காதலிக்க ஆரம்பிக்கிறான் செல்வம். அந்த மலர்விழியின் அண்ணன்தான் வெள்ளையப்பன் என்று பிறகு தெரியவருகிறது. சில காட்சிகளை விட்டுவிட்டால், ‘மகேஷிண்ட பிரதிகாரம்’ படம் அப்படியே காட்சிக்குக் காட்சி, வசனத்திற்கு வசனம் தமிழ்ப்படுத்தப்பட்டிருக்கிறது.
கேரளாவில் நடக்கும் கதையை, அப்படியே மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு ஊருக்குக் கொண்டுவந்துவிட்டார் பிரியதர்ஷன். ‘மகேஷிண்ட பிரதிகாரம்’ படத்தில் இடுக்கி மாவட்டத்தின் அழகு, சில காட்சிகளில் சி.பி.எம். ஊர்வலங்கள் என கேரளாவுக்கே உரிய சில அம்சங்கள் அத்தனை அழகாக இருக்கும்.
ஆனால், மலையாள இயக்குனர்கள், தமிழ்த் திரைப்படங்களை இயக்கும்போது அதிலும் குறிப்பாக ரீமேக் செய்யும் போது  இதுபோன்ற நுணுக்கமான தமிழ் அம்சங்களைப் பார்க்க முடியாது. எல்லாம் பொதுவானதாக இருக்கும். இந்தப் படத்திலும் அப்படித்தான். மற்றபடி, பெரிதாக மெனக்கெடாமல் படமெடுத்திருக்கிறார் பிரியதர்ஷன்.
படத்தில் வரும் ஒவ்வொரு சிறிய கதாபாத்திரத்திற்கும் தமிழில் நன்றாக அறிமுகமான நடிகர்களைப் பயன்படுத்தியிருக்கிறார்.  பெரிதாக ஹீரோயிசம் செய்யவாய்ப்பில்லாத ஹீரோ கேரக்டரில் உதயநிதி.  அடக்கிவாசிக்க வேண்டிய கதாநாயகன் பாத்திரம் இது. மகேஷிண்ட பிரதிகாரம் படத்தில் ஃபஹத் பாசில் செய்தகேரக்டரை அப்படியே தமிழில் செய்ய முயற்சித்து ஹீரோ பல இடங்களில் தோற்றுப் போகிறார்.
இதற்கு ஹீரோ உதயநிதியை குற்றம் சொல்ல முடியாது… ஹீரோவை வேலை வாங்கிய இயக்குனர் பிரியதர்ஷன் ஒரிஜினல் படத்தின் வெற்றிக்கு காரணமான பல காட்சிகளில் இருந்த ஸ்கோப்பை தமிழில் ஏனோ அதிக மெனக்கெடாமல் படமாக்கி ஒரிஜினல் அழகை காலி செய்திருக்கிறார்.
ஒரிஜினலில் மிக முக்கியமானதாக காணப்பட்ட கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியை தமிழில் சொதப்பி உதய நிதியை நிமிர விடாமல் செய்திருக்கிறார் இயக்குனர் பிரியதர்ஷன்.
கதாநாயகனின் தந்தையாக நடித்திருக்கும் இயக்குனர் மகேந்திரன் ஏனோ அந்த வேஷத்திற்கு பொருந்த மறுக்கிறார். எப்ப பார்த்தாலும் போட்டோவுக்கு போஸ் கொடுப்பது போன்றே உட்கார வைத்து அவரையும் இயக்குனர் வீணடித்திருக்கிறார்.  நாயகிககளான பார்வதி நாயர், நமீதா பிரமோத், குணச்சித்திர வேடத்தில் நடித்திருக்கும் எம்.எஸ். பாஸ்கர், சண்முகராஜா என எல்லோருமே பாத்திரங்களோடு பொருந்திப்போகிறார்கள்.
படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல்கள் எல்லாமே பரவாயில்லை  ரகம்.
மலையாள ஒரிஜினலை பார்த்தவர்கள் இந்த படத்தை பார்க்கும் போது கண்டிப்பாக நிமிர மாட்டார்கள். தமிழில் ரீமேக்கை முதன் முதலில் பார்க்கிறவர்களுக்கு வித்தியாசமாக தெரியும்.
ஒரிஜினலில் இருந்து நிமிர மறுக்கும் நிமிர்..!
451 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன