
காமெடி படமாம் மன்னர் வகையறா- கோடங்கி விமர்சனம்
ரொம்ப நாளைக்கு பிறகு பூபதி பாண்டியன் இயக்கம்… ரொம்ப நாளைக்கு பிறகு விமல் ஹீரோயிசம் இரண்டும் இணைந்திருக்கிற படம் மன்னர் வகையறா.
இதுல ஒரு புதுசு என்னன்னா ஹீரோயிசம் பண்ணும் விமலே படத்தையும் தயாரிச்சி தயாரிப்பாளரா புரமோட் ஆகியிருக்கார்.
ஜாதி பெருமைகள் பேசுற ஊர் கதையை எடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் பூபதிபாண்டியன்.
ஒரு வரி கதைன்னு சொல்லணும்னா ‘வக்கீல் ஆக பரிட்சை எழுதிட்டு தேர்வு முடிவுக்கு காத்திருக்கும் விமல் தன் அண்ணனின் காதலை சேர்த்து வைக்க முயற்சித்து தன் காதலை இழக்கிறார். கடைசியில் விமல் காதல் கைகூடியதா கை நழுவியதா இதுதான் கதை கரு.

நல்ல காமெடியனாக வளர்ந்து வரும் ரோபோ சங்கர் தனக்கென ஒரு பாணியை வளர்த்துக் கொண்டிருந்து திடீரென வேறு பல காமெடியன்களின் மேனரிசங்களை முயற்சித்து காமெடி பண்ண முயற்சித்து பாவம் படம் பார்க்கிறவர்களை கடுப்பேத்துகிறார் மை லார்ட்…
விமல் அலட்டிக்கொள்ளாமல் நடிப்பவர் இதிலும் அப்படியே சில இடங்களில் விமல் ஏனோ அநியாயத்துக்கு அழகாக இருக்கிறார் அது எப்படின்னு தெரியல…
ஹீரோயின் ஆனந்தி டைரக்டர் சொன்னதை செய்துட்டு போயிருக்கு… ரொம்ப வசனம் பேசி… நடிச்சி… டான்ஸ் ஆடி…. ஓவர் ஆக்டிங் பண்ணி… அப்பப்பா…

படத்துல விமல், பிரபு, ஆனந்தி, சரண்யா பொண்வண்ணன், நீலிமாராணி, ரோபோசங்கர், யோகிபாபுன்னு பல நல்ல நடிகர்கள் இருந்தாலும் அவர்களை சரியாக பயன்படுத்தவில்லையோன்னு யோசிக்கும்படியான காட்சிகள்.
காமெடி காட்சிகளில் கை தேர்ந்தவர் என தனது முந்தைய படங்களில் பேர் வாங்கிய இயக்குனர் பூபதி பாண்டியன் ஏனோ இதில் அவரின் தனித்தன்மையை இழந்திருக்கிறார்.
யோகிபாபு ஒரு காட்சியில் வந்தாலும் தனியாக ஸ்கோர் எடுத்து விட்டு போகிறார். அவர் வரும் காட்சிதான் படம் பார்க்கிறவர்களுக்கு சிரிப்பை வரவழைக்கிறது.
ஜல்லிக்கட்டில் பேர் வாங்கி பிக்பாஸ் சென்று அந்த பேரை தொலைத்த ஜூலியை ஒரு சீனில் தலைகாட்ட வைத்திருக்கிறார்கள்.
பாடல்கள் அனைத்துமே கட்டாயத்திற்கு திணிக்கப்பட்டுள்ளது.
முதல் பாதியின் நீளத்தில் நிறையவும், பின் பாதியின் நீளத்தில் கொஞ்சமும் கத்திரி போட்டால் மன்னர் வகைறா காமெடி வகையறா படங்களின் பட்டியலில் சேர்க்கப்படும்.
ஒரு படம் தொடங்கும்போது எதை சொல்ல வருகிறதோ அதை முடிக்கும்போது நெருடல் இல்லாமல் கேள்விகள் இல்லாமல் கிளைமாக்ஸ் முடிந்தால் படம் வெற்றிப்படம்… மன்னர் வகையறா எதை சொல்ல வருகிறது என்றே தெரியாமல் காமெடியிலும் சோபிக்கவில்லை… வஞ்சம் சூழ்ச்சியிலும் சேரவில்லை… குடும்ப சென்டிமெண்டிலும் இடமில்லை…
மொத்தத்தில் மன்னர் வகையறா… தயாரிப்பாளர் ஆன விமலை மன்னர் ஆக்காமல் போனாலும் சேவகன் ஆக்காமல் தப்பிக்கும்..!
கோடங்கி
