
நடிகை குஷ்பு தமிழக பெண்களின் கற்பு குறித்து கருத்து தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மேட்டூரை சேர்ந்த பா.ம.க. வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த முருகன் 2005-ம் ஆண்டு மேட்டூர் குற்றவியல் நீதிமன்றம் எண் 2-ல் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்காக 2005-ம் ஆண்டு நவம்பர் மாதம் மேட்டூர் குற்றவியல் நீதிமன்றம் எண் 2-ல் குஷ்பு நேரில் ஆஜராகி திரும்பும்போது ஒரு கும்பல் குஷ்பு கார் மீது அழுகிய முட்டை, தக்காளி போன்றவற்றை வீசியது. இதுகுறித்து மேட்டூர் தாசில்தார் அளித்த புகாரின்பேரில் மேட்டூர் போலீசார் பா.ம.கவை சேர்ந்த அறிவழகன் உள்பட 41 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு குறித்த விசாரணை மேட்டூர் குற்றவியல் நீதிமன்றம் எண் 1-ல் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கடந்த மாதம் அரசு தரப்பில் ஆஜரான அரசு வக்கீல் ஜெகநாதன், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நடிகை குஷ்பு, வழக்கு குறித்து விசாரணை செய்த அப்போதைய இன்ஸ்பெக்டரும், தற்போது துணை போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்று பணியாற்றி வரும் தினகரன் ஆகியோரை நேரில் அழைத்து விசாரணை செய்யவேண்டும் என்று மனுத்தாக்கல் செய்தார்.
இதற்கு பா.ம.கவை சேர்ந்த வக்கீல் முருகன், குஷ்பு மேட்டூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். ஆகவே குஷ்புவை நேரில் அழைக்கக்கூடாது என மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு ராஜா, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குஷ்பு மற்றும் போலீஸ் விசாரணை அதிகாரியான தினகரன் ஆகியோர் 15 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டதோடு, இந்த வழக்கு குறித்த விசாரணையை நாளைக்கு (திங்கட்கிழமை) ஒத்திவைத்து உத்தரவிட்டார்
