
‘ஒரு அடார் லவ்’ படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் வரிகள் தங்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் உள்ளதாகப் படத்தின் இயக்குநர், நடிகை பிரியா வாரியர் மீது மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஒரு அடார் லவ் என்ற மலையாளப் படத்தில் இடம்பெற்ற ஒரே பாடல் மூலம் உலகப் புகழ் பெற்றவர் இளம் நடிகை பிரியா வாரியர். அந்தப் பாடல் காட்சியில் இடம்பெற்ற பிரியா வாரியரின் கண் அசைவுகள், முக பாவனைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. அந்தப் படம் அடுத்த மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பட ரிலீசை எதிர்பார்த்து ரசிகர்களும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள். இதனால் நாளுக்கு நாள் பிரியா வாரியரின் புகழ் உயர்ந்துகொண்டே செல்கிறது. அதே சமயம் இந்தப் பாடல் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் பாடலில் இடம்பெற்றுள்ள ஒரு வரி மத உணர்வைப் புண்படுத்துவதாக உள்ளதாக ஐதராபாத் போலீசில் அந்தப் படத்தின் இயக்குநர் உமர் லுலு மற்றும் நடிகை பிரியா வாரியர் மீது புகார் செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.
இந்த நிலையில் இந்தப் பாடலுக்கு மகாராஷ்டிர மாநிலத்திலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அங்குள்ள தனியார் தொண்டு நிறுவனமான ஜன் ஜக்ரான் சமிதி மகாராஷ்டிரா என்ற அமைப்பு மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஒளரங்கபாத் போலீசில் இது தொடர்பாகப் புகார் செய்துள்ளது. அந்தப் புகாரில், “ஒரு அடார் லவ் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் வரிகள் தங்களின் மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக உள்ளது. எனவே அந்தப் படத்தின் டைரக்டர் உமர் லுலு மற்றும் பாடல் காட்சியில் நடித்த நடிகை பிரியா வாரியர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
