
சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில், இன்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தைச் சந்தித்தார் நடிகர் கமல்ஹாசன். அப்போது, அரசியலில் தனக்கு மூத்தவரான விஜயகாந்தைச் சந்தித்ததாகத் தெரிவித்தார்.
வரும் பிப்ரவரி 21ஆம் தேதியன்று தனிக்கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன். அதற்கு முன்னதாக, தனக்கு நெருக்கமான பிரபலங்களையும் அரசியல் கட்சித்தலைவர்களையும் அவர் சந்தித்து வருகிறார். கடந்த சனிக்கிழமையன்று கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவர் நல்லகண்ணுவைச் சந்தித்துப் பேசியிருந்தார். பிப்ரவரி 18 நேற்று நடிகர் ரஜினிகாந்த் மற்றும் திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்துப் பேசினார் கமல்ஹாசன்.
இந்த நிலையில், இன்று அவர் தேமுதிக தலைவர் விஜயகாந்தை, சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக அலுவலகத்தில் சந்தித்தார். அதன்பின், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் கமல்ஹாசன். அப்போது, நீண்டநாள் கழித்து விஜயகாந்தைப் பார்த்ததாகவும், அவரை நலம் விசாரித்ததாகவும் கூறினார்.
”ஒரு பேட்டியில் ரஜினியும் கமலும் சினிமாவில் மூத்தவர்கள்; ஆனால், நான் தான் அரசியலில் மூத்தவன் என்று கூறியிருந்தார் விஜயகாந்த். அந்த மூத்தவரைப் பார்த்து, நான் தொடங்கவிருக்கும் பயணத்தில் சென்று வருகிறேன் என்று சொல்வதற்காக இங்கு வந்தேன்.
இந்த அலுவலகம் கல்யாண மண்டபமாக இருந்தபோது வந்திருக்கிறேன். கட்சி அலுவலகமாக மாறியபிறகு, இப்போது ஒரு அரசியல்வாதியாக இங்கு வந்துள்ளேன். இருவரும் சந்தித்தபோது, அரசியலுக்கு நீங்கள் வரவேண்டுமென்று வாழ்த்தினார் விஜயகாந்த்” என்றார்.
திராவிட அரசியலை முன்னெடுத்துள்ளதால் வரவேற்பு கிடைக்குமா என்ற கேள்விக்கு, “வெற்றியடைந்து காட்டியதும் அது தெரியும்” என்று பதிலளித்தார் கமல்ஹாசன்.
