
அப்துல் கலாம் வீட்டில் இருந்து நாளை அரசியல் பயணத்தை தொடங்க உள்ள நடிகர் கமல் ஹாசனை, நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் இன்று சந்தித்தார். ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல் வீட்டில் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது, கமலின் அரசியல் பயணத்திற்கு சீமான் வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது சீமான் கூறியதாவது:-
படிக்கும் காலத்தில் இருந்தே நான் கமலின் ரசிகனாக இருந்தவன். நானும் கமலும் ஒரே பூமி, ஒரே மண்ணைச் சேர்ந்தவர்கள். அரசியலில் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் என்று நாளை பயணத்தை தொங்குகிறார்.
கமலின் அரசியல் பயணம் புரட்சிகரமாகவும் வெற்றிகரமாக இருக்க வாழ்த்துக்களை தெரிவித்துள்ளேன். நானும் கமலும் இணைந்து செயல்படுவோமா, இல்லையா? என்பதை காலம் தான் முடிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கமல் கூறும்போது, ‘என்னுடைய கொள்கை சீமானுக்கு தெரியாது. எனது சினிமா பற்றிதான் அவருக்குத் தெரியம். நாளை எனது கொள்கைகளை அறிவித்த பின் சீமான் தனது நிலைப்பாட்டை கூறுவார்’ என்றார்.
அ.தி.மு.க. தலைவர்களை சந்திக்காதது குறித்து கேட்டபோது, ‘அ.தி.மு.க. ஆட்சியே சரியில்லை என்கிறேன். பிறகு எப்படி அவர்களை சந்திப்பேன்?’ என்றார்.
