ஞாயிற்றுக்கிழமை, மே 31
Shadow

தினகரன் தொடங்கிய ‘அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்’

மதுரை மாவட்டம் மேலூரில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தனது புதிய அமைப்பின் பெயரை அறிவிப்பேன் என்று டி.டி.வி. தினகரன் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். அதன்படி டிடிவி. தினகரன் தலைமையில் பொதுக்கூட்டம் மதுரை மேலூரில் இன்று காலை தொடங்கியது. அப்போது தொண்டர்கள் மத்தியில் டிடிவி. தினகரன் தனது புதிய அமைப்பின் பெயரை அறிவித்தார்.
“அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்” என தனது அமைப்பின் பெயரை அறிவித்த தினகரன் தொடர்ந்து கொடியையும் அறிமுகப்படுத்தினார். அதில், கருப்பு, வெள்ளை, சிவப்பு கொடியின் நடுவில் ஜெயலலிதா படம் இடம்பெற்றுள்ளது.

மேடை முன்பு அமைக்கப்பட்டு இருந்த 100 அடி உயர கொடிக்கம்பத்தில் புதிய கொடியை டிடிவி.தினகரன் ஏற்றினார். இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் அதிகாலை முதலே மேலூரில் குவிந்தனர். இதனால் மேலூர் பேருந்து நிலையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. பொதுக்கூட்ட திடலில் கோட்டை வடிவில் நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. பொதுக்கூட்ட திடலில் அண்ணா, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா, சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரது முழுஉருவ பிரமாண்ட கட்-அவுட்கள் வைக்கப்பட்டு இருந்தன.

காலை 10:00 மணி அளவில் டி.டி.வி.தினகரன் விழா மேடைக்கு வந்தார். அவருக்கு தொண்டர்கள் செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பு கொடுத்தனர். முன்னதாக மேலூர் விழா மேடையில் வைக்கப்பட்டு இருந்த எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மலர்தூவி டி.டி.வி.தினகரன் மரியாதை செலுத்தினார்.

டிடிவி தினகரன் பேச்சு

இந்த நேரத்தில் இரட்டை இலை சின்னத்தை மீட்க வேண்டும் என்ற உறுதியையும் நாம் ஏற்க வேண்டும். அ.தி.மு.க. இயக்கத்தையும், இரட்டை இலை சின்னத்தையும் துரோகிகளிடம் இருந்து மீட்டெடுப்போம்.

4 மாதங்களாக கட்சியின் பெயர் இல்லாமல் செயல்பட்ட நாம், இனி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் செயல்படுவோம். எந்த தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெறுவோம்.

அம்மா மக்கள் முன் னேற்ற கழகம், பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோரின் மொத்த உருவமாக விளங்கும் அம்மாவின் ஆசியோடு இனி தொடர்ந்து செயல்படுவோம்.

ஏழை, எளிய மக்களின் வாழ்வை மீட்கவும், காவிரி பிரச்சினையானாலும் சரி, தமிழகத்தில் எந்த ஒரு பிரச்னையானாலும் சரி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெறுவோம்.

தமிழகத்திற்கு எதிரான எந்த ஒரு திட்டத்தையும் அனுமதிக்க மாட்டோம். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். தமிழகம் பொருளாதாரம், தொழில் துறையில் சிறந்த மாநிலமாக உருவாக, அம்மாவின் கனவை நனவாக்க அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பாடுபடும் என டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. கூறினார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் – அமைப்பின் துவக்க விழா நிகழ்வில் புகழேந்தி, தங்க தமிழ்செல்வம், வெற்றிவேல், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

813 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன