உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ மக்கள் ஈஸ்டர் திருநாளை இன்று கொண்டாடிவருகின்றனர். இந்நிலையில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசு தலைவர் வெங்கைய்யா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

ஈஸ்டர் கிறித்தவர்களின் முக்கியமான பண்டிகையாகும். இயேசு சிலுவையில் அறையப்பட்டு, அடக்கம் செய்யபட்டார். சிலுவையில் அறைந்த நாள் புனித வெள்ளியாக என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. அடக்கம் செயததில் இருந்து 3 ஆம் நாள் இயேசு உயிர்த்தெழுந்தார். அவர் உயிர்த்தெழுந்த நாளே ஈஸ்டர் திருநாளாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் இந்திய குடியரசு தலைவர், துணை குடியாரசு தலைவர், பிரதமர் ஆகியோர் மக்களுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
குடியரசு தலைவர் வாழ்த்து
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில்,
”ஈஸ்டர் திருநாளான இன்று, குடிமக்கள் அனைவருக்கும், குறிப்பாக கிறிஸ்துவ மக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இயேசு பிரான் உயிர்த்தெழுந்த இந்த புனித நாளில், அனைவரும் இதயங்களிலும் மகிழ்ச்சி மற்றும் மன அமைதி கிடைக்க பிரார்த்தனை செய்துகொள்கிறேன். கிறிஸ்துவின் செய்தி, நமது சமுதாயத்தில் சகோதரத்துவத்திற்கு ஊக்குவிப்பதாக அமையட்டும்” என்று தனது வாழ்த்துக்களை குறிப்பிட்டுள்ளார்.
துணை குடியரசு தலைவர் வாழ்த்து
துணை குடியரசு தலைவர் வெங்கைய்யா நாயுடு டுவிட்டரில்,
”சாதி, சமயம், மதம் ஆகியவற்றை பார்க்காமல் அனைத்து மனிதர்களிடமும் கருணையாக இருந்து ஈஸ்டர் திருநாளை கொண்டாடுவோம். இந்த பண்டிகை, அனைவரின் வாழ்க்கையிலும் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை கொண்டுவரட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
பிரதமர் வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில்,
”ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்கள். இந்த சிறப்புவாய்ந்த நாளில், ஒற்றுமை, அமைதி, சகோதரத்துவம் ஆகியவற்றின் பிணைப்புகள் மேலும் வலுமைபெற செய்யட்டும். இயேசுவின் சிறந்த எண்ணங்கள் மற்றும் இலட்சியங்கள் ஆகியவை சமுதாயத்தில் நேர்மைறை வேறுபாட்டினை கொண்டுவர மக்களை ஊக்குவிக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ஏசுபிரான் உயிர்த்தெழுத்த இந்த திருநாளை கொண்டாடும் கிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அமைதி, நல்லிணக்கம், சகிப்புத் தன்மையை கடைபிடித்து, சிறப்பான சமுதாயத்தை உருவாக்கிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், உலகில் அன்பும், சமாதானமும் தழைத்தோங்கிட, இயேசு பிரான் போதித்த நல்வழிப் பாதையை மனதில் நிறுத்தி மக்கள் அனைவரும் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். தியாக உணர்வோடும், சகோதரத்துவத்தோடும், மனிதநேயம் கொண்டவர்களாகவும் மக்கள் வாழ்ந்திட வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள ஈஸ்டர் வாழ்த்துச் செய்தியில், இயேசுபிரான் மக்கள் நலனுக்காக பாடுபட்டு துன்பங்களைச் சுமந்தவர் என குறிப்பிட்டுள்ளார். நியாயமும், சத்தியமும் என்றைக்கும் மரிப்பதில்லை என்பதை எடுத்துக்காட்டும் விதமாகவே இயேசுபிரானின் உயிர்த்தெழுதல் நிகழ்வு அமைந்துள்ளதாகக் கூறியுள்ள திருநாவுக்கரசர், இந்த இனிய திருநாளில் கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த திருநாளான ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் கிறித்துவ மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் வளர்ச்சியும், வளமும் அடைய வேண்டுமானால் உண்மை, நேர்மை, உழைப்பு, வெளிப்படைத் தன்மை ஆகியவற்றுக்கு உயிரூட்டப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அதற்காக கடுமையாக உழைக்க, இயேசுபிரான் உயிர்த்தெழுந்த இந்த புனித நன்னாளில் அனைத்துத் தரப்பு மக்களும் உறுதியேற்க வேண்டும் என்றும் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்
