செவ்வாய்க்கிழமை, மே 14
Shadow

அதிமுக உண்ணாவிரத போராட்டம்; எடப்பாடி & பன்னீர் பங்கேற்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி அதிமுக சார்பில் சென்னையில் நடைபெற்று வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பங்கேற்றுள்ளனர்.

காவிரி விவகாரம் தொடர்பான வழக்கில் கடந்த பிப்ரவரி 16 -ஆம் தேதி முக்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது. அந்த தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்திற்கு அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் மத்திய அரசு உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் காலம் தாழ்த்தி வந்தது. இதற்கிடையே இந்த கெடு கடந்த வியாழக்கிழமை முடிவடைந்தது. எனினும் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. மேலும் 3 மாத கால அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

இதனால், மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அதிமுக சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மாவட்டத் தலைநகரங்களில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.

சென்னை சேப்பாக்கம் விருந்தினர் இல்லம் முன்பு நடைபெறும் போராட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், அமைச்சர் ஜெயக்குமார் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா உள்ளிட்ட அதிமுகவினர் பங்கேற்றுள்ளனர். இதேபோல் ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.

அடிசினல் செய்தி

இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககாத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து 30,000 மருந்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதேபோன்று ஓட்டல்களும் திறக்கப்படவில்லை. திருச்சி மாவட்டத்தில் 90,000 கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் 100 கோடிக்கும் அதிகமான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயத்தை நம்பி தான் வணிகர்கள் இருக்கிறார்கள், அதனால் விவசாயிகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு தருவோம் என்று திருச்சி மாவட்ட வணிகர்கள் தெரிவித்துள்ளனர்

235 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன