திங்கட்கிழமை, மே 13
Shadow

காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுமா? – விவசாயிகள் எதிர்பார்ப்பு

மேட்டூர் அணை மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், கரூர், நாகப்பட்டணம், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர் ஆகிய 12 மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 28-ந் தேதி வரை காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியாக இருந்தால் தான் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும். இதேபோல் நீர்மட்டம் 90 அடிக்கு குறைவாக இருந்தாலும் அணைக்கு வரும் நீர்வரத்து திருப்திகரமாக இருந்தால் மட்டுமே தண்ணீர் திறந்துவிடப்படும்.

ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக பருவ மழை சரிவர பெய்யாததாலும் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீர் திறந்துவிடப்படாததாலும் குறிப்பிட்ட காலத்தில் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடியாமல் போய்விட்டது.

காலதாமதமாக தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த ஆண்டும் இதேநிலை தான் நீடிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகி உள்ளன.

தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 34.61 அடியாக உள்ளது. குறித்த காலத்தில் பருவ மழை தொடங்கினாலும் கர்நாடகத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி உபரி நீரை வெளியேற்றினால் மட்டுமே காவிரியில் தண்ணீர் வரும்.

ஆனால் ஒரு மாத காலத்தில் இதற்கான சூழ்நிலை உருவாகுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான வழக்கில் தமிழகத்திற்கு மே 8-ந் தேதிக்குள் 4 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு கடந்த வாரம் உத்தரவிட்டது. இந்த காலக்கெடு நாளையுடன் முடிகிறது.

கர்நாடக அணைகளில் தண்ணீர் இல்லாததால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடகம் கை விரித்தது. தற்போது கர்நாடகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் அங்குள்ள அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு.

இதன் காரணமாக அடுத்த மாதம் (ஜூன்) 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 

இதனால் இந்த ஆண்டும் காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயம் முற்றிலும் பாதிக்கும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

ஒருவேளை இந்த மாதம் முன்கூட்டியே பருவ மழை தொடங்கி கனமழை கொட்டி கர்நாடக அணைகள் நிரம்பி தண்ணீர் திறந்தால் மட்டுமே அடுத்த மாதம் மேட்டூர் அணையில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவதற்கான சாதகமான நிலை உருவாகும்.

தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் லேசான மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் 454 கன அடியாக இருந்து நீர்வரத்து நேற்று 674 கன அடியாக அதிகரித்தது. இன்று 514 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. தற்போது மேட்டூர் அணையில் உள்ள நீர் இருப்பு குடிநீருக்காகவும், மீன்களை பாதுகாக்கவுமே போதுமானதாக உள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டு குறித்த காலத்தில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

422 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன