ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28
Shadow

திமுக தலைவராகி பொன்விழா காணும் கலைஞர் நலம் பெறவேண்டும் – கருணாஸ் MLA அறிக்கை

முக்குலத்தோர் புலிப்படையின் தலைவர், திருவாடனை தொகுதி எம்.எல் ஏ. கருணாஸ் அறிக்கை

தனது இளம் வயது முதல் தமிழ் இனம், தமிழ் மொழி என நெஞ்சில் இலட்சிய உறுதியோடு அயராது உழைத்த தமிழக அரசியலின் முன்னோடி எங்கள் மரியாதைக்குரிய பெருமகன் கலைஞர் கருணாநிதி அவர்கள். பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணாவால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தவர். பாசத்தோடு ‘தம்பி’ என அண்ணா அவரை அழைக்கும் உரிமை பெற்றவர். எனக்கு பின் என் தம்பிதான் திமுகவை வழிநடத்துவான் என வெளிப்படையாக பொதுமேடைகளில் அண்ணா பேசும் அளவுக்கும் அவருக்கு நம்பிக்கையை உருவாக்கியவர் . அதுமட்டுமின்றி இன்றோ – நாளையே தமிழக அரசியல் வரலாற்றின் முதற் பெரும் புள்ளியின் தொடக்கப்புள்ளி கலைஞர் கருணாநிதி என்றால் அது மிகையாது.

திமுகவின் முதல் தலைவராக 1969ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி பொறுப்பேற்றார் கருணாநிதி. எனவே திமுக தலைவராக 50ம் ஆண்டில் அவர் 27.7.2018 இன்று அடியெடுத்து வைத்து தலைவர் பொறுப்பில் பொன்விழா காணுகிறார். இந்த வரலாற்றுப் பேறு வாய்க்கப் பெறுவர்கள் அரிதானவர்கள். அதில் அதிசயமாக திகழ்கிறார் மரியாதைக்குரிய பெருந்தகை கலைஞர் அவர்கள்.

வயது முதிர்வு மற்றும் உடல் நிலை காரணமாக கடந்த 2 வருடங்களாக ஓய்வில் இருப்பதால் தீவிர அரசியலில் இருந்து அவர் ஒதுங்கி இருக்கிறார். அவரது தொண்டையில் ட்ரக்கியாஸ்டமி கருவி பொருத்தப்பட்டிருப்பதால் பேச முடியாத நிலையில் அவர் இருக்கிறார். அவ்வப்போது, சென்னை காவேரி மருத்துவ மனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அவர் வந்து செல்கிறார்.

கடந்த 18ம் தேதி காவேரி மருத்துவமனைக்கு வந்தார். ட்ரக்கியாஸ்டமி சிகிச்சையில் பழைய குழாய் அகற்றப்பட்டு 4வது முறையாக அவருக்கு புதிய குழாய் பொருத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக அவருக்கு காய்ச்சல் இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. மருத்துவர்களும், செவிலியர்களும் கோபாலபுரம் இல்லம் சென்று அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அவ்வபோது தலைவர் கலைஞரின் உடல் நலம் குறித்து அறிக்கைகள் அளிக்கிறார். ஆகவே தலைவர் நலமாக இருக்கிறார் என்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறோம். எங்களின் அரசியலின் அரிச்சுவடாய் திகழும் கலைஞர் கருணாநிதி அவர்கள் பூரண நலமடைந்து விரைவில் மக்கள் முன் தோன்றி “என் உயிரினும் மேலானா உடன்பிறப்புக்களே” என்று இனப்பற்றோடு கர்ச்சிக்கும் குரலை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்! அய்யா கலைஞர் அவர்கள் நலம் பெற எல்லாம் வல்ல இயற்கைத்தாயை வேண்டுகிறேன்.

இவ்வாறு தனது அறிக்கையில் எம்.எல்.ஏ., கருணாஸ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

254 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன