செவ்வாய்க்கிழமை, மே 14
Shadow

ஷூட்டிங் ஸ்பாட்டுக்கா கோர்ட் வரும் இயக்குனர் ஷங்கரை கண்டித்த நீதிமன்றம்..!

 

நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா உட்பட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘எந்திரன்’. இந்த திரைப்படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ளார்.  இந்த படத்தின் கதை தன்னுடையது என்று எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் என்பவர் கடந்த 2010-ம் ஆண்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘1996-ம் ஆண்டு ‘ஜூகிபா’ என்ற தலைப்பில் உதயம் என்ற பத்திரிகையில் தொடர் கதை எழுதினேன். அந்த கதையை  என்னிடம் அனுமதி பெறாமல், இயக்குனர் ஷங்கர், ‘எந்திரன்’ என்ற  தலைப்பில் படமாக எடுத்துள்ளனர். எனவே, எனக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு கடந்த 8 ஆண்டுகளாக ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி வி.பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இயக்குனர் ஷங்கர் தன் தரப்பில் உள்ள ஆதார ஆவணங்களை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள ‘மாஸ்டர்’ கோர்ட்டில் தாக்கல் செய்து, ஏப்ரல் 27-ந்தேதிக்கு முன்பாக சாட்சியம் அளிக்கவேண்டும்’ என்று ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.

ஆனால், இந்த சாட்சியம் அளிக்க நேரில் ஆஜராகாமல், தன்னுடைய உதவி இயக்குனர் ஒருவரை ‘மாஸ்டர்’ கோர்ட்டுக்கு ஷங்கர் அனுப்பி வைத்தார்.

இதற்கு மனுதாரர் தரப்பில் கடும்  எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு கதை தொடர்பானது என்பதால், ஷங்கர் தான் ஆஜராகவேண்டும் என்று கூறினர். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘எதற்காக சாட்சியம் அளிக்க இயக்குனர் ஷங்கர் ஆஜராகவில்லை?  உதவி இயக்குனரை ஏன் அனுப்பினார்? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு ஷங்கர் தரப்பு வக்கீல், ‘அவர் படப்பிடிப்பில் உள்ளார்’ என்று பதில் அளித்தார்.

‘அதற்காக படப்பிடிப்பு நடைபெறும் இடத்துக்கு, நீதிமன்றத்தை கொண்டு போக முடியுமா?’ என்று நீதிபதி கேட்டார்.

பின்னர், ‘வருகிற ஆகஸ்டு 1-ந்தேதி மாஸ்டர் கோர்ட்டில் ஷங்கர் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். அவர் சாட்சியம் அளித்ததும், மனுதாரர் தரப்பு வக்கீல், அவரை குறுக்கு விசாரணை செய்யவேண்டும். இவை அனைத்தையும் ஆகஸ்டு 8-ந்தேதிக்குள் முடிக்க வேண்டும்’ என்று நீதிபதி உத்தரவிட்டார்.

255 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன