வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

ஆண் தேவதை – விமர்சனம்

 

ஆண் தேவதை விமர்சனம்

தாமிரா இயக்கத்தில் சமுத்திரகனி நடிப்பில் வெளியாகியிருக்கிற படம் ஆண்தேவதை.
படத்தலைப்பே மிக கவிதையாக இருப்பதால் படமும் அப்படியே ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

கை நிறைய சம்பாதிக்கும் ஐடி நிறுவன ஊழியர்களின் உண்மையான வாழ்க்கையை வெளிச்சம் போட நினைத்திருக்கிறார் இயக்குனர் தாமிரா.
பணமும், பகட்டும், மேலைநாட்டு கலாச்சாரமும்தான் வாழ்க்கையின் அங்கீகாரம் என நினைக்கிற கதாநாயகி… சமூக அக்கறை, குழந்தைகள், அளவான வருமானம், அமைதியான வாழ்க்கை, மகிழ்ச்சியான குடும்பம் என வாழ நினைக்கும் கதாநாயகன்.
இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டால் அவர்கள் வாழ்க்கை எப்படி அமைகிறது எப்படி அவர்கள் அமைத்துக் கொள்கிறார்கள் என்பதையும் இன்றைய சூழலை எடுத்து காட்டுகிறார் இயக்குனர்.

மிக யதார்த்தமான கதையை சமூகத்தில் நடக்கும் அவலத்தை அதே சமூகத்திற்கு எச்சரிக்கை மணியாக செல்ல நினைத்த இயக்குனர் தாமிராவுக்கு பாராட்டு சொல்லும் அதே நேரம், கசப்பு மருந்தாக இருந்தாலும் இனிப்பான தேன் தடவி கொடுத்தால்தான் மருந்து வேலை செய்யும் என்பதை ஏனோ இயக்குனர் தாமிரா மறந்து விட்டிருக்கிறார்.

கதையிலும், காட்சிகளிலும் கவனம் வைத்த இயக்குனர் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் வைத்திருக்க வேண்டும்.
நல்ல நடிகர் சமுத்திரகனி அவருக்கு இன்னமும் கதையிலும், நடிப்பிலும் அழுத்தம் கொடுத்திருக்கலாம். ஆண் தேவதை என்கிற அந்த வார்த்தைக்கு இன்னமும் அழுத்தமான காட்சிகள் நெகிழ்ச்சியான நிகழ்வுகள் படமாக்கப்பட்டிருந்தால் ஆண்தேவதை கொண்டாடப்பட்டிருப்பான்.


கதாநாயகி ரம்யாபாண்டியன், அவரது தோழி சுஜாவருணி, சமுத்திரகனியின் குழந்தைகளாக நடித்திருக்கிற மோனிஷா, கவின்பூபதி என படத்தில் வருகிற ஒவ்வொரு கேரக்டரும் அவர்களுக்கு கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள். இவர்களில் அதிகம் மார்க் வாங்குவது சமுத்திரகனியை விட கதாநாயகி ரம்யாபாண்டியன்தான். எனக்கு யாரும் இல்லை என்று ஆரம்பத்தில் அனுதாபத்தை வாங்குவதிலும் சரி… கல்யாணத்திற்கு பிறகு ஐடி வேலையில் இருக்கிற வேலை பளு குடும்ப சுமை குழந்தைகள் வளர்ப்பு கணவன் மனைவி சண்டை பிரிவு தனிமை மேல்தட்டு வர்க மோகம் என எல்லாவற்றிலும் சமுத்திரகனியை மிஞ்சுகிறார் ரம்யாபாண்டியன்.
குடும்ப கஷ்டத்தை தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளும் ஐடி நிறுவன அதிகாரி அபிஷேக், மனைவி மீதான சந்தேக பிராணியான இளவரசு, வீடுகளை வாடகைக்கு விடும் புல்லட் ராவுத்தராக வரும் ராதாரவி, காளிவெங்கட், வறட்டு கவுரவத்திற்கு கடன் வாங்கி வாழ்க்கை நடத்தும் சுஜாவருணி என பலரும் இன்றைய யதார்த்த வாழ்க்கையில் உள்ள பல நிஜங்களை தோலுரித்து காட்டுகிறார்கள்.
விஜய்மில்டனின் ஒளிப்பதிவில் மேல்தட்டு வாழ்க்கையும், மிடில்கிளாஸ் வாழ்க்கையும் கண்சிமிட்டுகிறது. தேவையான இடங்களில் ஜிப்ரான் இசை படத்துக்கு பலம் சேர்க்கிறது.
மொத்தத்தில் திரைக்கதையில் மட்டும் இயக்குனர் தாமிரா இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் ஆண்தேவதையை கொண்டாடியிருப்பார்கள் வணிக ரீதியாகவும்…!

கோடங்கி

715 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன