Tuesday, September 22
Shadow

ஆளுநர் மாளிகையின் கன்னத்தில் விழுந்த அறை – வைகோ

171 Views

ஆளுநர் மாளிகையின் கன்னத்தில் விழுந்த அறை

செய்தியாளர்களிடம் வைகோ

சங்கொலி வாரப் பத்திரிகை ஆசிரியர் என்ற முறையில் நானும் பத்திரிகையாளர் என்பதால் உங்களிடம் பேசுகிறேன்.

பத்திரிகைத் துறையை மிரட்டி அச்சுறுத்தி பயமுறுத்தி ஏழு வருடம் சிறைக்கு அனுப்பக் கூடிய பிரிவுகளில் வழக்கு போட்டு ஜனநாயகத்தின் குரல்வளையை நெறித்து பேச்சுரிமை, கருத்துரிமையைப் பறித்து விடலாம் என்று ஆளுநர் மாளிகை திட்டமிட்டு சுயமரியாதையை இழந்து விட்ட முதுகெலும்பற்ற அ.தி.மு.க. அரசின் காவல்துறையைப் பயன்படுத்தி நக்கீரன் வார இதழின் ஆசிரியர் கோபால் அவர்கள் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் 124 ஆவது பிரிவின் கீழ் ஆளுநரையோ குடியரசுத் தலைவரையோ வேலை செய்ய விடாமல் தடுக்கின்ற சட்டப்பிரிவு 124-இன்படி ஏழு வருடம் சிறைக்கு அனுப்பலாம். அந்தப் பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் இருக்கின்ற ஒரு அதிகாரி டெபுடி செக்ரட்டரி என்று சொல்கிறார்கள். அவர் கொடுத்த புகhரின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஆனால், சென்னைப் பெருநகர 13-ஆவது நீதிமன்றத்தினுடைய நடுவர் மாண்பமை நீதிபதி கோபிநாத் அவர்கள் இந்தச் சட்டப் பிரிவு 124-இன்கீழ் கைது செய்வதற்கோ அல்லது நீதிமன்றக் காவலில் வைப்பதற்கோ எந்த முகாந்திரமும் இல்லை. ஏப்ரல் மாதத்தில் நக்கீரன் பத்திரிகையில் வந்த ஒரு கட்டுரைக்காக அவர்கள் அக்டோபர் மாதத்திலே வந்து கைது செய்திருக்கிறார்கள் என்பதால் நீதிபதி ஒப்புக் கொள்ளவில்லை.

இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால் ஆளுநர் மாளிகை தமிழக அரசை, காவல்துறையைப் பயன்படுத்தி பொய்வழக்கு போட்டு சிறைக்கு அனுப்ப முயற்சித்திருப்பது கண்டனத்துக்கு உரிய செயல். இது ஆளுநர் மாளிகையின் கன்னத்தில் விழுந்த அறை. தமிழ்நாடு அரசு ஆளுநர் என்ன சொன்னாலும் ஆட்டம் போடுவார்கள். மத்திய அரசு சொன்னாலும் சரி, ஆளுநர் சொன்னாலும் சரி. ஆனால் ஆளுநர் அத்துமீறி எல்லைமீறி ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று அதிகாரிகளைக் கூப்பிட்டு ஆய்வு செய்வதும் போட்டி அரசாங்கத்தை நடத்துவதைப் போல செயல்படுகிறார்.

கூண்டில் அடைக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட வேண்டிய ஒரு நபரை, காவல்துறையை நீதித்துறையை மிக இழிவாக கேவலமாகப் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளரான ஒருவரை ராஜ்பவனுக்கு வரவழைத்து சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்து அவருக்கு தேநீர் விருந்து கொடுத்து ஒரு மணி நேரம் பேசி அனுப்பினால் இவர் பக்கம் காவல்துறை போகக் கூடாது என்பதற்கhக ஆளுநரின் செயல் இது. இப்போது திடீரென்று பல்கலைக் கழகத் துணை வேந்தர்கள் நியமனத்தில் ஊழல்; பணம் விளையாடியது என்று கூறுகிறார். ஆளுநர்தான் பல்கலைக் கழகங்களுக்கு வேந்தர் ஆவார். இன்னின்ன பொறுப்புகளுக்குப் பணம் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்பதைக் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பொத்தாம்பொதுவாகக் குற்றச்சாட்டு வைக்கக் கூடாது. அமைச்சர்கள் குற்றவாளியா? பதவியிலிருந்து நீக்க வேண்டும். இதைச் செய்வதற்குப் பதிலாக சந்துமுனையில் சிந்து பாடுவதைப் போல பேசிவிட்டு இன்றைக்கு நக்கீரன் கோபாலை விமான நிலையத்திற்குள் நுழைந்து புனே புறப்பட இருந்தவரை கைது செய்ய வைத்தாரே ஆளுநர். இதற்குதான் ஆளுநர் மாளிகையின் கன்னத்தில் விழுந்த அறை. ஆளுநருக்குச் சொல்லுகிறேன். பன்வாரிலால் புரோகித் அவர்களே! நீங்கள் நினைத்தால் என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைக்காதீர்கள்.

எனக்கு இன்னொரு சந்ததேகமும் இருக்கிறது. திருமுருகன் காந்தியின் வழக்கில் நடந்ததைப் போல வேறு புதிய இரண்டு மூன்று பிரிவுகளில் வழக்கு போட்டு நக்கீரன் கோபாலைச் சிறையில் தள்ளலாம் என்று நினைத்தீர்களேயானால் நாசமாகப் போவீர்கள். விநாசகால விபரீத புத்தி என்று தமிழக அரசுக்குச் சொல்லிக் கொள்கிறேன். தமிழ்நாட்டின் நீதி நிலைக்கிறது; நீதி தழைக்கிறது என்பதில் எனக்கு மகிழ்ச்சி. பத்திரிகைத் துறைக்கு ஊடகத் துறைக்குப் பாதுகாப்பு வேண்டும். அரசாங்கம் நினைத்தால் எந்த பத்திரிகையாளரையோ ஊடகத் துறையாளரையோ கைது செய்யலாம் என்றால் அனுமதிக்க மாட்டோம்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × two =