வெள்ளிக்கிழமை, மார்ச் 29
Shadow

தமிழ் சினிமாவின் தப்பான படம் ‘வடசென்னை’ – கோடங்கி விமர்சனம்

தமிழ் சினிமாவின் தப்பா படம் ‘வடசென்னை’ -கோடங்கி விமர்சனம்

…த்தா… மக்கு… தி… கொம்மால… என காதுகளில் எப்போதுமே ரீங்கரிக்கும் ஆபாச அருவறுப்பான வசனங்களை சபை நாகரீகமே இல்லாமல் ஒரு சைக்கோ போல ரசித்து ரசித்து 3 ஆண்டுகளாக எடுத்திருக்கிறார் தமிழ் சினிமாவை உச்சாணிக்கு கொண்டு செல்ல விரும்புவதாக சொல்லிக்கொண்டு அச்சாணியை அடிப்புறத்தில் சொருகிக் கொண்டிருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன்.
வடசென்னை…. தனுஷ் நடிப்பில் இந்த பெயரை வைத்து படம் அறிவித்ததுமே கண்டிப்பாக வெட்டுகுத்து ரவுடியிச கலாச்சாரத்தை கொடுக்கிற படமாக இருக்கும் என்று எல்லாருமே எதிர்பார்த்திருப்பார்கள். படமும் அதற்கு கொஞ்சமும் ஏமாற்றத்தை கொடுக்காமல் ரவுடியிசத்தை தூக்கிப்பிடித்து கொடி நாட்ட புறப்பட்டிருக்கிறது.

வடசென்னை என்றாலே அங்கே வசிக்கிற மக்கள் எப்போதுமே அழுக்கானவர்களாகத்தான் இருப்பார்கள்… அவர்களின் அன்றாட வாழ்க்கையில் ஆபாச வார்த்தைகளும், அருவறுப்பான செயல்களும் மட்டுமே சொந்தமாக இருக்கும் என்று எந்த முட்டாள் இந்த இயக்குனர் அறிவாளி வெற்றிமாறனுக்கு சொன்னது என்று தெரியவில்லை.
அந்தளவுக்கு காட்சிக்கு காட்சி வசனங்களிம், செய்கைகளிலும் அருவறுப்பை மட்டுமே நிறுத்தியிருக்கிறார் இயக்குனர்.

சரி வடசென்னை கதை என்ன சொல்கிறது…

ஒரு கொலையில் தொடங்குகிறது கதை… செத்தது யார் என்பது பின்னாடி பிளாஷ்பேக்கில் சொல்கிறார்கள்… கொன்றது சமுத்திரகனி, கிஷோர் உட்பட 4 பேர். அந்த கொலையில் சமுத்திரகனி உள்ளே போகிறார். கிஷோர் வெளியில் இருந்து அவரை ஜாமீனில் எடுக்காமல் தாமதபடுத்துகிறார். இதனால் இரண்டு அணியாக மாறுகிறார்கள். இந்த இரண்டு அணியும் அடிக்கடி மோதிக்கொள்கிறார்கள். இதற்கிடையில் திடீரென ஒரு அடிதடி வழக்கில் ஜெயிலுக்குள் அடைக்கப்படுகிறார் தனுஷ்.
சிறந்த கேரம் விளையாட்டு வீரரான தனுஷ் ஜெயிலுக்குள் கிஷோர் அன்பை பெறுகிறார்.

கிஷோரை கொல்ல பலமுறை முயன்றும் தோல்வியே கிடைக்கிறது. இந்த சூழலில் ஜெயிலுக்குள் கேரம் போட்டி நடத்தப்படுகிறது. அங்கே நடக்கும் அதிரடியால் கிஷோர் குத்தப்படுகிறார்… அவரை யார் குத்தியது… படம் தொடங்கும்போது கொலை செய்யப்பட்டது யார் என்பதை எல்லாம் கிளைமாக்சுக்கு முன்பு சொல்கிறார் இயக்குனர்.
1987ல் கதை தொடங்குவதாக சொல்லிவிட்டு திடீரென எம்ஜிஆர் செத்துப்போயிட்டார்னு காட்சி வைக்கிறார்கள்… எம்ஜிஆர் உடல் அருகே இருந்து ஜெயலலிதாவை தள்ளிவிட்ட காட்சியை எல்லாம் காட்டுகிறார்கள்… திடீரென 91ல் ராஜீவ்காந்தியை சுட்டுட்டாங்கப்பான்னு குடிசைவாசிகள் கடைகளில் புகுந்து திருடுகிறார்கள்… கையில் கிடைத்த பொருட்களை எடுத்துக் கொண்டு குடிசைகளுக்கு திரும்புகிறார்கள்.

காலையில் போலீஸ் வந்து அந்த பொருட்களை திரும்ப வாங்கிச் செல்கிறது. ராஜீவ்காந்தி படுகொலை அன்று வடசென்னையில் உள்ள குடிசைவாசிகள் எல்லாம் திருடர்களாக மாறினார்கள் என்று சொல்லாமல் சொன்னாரா இயக்குனர் வெற்றிமாறன் என்ற கமெண்ட்டும் படம்பார்க்கிற ரசிகர்கள் மத்தியில் எழாமல் இல்லை.

தனுஷ் மீது அப்படி என்ன கோபமோ தெரியவில்லை ஐஸ்வர்யாராஜேஷை விட்டு மக்கு…… என்று நா கூசும் வார்த்தையை மிக அனாயசமாக சொல்ல வைக்கிறார். அதோடு பல இடங்களில் …. மவனே என்று அவர் பிறப்பையே கேலியாக்குகிறார் இயக்குனர் வெற்றிமாறன். இப்படி காது கூசும் வார்த்தைகளும், நா கூசும் வார்த்தைகளும்தான் வடசென்னையின் அடையாளமா மிஸ்டர் வெற்றிமாறன்…
அதிலும் அந்த பகுதி பெண்ணாக வரும் ஐஸ்வர்யாராஜேஷ் பார்த்ததும் முத்தம் கொடுத்துக் கொள்வதும், கல்யாணத்துக்கு முன்பே எல்லாவற்றையும் அனுபவித்தவள் போலவும் காட்டுவதால் வடசென்னை பெண்கள் எல்லாரும் இப்படிபட்டவர்கள்தான் என்ற பிம்பத்தை ஏற்படுத்துகிறாரா வெற்றி மாறன் என்ற சந்தேகமும் ஏற்படாமல் இல்லை…

ஜெயில் காட்சிகளில் வடசென்னை மக்கள் பெரும்பாலும் சமூகவிரோத செய்கைகளில் மட்டுமே தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருப்பார்கள் என்பதுபோலவும், பவுடர் ஓட்டுவது… கஞ்சா கடத்துவது… கொலை செய்வது… மட்டுமே இவர்களின் தொழில் என்பதுபோல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி யாரை திருப்திபடுத்த ‘வடசென்னை’ பெயரை பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன்.

சினிமாவுக்கு வெளியில் சமூகபோராளியாக காட்டிக் கொள்ளும் சமுத்திரகனியின் வடசென்னை ரவுடி கதாபாத்திரம் மிக கேவலமான ஒன்றாகியிருக்கிறது. தான் மிகவும் மதித்த ஒருவரின் மனைவியை அவரை கொலை செய்துவிட்டு தான் சேர்த்துக் கொள்வது என்பது எத்தனை அருவறுப்பான செயல்.

கிஷோரையும், டேனியல்பாலாஜியையும் வில்லனாகவே பார்த்து பழகியதால் அவர்களின் செயல்களில் பெரிய மாற்றம் இல்லை.

இந்த தப்பான படத்தில் ஒரே ஒரு ஆறுதல் அமீர் கதாபாத்திரம் மட்டுமே… தனது மக்களின் வாழ்வாதாரத்திற்கு தன் உயிரையும் கொடுக்க போராடுகிற தலைவனின் கதாபாத்திரம். அந்த பணியை அமீர் மிக சிறப்பாக செய்திருக்கிறார். போலீஸ் அதிகாரியை அடித்து துவைத்து எடுக்கும் காட்சிகளில் நிஜதலைவனின் தோற்றத்தை எடுத்துக் கொள்கிறார். அதேபோலவே ஆண்ட்ரியாவுடன் நடுக்கடலில் அமீர் பண்ணும் ரொமான்ஸ்… டாப்லெஸ் ஆண்ட்ரியா காட்சிகள் படுசூடானவை… அத்தனை கிளாமராக நடித்து விட்டு அதன்பிறகு அவர் எடுக்கும் நடவடிக்கைகள் படுபயங்கரம்.

வழக்கம்போல சதாரண சில்வண்டாக சுற்றித்திரியும் தனுஷ் திடீரென தாதாவாக மாறி ஊர் நல்லதுக்கு போராடும் புதிய தலைவனாக மாறுவதெல்லாம் திட்டமிட்ட ஹீரோயிசம்… ஒருமுறை ‘வடசென்னை’ படம் எனது கனவுபடம் என்று தனுஷ் சொல்லியிருந்தார் இந்த கேவலமான தப்பான படத்தைத்தான் கனவு படம் என்று சொன்னாரா தனுஷ் என்கிறார்கள் நல்ல சினிமாவை நேசிக்கும் ரசிகர்கள்.

மொத்தத்தில் வடசென்னை படம் இந்த சமூகத்திற்கு மிக தப்பான கருத்தை… ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களை மிக மட்டமாக சித்தரித்து தவறான கண்ணோட்டத்தோடு எடுக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம், படம் முடியும்போது வடசென்னை பார்ட் 2 வரும் என்றும் அறிவிக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன். பார்ட் ஒன்றின் தவறுகளை பார்ட் 2 எடுக்கும்போதாவது திருத்திக் கொண்டு ஒரு சினிமா என்பது எல்லாருக்குமான படம் அதன் மூலம் இந்த சமூகத்திற்கு நாம் என்ன சொல்ல வருகிறோம் என்பதை இயக்குனர் வெற்றிமாறன் புரிந்து கொண்டு படத்தை இயக்கினால் அவருக்கு நலம்..!

தயாரிப்பாளர் தனுஷ்… இந்த சினிமாவில் தனக்கென என்ன மரியாதை இருக்கிறது என்பதையே தெரிந்து கொள்ளாமல் இன்னமும் ஆபாசத்தையும், அருவறுப்பையும், அடுத்தவர் பெண்ணாட்டியை அபகரிக்கும் கதைகளை ஆதரிக்கும் வயசுகோளாறு பையனாகவே இருக்கிறார். இந்த போக்கை மாற்றிக் கொண்டு இந்த சினிமாவுக்கு நல்ல கதைகளை படம் எடுக்க முயற்சித்தால் உங்கள் பேர் விளங்கும்… இல்லனா வௌங்கிடும்..!

ஐஸ்வர்யாராஜேஷ் குப்பத்து பெண்ணாக நடித்திருக்கிறார். அவரும் தனுஷூம் சந்திக்கும் முதல் காட்சியில் தொடங்கும் ஆபாசம் படம் முழுக்க அள்ளித் தெளிக்கிறது… லிப்லாக் காட்சிகளில் கமலை மிஞ்சுகிறார் ஐஸ்வர்யாராஜேஷ். அதேநேரம், சகட்டுமேனிக்கு அசிங்கமான வார்த்தைகளை பேசி ஷாக் கொடுக்கிறார். இனி ஐஸ்வர்யாராஜேஷ் போகுமிடங்களில் எல்லாம் ‘மக்கு…கூ’ கோஷம் கேட்டாலும் ஆச்சர்யமில்லை… என்னதான் இயக்குனர் பேச சொல்லியிருந்தாலும் இந்தமாதிரியான ஆபாச வார்த்தைகளை பேசாமல் தவிர்த்திருக்கலாம் ஐஸ்வர்யா.

தமிழில் சென்சார்துறை என்று ஒன்று இருக்கிறதா என்ற சந்தேகத்தை வடசென்னை படம் ஏற்படுத்துகிறது… நாய் குறுக்கே போனாலோ… காக்காய் பறந்தாலோ அந்த பட தயாரிப்பாளரையும், இயக்குனரையும் படுத்தி எடுக்கிற சென்சார் அதிகாரிகள் இந்த படத்தில் மட்டும் வார்த்தைக்கு வார்த்தை மிக ஆபாசத்தை அவிழ்த்து விட அனுமதித்திருப்பதும்… கண்டதுண்டமாக வெட்டிக் கொல்லும் காட்சிகளை அனுமதித்திருப்பதும் சென்சார் என்று ஒன்று இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது… அதிலும் குறிப்பாக சென்சார் அதிகாரி ஒரு பெண் அவர் எப்படி இத்தனை கேவலமான டயலாக்குகளை அனுமதித்தார் என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது.

வடசென்னை படத்தை குறித்து ஒரு வரியில் சொல்ல வேண்டுமானால் ‘சமூகத்தில் நல்ல கருத்துக்களை சொல்லும் நல்ல இயக்குனர்கள் என பேர் எடுத்தவர்கள் ஒன்று சேர்ந்து சமூகத்துக்கு ரொம்ப தப்பான படத்தை கொடுத்திருக்கிறார்கள்’

– கோடங்கி

547 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன